ஈழத்துப் பூதன்றேவன். (பி-ம்) 2. ‘அண்ணலியானை’, ‘பாய்ந்தே’ 3. ‘மிகுவலிரும்புலி’4. ‘கொளீஇய’ 7. ‘பேருமாறே’.
(ப-ரை.) தோழி--, மிகுவலி இருபுலி பகுவாய் ஏற்றை -மிக்க வலியையுடைய பெரிய புலியினது பிளந்த வாயையுடைய ஆணானது, நனைகவுள் - மதத்தால் நனைந்தகவுளையுடைய, அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென - தலைமையையுடைய யானையினது அழகிய முகத்தின் கண்ணே பாய்ந்ததாக, வெள்கோடு செ மறு கொளீஇ -அவ்யானையின் வெள்ளிய கொம்பைத் தனது இரத்தத்தால்செவ்விய கறையைக் கொள்ளச் செய்து, விடர் முகை - பிளப்பையுடைய கன்முழையிலுள்ள, கோடை ஒற்றிய - மேல்காற்று வீழ்த்திய, கருகால் வேங்கை - கரிய அடியையுடையவேங்கை மரத்தினது, வாடு பூ சினையின் கிடக்கும் - வாடியபூவையுடைய கிளையைப் போல இறந்து கிடக்கும், உயர்வரை நாடனொடு - உயர்ந்த மலையையுடைய நாட்டையுடைய தலைவனுடன், பெயருமாறு - போகும் திறத்தை,நினையாய் - நீ எண்ணுவாயாக; வாழி - நீ வாழ்வாயாக!
(முடிபு) தோழி, நாடனொடு பெயருமாறு நினையாய்; வாழி!
(கருத்து) நீ தலைவனுடன் செல்லுதலே நன்று.
(வி-ரை.) உடன்போக்கு, தலைவியின் நெஞ்சிற்கு உவந்ததன்றாதலின் அதைக் கூறுதற்குமுன் வாழ்த்தினாள். பகுவாயென்றது பாயும்பொழுது புலி யானையைக் கொல்வதற்குப் பிளந்தவாயை யுடையதாயிற்றென்றபடி. வெண்கோடு செம்மறுக்கொளீஇ யென்றது யானையின்கொம்பினாற் குத்தப்பட்டு இறந்ததைப் புலப்படுத்தியது. புலி பாய்ந்த தனால் வெண்கோடு செம்மறுக் கொண்டதையன்றி அவ்யானைக்குஊறொன்றும் நேர்ந்திலது.
விடர்முகை வேங்கை, கோடையொற்றிய வேங்கை யெனக் கூட்டுக.வேங்கையின்மலர் புலியின் வரியைப் போலத் தோற்றும் (குறுந். 47:1-2); ஆதலின் இறந்து கிடந்த வேங்கைக்கு வேங்கை மரத்தின் பூஞ்சினைஉவமையாயிற்று.
பாலையிற் சென்றால் ஏதம் வருங்கொலோவென்று தலைவிஅஞ்சாவாறு, “அவனது நாட்டிலுள்ள யானை தன்னை எதிர்த்தமிகுவலியையுடைய புலியைத் தான் எதிர்க்காமலே கொம்பினால் வீழச்செய்தது” என்பதனால் அவன் நாட்டிலுள்ளவற்றின் பெருவலியைப்புலப்படுத்தி அந்நாட்டுக் குரியவனாகிய தலைவனும் இடையூறுகளைஎளிதில் வெல்லும் ஆற்றலுடையானென்பதை உய்த்துணர வைத்தாள்.
பெயருமாறே நினையாயென்றது பிறிது நினைத்தலாற் பயனில்லையென்றபடி; ஏ: பிரிநிலை.
ஒப்புமைப் பகுதி 1. வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.
3. புலியின் பகுவா யேற்றை: “பொறிகிள ருழுவைப்பேழ்வாயேற்றை” (அகநா. 147:6); “பேழ்வா யுழுவை” (புறநா. 152:2.)
1-3. யானையும் புலியும் பொருதல்: குறுந். 88:2-3, ஒப்பு.
4. செம்மறுக் கொண்ட வெண்கோடு: “கொன்முர ணிரும்புலி யரும்புழைத் தாக்கிச், செம்மறுக் கொண்ட வெண்கோட்டி யானை”(நற். 151:2-3.) விடர்முகை: குறுந். 218:1, ஒப்பு.
5. கோடை ஒற்றுதல்: குறுந். 388:2. ஒற்றுதல்: அகநா. 18:4; புறநா. 237:16.
கருங்கால் வேங்கை: குறுந். 26:1, ஒப்பு; 47:1, ஒப்பு.
4-5. விடர்முகையில் கோடைக்காற்று அடித்தல்: “கமஞ் சூழ் கோடை விடரக முகந்து, காலுறு கடலி னொலிக்குஞ் சும்மை” (மதுரைக். 308-9.)
3-6. புலிக்குப் பூத்த வேங்கைச் சினை: “கதழ்வாய் வேழம், இருங்கேழ் வயப்புலி வெரீஇய யயலது, கருங்கால் வேங்கை யூறுபட மறலிப், பெருஞ்சினந் தணியுங் குன்ற நாடன்”, “கல்லயற் கலித்த கருங்கால் வேங்கை, அலங்கலந் தொடலை யன்ன குருளை, வயப்புனிற் றிரும்பிணப் பசித்தென வயப்புலி, புகர்முகஞ் சிதையத் தாக்கி” (நற். 217:2-5, 383:1-4); “உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை”, “வேங்கையஞ் சினையென விறற் புலி முற்றியும்”, “கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு, நெடுவரை மருங்கிற் றுஞ்சும் யானை, நனவிற்றான் செய்தது மனத்த தாகலிற், கனவிற் கதுமென வெரீஇப், புதுவ தாக மலர்ந்த வேங்கையை, அதுவென வுணர்ந்தத னணிநல முருக்கி” (கலி. 38:6, 46:5, 49:1 - 6); “மலர்ந்த, வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன, ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க்குருளை”, “புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை” (அகநா. 147:1-3, 227:8.)
(343)