(தலைவன் பொருள்வயிற் பிரிய எண்ணியதையறிந்து வருந்தியதலைவியை நோக்கி, "அவர் கொடுமையையுடைய பாலை நிலத்தைக்கடந்து செல்வரோ? செல்லார்" என்று தோழி கூறியது.)
 331.   
நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை 
    
ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று 
    
கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும் 
    
கடுங்கண் யானைக் கான நீந்தி 
5
இறப்பர்கொல் வாழி தோழி நறுவடிப் 
    
பைங்கான் மாஅத் தந்தளி ரன்ன 
    
நன்மா மேனி பசப்ப 
    
நம்மினுஞ் சிறந்த வரும்பொரு டரற்கே. 

என்பது செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழிசொல்லியது.

வாடாப் பிரமந்தன் (பி-ம். வாடாப் பிரபந்தன், பிரமாந்தன்.)

    (பி-ம்) 4. ‘யானைகான’ 6. ‘பைங்கண் மா அத்’.

    (ப-ரை.) தோழி--, நறுவடி - நறிய வடுவையும், பசுகால் மாஅத்து அம் தளிர் அன்ன - பசிய அடியையுமுடையமாமரத்தினது அழகிய தளிரை ஒத்த, நல்மா மேனி பசப்ப -நல்ல மாமைநிறம் பசலையையடைய, நம்மினும் சிறந்தஅருபொருள் தரற்கு - நம்மைக் காட்டிலும் தலைவருக்குச்சிறந்ததாகத் தோற்றுகின்ற பொருளைக் கொணரும்பொருட்டு, நெடுகழை திரங்கிய நீர் இல் அரு இடை - நெடியமூங்கில் உலர்ந்த நீர் இல்லாத அரிய இடத்தில், ஆறுசெல்வம்பலர் தொலைய - வழியிற் போகும் பிரயாணிகள்அழியும்படி, மாறு நின்று - எதிராக நின்று, கொடுசிலைமறவர் - வளைந்த வில்லையுடைய மறச்சாதியார், கடறுகூட்டுண்ணும் - காட்டைக் கொள்ளையிடும், கடுகண் யானைகானம் நீந்தி - தறுகண்மையையுடைய யானைகளையுடையகாட்டைக் கடந்து, இறப்பர் கொல் - செல்வாரோ?

     (முடிபு) தோழி, பொருள்தரற்கு, மேனி பசப்ப, கானம் நீந்தி இறப்பர்கொல்?

     (கருத்து) தலைவர் பொருள்வயிற் பிரிதல் உறுதியன்று.

     (வி-ரை.) தலைவர் செல்ல எண்ணிய பாலைநிலம் கடுங்கண் மறவரை யுடையதாதலின் அங்கே போகா ரென்னும் நினைவினளாகிய தோழி அப்பாலையின் கொடுமையை விரித்துரைத்தாள். கடறு கூட்டுண்ணுத லாவது வழிப்போவார்பால் உள்ள பொருள்களை வௌவுதல். கடத்தற் கரிய பரப்பினதாதலின் நீந்தி யென்றாள்.

     மாமேனி - மாமைநிறம்;

  
“மாநிறமுங் கொண்டாரிங்கே”        (திவ். திருநெடுந்தாண்டகம், 23.)  

    தலைவன் பிரிவினால் மாமையழியப் பசலை உண்டாதல், இந்நூல்27-ஆம் செய்யுளாலும் விளங்கும்.

    நம்மினும் சிறந்த அரும்பொருளென்றது குறிப்பு மொழி; நம்மினுஞ்சிறந்ததன்றென்னும் கிடக்கையாற் கூறியது.

    இறப்பர்கொல் என்ற ஐயம் செல்லாமையைச் சார்ந்தே நின்றது.

    ஒப்புமைப் பகுதி 1. பாலைநிலத்தில் மூங்கில் உலர்தல்: (குறுந். 180:4,396:7).

    “மழைபெயன் மறந்த கழைதிரங் கியவில்”, “மழைகரந் தொளித்தகழைதிரங் கடுக்கத்து” (அகநா. 245:5, 347:10.)

     நீரிலாரிடை: குறுந். 347:1.

    2. ஆறுசெல் வம்பலர்: குறுந். 297:3, 350:6; அகநா. 95: 8, 107:6.

    1-3. பாலைநிலத்தில் மறவர் ஆறலைத்தல்: குறுந். 283:5-7, ஒப்பு.

    4. கானம் நீந்தல்: குறுந். 350:7; அகநா. 103:10.

    5-6. நறுவடிமா: நற். 243:3; ஐங். 61:1, 213:1.

     வடுவையுடைய மாத்துத்தளிர்: “வடிக்கொண் மாஅத்து வண்டளிர்” (ஐங். 14:2.)

    6-7. மாந்தளிர் மகளிரது மேனிக்கு: “மாவின், அவிர்தளிர் புரையு மேனியர்” (முருகு. 143-4); “தேமா மேனிச் சில்வளை யாயம்”(சிறுபாண். 176); “கழிகவி னிளமாவின் றளிரன்னாய்” (கலி. 57:13);“வளங்கெழு மாவி னிளந்தளி ரன்ன, நயத்தகு மேனியும்”, “மாந்தளிர்மேனியும்” (பெருங். 3. 6:83-4, 4. 13:219); “மாந்தளிரே மாமேனி”(சீவக. 652); “நறுமாவின், கொய்தளி ரன்ன நிறம்” (முத். 83);“மாந்தளிர்போல், மின்னிய மாமை விளர்ப்ப தென்னே” (தஞ்சை. 22.)

    7. மாமை பசலையால் அழிதல்: (குறுந். 27:4-5, ஒப்பு.); “பொன்னேர் பசலை யூர்தரப் பொறிவரி, நன்மா மேனி தொலைத னோக்கி” (அகநா. 229:13-4)

    8. பொருள் நம்மினுஞ் சிறந்தது: கலி. 2:19-22, 5:4-5; அகநா. 265:23.

(331)