(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “தலைவன்வந்தான்” என்று துணிவுபற்றிக் கூறித் தோழி ஆற்றுவித்தது.)
  338.    
திரிமருப் பிரலை யண்ண னல்லே 
    
றரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ 
    
வீததை வியலரிற் றுஞ்சிப் பொழுதுசெலச் 
    
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் 
5
பின்பனிக் கடைநாட் டண்பனி யச்சிரம் 
    
வந்தன்று பெருவிற றேரே பணைத்தோள் 
    
விளங்குநக ரடங்கிய கற்பின் 
    
நலங்கே ழரிவை புலம்பசா விடவே. 

என்பது பிரிவிடைத் தோழி வற்புறுத்தது (பி-ம். வற்புறுத்தியது.)

பெருங்குன்றூர் கிழார்.

     (பி-ம்.) 5. ‘யற்சிரம்’ 8. ‘நலங்கொளரிவை’.

     (ப-ரை.) பணை தோள் - மூங்கிலைப் போன்றதோள்களையும், விளங்கு நகர் அடங்கிய கற்பின் - விளங்கியஇல்லின் கண்ணே அடங்கிய கற்பையுமுடைய, நலம்கேழ் - அழகு பொருந்திய, அரிவை - தலைவி, புலம்புஅசாவிட - தனிமையால் உண்டான துன்பம் நீங்கும்வண்ணம், பெரு விறல் தேர் - மிக்க வெற்றியையுடையதலைவனது தேர், திரி மருப்பு இரலை - முறுக்கின கொம்பையுடைய இரலையாகிய, அண்ணல் நல் ஏறு - தலைமையையுடைய நல்ல ஆண்மான், அரி மடம் பிணையோடு -மென்மையையும் மடப்பத்தையுமுடைய பெண்மானோடு,அல்கு நிழல் அசைஇ - தாம் தங்குதற்குரிய நிழலினிடத்தேதங்கி, வீததை வியல் அரில் - மலர்கள் நெருங்கிய அகன்றபிணக்கத்தையுடைய தூற்றினிடத்தே, துஞ்சி - தூங்கி,பொழுது செல - பொழுது போனமையின், செழு பயறுகறிக்கும் - செழுவிய பயற்றம்பயிரைக் கறித்துத் தின்னும்,புன்கண் மாலை - துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தினையும், பின்பனி கடை நாள் - பின் பனியையுமுடைய கடையாமத்தையும், தண்பனி - குளிர்ந்த பனியையுமுடைய,அச்சிரம் - அச்சிரக் காலத்தில், வந்தன்று - வந்தது.

     (முடிபு) அரிவை, புலம்பு அசாவிடப் பெருவிறல் தேர் வந்தன்று.

     (கருத்து) தலைவன் மீண்டு விரைவில் வருவான்.

     (வி-ரை.) இது கற்புக் காலத்தது.

     அல்குநிழல் - மாலைக்காலத்தின் நிழலென்பதும் பொருந்தும்(நாலடி. 166.) இரலையும் பிணையும் துஞ்சிப் பயறு கறிக்குமென்றது,நீயும் நின் தலைவனோடு இனிப் பிரிவின்றி இன்புறுதல் கூடுமென்றகுறிப்பையுணர்த்தியது.

     அரில் - பிணங்கிய தூறு. அச்சிரம்: இங்கே பின்பனிக்கு வந்தது.பயறு அச்சிரக் காலத்தில் முதிர்வதாதலின் அதனை மான்கள் கறித்தன(குறுந். 68, வி-ரை.)

     தலைவன் தேர் வந்திலதேனும் துணிவுபற்றி வந்தன்றென இறந்தகாலத்தாற் கூறினாள்.

     அடங்கிய கற்பென்றது அறக்கற்பென்றும் ஆறிய கற்பென்றும்வழங்கும்; “ஆறிய கற்பி னடங்கிய சாயல்” (பதிற். 16:10.)

     கெழுவென்பது கேழென நீண்டது (தொல். குற்றியலுகரப். 76, ந.)புலம்பு அசா - புலம்பையும் அசாவையு மென்பதும் பொருந்தும்.

    ஒப்புமைப் பகுதி 1. திரிமருப்பிரலை: குறுந். 183:3-4; அகநா. 4:3-4, 34:4; பு. வெ. 277. திரிமருப்பு: குறுந். 279:1.

    1-2. இரலை பிணையோடு இருத்தல்: குறுந். 65:1-2, ஒப்பு.

    3. விலங்குகள் மலர் நிறைந்த இடத்திற் படுத்திருத்தல்: “நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்” (அகநா. 2:7.)

    5. தண்பனி யச்சிரம்: குறுந். 68:3, 76:6, 82:6.

    6. பெருவிறல்: குறிஞ்சிப். 199; மலைபடு. 493; கலி. 81:9.

    8. அசாவிட: கலி. 132:3; அகநா. 162:16.

(338)