(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வருந்தியதலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவிய காலத்தில்அவ்வொழுக்கம் நினக்கு இனிதாயிருந்தது; இப்பொழுது வருந்துதல்எவன்?” என்று தோழி கூறியது.)
 339.   
நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை 
    
உறையறு மையிற் போகிச் சாரற் 
    
குறவர் பாக்கத் திழிதரு நாடன் 
    
மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல் 
5
இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க் 
    
குவளை யுண்கண் கலுழப் 
    
பசலை யாகா வூங்கலங் கடையே. 

என்பது வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொற் சொல்லிவற்புறீஇயது

பேயார்.

     (பி-ம்.) 1. ‘னறும்புகை’ 2. ‘உறையுறு மகளிர் மையிற்’ 5. ‘நறுவிதழ்க்’, ‘நறுமாயிதழ்க்’.

    (ப-ரை.) தோழி--, நறை அகில் - வாசனையையுடையஅகிலினது, வயங்கிய நளி புனம் நறுபுகை - விளங்கியசெறிந்த புனத்தின்கண் எழுந்த நறிய புகையானது, உறைஅறுமையின் போகி - துளிகள் அற்ற வெண்மேகத்தைப்போலச் சென்று, சாரல் குறவர் பாக்கத்து - மலைச்சாரலிலுள்ளகுறவர்களுடைய ஊரில், இழி தரும் நாடன் - இறங்கும்நாட்டையுடைய தலைவன், மயங்கு மலர் கோதை - பலவகை மலர்கள் கலந்த மாலையையணிந்த, நல் மார்புமுயங்கல் - நின் நல்ல மார்பைத் தழுவுதல், மா இதழ் - கரிய இதழையுடைய, குவளை உண் கண் கலுழ - குவளைமலரைப் போன்ற மையுண்ட கண்கள் அழும்படி, பசலைஆகா ஊங்கலங்கடை - பசலை உண்டாகாததன் முன்பு,மன் இனிது - மிக இனியதாயிற்று.

     (முடிபு) தோழி, பசலையாகா ஊங்கலங்கடை நாடன் மார்பு முயங்கல் இனிதுமன்.

     (கருத்து) தலைவன் மணந்தக்கால் இன்புற்ற நீ அவன் நின்பொருட்டுப் பிரிந்தக்கால் துன்புறுதல் தக்கதன்று.

     (வி-ரை.) தினை விதைக்கும் பொருட்டுப் புனத்திலுள்ள மரங்களைஅகிலோடு சேர்த்துக் கானவர் சுடுதலின் புகை எழுந்தது. அகிலெரிதலின்நறும்புகையாயிற்று. அப்புகை வெண்ணிற முடையதாதலின் நீரற்றவெண்மேகத்தை ஒத்தது.

     பாக்கம் - பக்கத்திலுள்ள ஊர்கள். கோதை, தலைவி யணிந்தது.வாழி: அசை நிலை. பசலையாகா ஊங்குக் கடையென்க; அல்லும் அம்மும் வேண்டாவழிச் சாரியை.

     தலைவன் பிரிந்ததனால் கண் கலுழ்ந்தன; பசலை மேனியில்உண்டாயிற்று. கண்ணில் பசலை உண்டாய தெனலும் ஆம்.

     ‘தலைவன் வந்து நின்னை முயங்கிய காலத்து இனிதாக இருந்தது;இப்பொழுது நின்பொருட்டன்றே பிரிந்தான்? இதற்கு அழிவது என்னஅறிவின்மை!’ என்பதுபடத் தோழி கூறி வற்புறுத்தினாள்.

    ஒப்புமைப் பகுதி 1. நறும்புகை: குறுந். 150:1.

    2. உறையறு மை: நெடுநல். 19; பதிற். 55:14-5; அகநா. 217:1.

    1-2. புகைக்கு மேகம்: “அகில்சுடு கானவ னுவல்சுடு கமழ் புகை,ஆடுமழை மங்குலின் மறைக்கும்” (நற். 282:7-8); “கறையில் கார்மழை பொங்கி யன்ன, நறையி னறும்புகை” (பரி. 14:19-20); “புகைபுரை யம்மஞ் சூர”, “வெண்மழை கவைஇக், கலஞ்சுடு புகையிற் றோன்றுநாட” (அகநா. 97:22, 308:5-6); “அகிலெழு கொழும்புகை மஞ்சினாடவும்” (சூளா. நகரச். 6.)

    3. குறவர் பாக்கம்: குறுந். 394:2; தொல். புறத். 3; பொருந. 210; மலைபடு. 162.

    5. வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.

    6-7. கண்பசலை பூத்தல்: நற். 35:12; ஐங். 16:4, 21:4; கலி. 16:1; அகநா. 146:11.

(339)