(பகலில் வந்து தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லும்வழக்கத்தையுடைய தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து இங்கேதங்கிச் செல்க" என்று தோழி கூறியது.)
 345.   
இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர் 
    
வரைமரு ணெடுமணற் றவிர்த்துநின் றசைஇத் 
    
தங்கினி ராயிற் றவறோ தெய்ய 
    
தழைதா ழல்கு லிவள்புலம் பகலத் 
5
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி 
    
இழுமென வொலிக்கு மாங்கட் 
    
பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. 

என்பது பகல்வந்து ஒழுகுவானைத் தோழி இரா வா வென்றது.

அண்டர்மகன் குறுவழுதி.

     (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’ 2. ‘றவிர்த்த நிரையசைஇ’, ‘றவிர்த்தனிரசைஇ’3. ‘றவறோதகைய’, ‘றவறேதைய’, ‘றவறோதைஇய’.

     (கு-பு.) இச்செய்யுளின் நாலாம் அடி ஒரு பிரதியில் இல்லை.

    (ப-ரை.) தாழை தைஇய - தாழை பொருந்திய, தயங்குதிரை கொடு கழி - விளங்கிய அலைகளையுடைய வளைந்தகழியானது, இழுமென ஒலிக்கும் - இழுமென்று ஆரவாரம்செய்யும், ஆங்கண் - அவ்விடத்துள்ள, பெரு நீர் வேலிஎம் சிறு நல் ஊர் - பெரிய கடலை வேலியாகவுடையஎமது சிறிய நல்லூரின்கண், இழை அணிந்து இயல் வரும்கொடுஞ்சி நெடு தேர் - பொற்படைகளால் அணியப்பட்டுஓடுகின்ற கொடுஞ்சியையுடைய நுமது உயர்ந்த தேரை,வரை மருள் நெடு மணல் தவிர்த்து - மலையையொத்தஉயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு, நின்று அசைஇ - இங்கு இருந்து இளைப்பாறி, தழை தாழ் அல்குல் இவள்புலம்பு அகல - தழையுடை தாழ்ந்த அல்குலையுடையஇத்தலைவியினது தனிமை வருத்தம் நீங்கும்படி, தங்கினிர்ஆயின் - தங்குவீரானால், தவறோ - அது பிழையாகுமோ?

     (முடிபு) தவிர்த்து நின்று அசைஇ, புலம்பு அகல நல்லூரில் தங்கினிராயின் தவறோ!

     (கருத்து) இனி நீர் இரவில் வந்து தலைவியோடு அளவளாவுவீராக.

     (வி-ரை.) இழை - பொற்படை (புறநா. 123:4, உரை); அலங்காரப்பொருள்களுமாம். இரவுக்குறி இல்வரை இகவாததாதலின் அங்கே தேரோடுவரின் ஊரினர் அறிவரென்றஞ்சி அதனை மணல் மேட்டில் நிறுத்தி வரும்படி உரைத்தாள். தவறோவென்ற வினா அங்ஙனம் செய்தல் வேண்டுமென்னும் கிடக்கையினது. தெய்ய: அசைநிலை; தைஇய என்ற பாடத்திற்கு உடுத்தவென்று பொருள் கொள்க.

     தாழையில் மோதும் அலைகள் ஒலித்தலின் கழி இழுமென்னும்ஓசையையுடையதாயிற்று.

     பகற்குறியிடத்துக்கண் வந்த தலைவனுக்குக் கூறுதலின் தம் ஊருள்ள இடத்தை ஆங்கணெனச் சேய்மைச்சுட்டாற் குறிப்பித்தாள்.

    ஒப்புமைப் பகுதி 1. இழை யணிந்த தேர்: நற். 10:5; கலி. 99:7; அகநா. 238: 12; புறநா. 123:4, 359:15.

     கொடுஞ்சி நெடுந்தேர்: குறுந். 212:1, ஒப்பு.

    2. வரைமருள் நெடுமணல்: குறுந். 236:3, ஒப்பு.

    1-2. தேரைத் தனியே நிறுத்திவிட்டுத் தலைவன் வருதல்: "தேர்சே ணீக்கித் தமியன் வந்து" (அகநா. 380:1.)

    4. தழை தாழல்குல்: குறுந். 125:3, ஒப்பு.

    5. தாழை தைஇய கழி: குறுந். 340:4-6.

    6. இழுமென லித்தல்:குறுந். 351:3-4; முருகு. 316.

    7. மு. அகநா. 310:17.

(345)