(பொருள்வயிற் பிரிய எண்ணிய தன் நெஞ்சத்தை நோக்கி,"தலைவியும் உடன் வருவாளாயின் நாம் பிரிதல் கூடும்" என்று கூறித்தலைவன் செலவு தவிர்ந்தது.)
 347.   
மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்  
    
குமரி வாகைக் கோலுடை நறுவீ 
    
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும் 
    
கான நீளிடைத் தானு நம்மொ 
5
டொன்றுமணஞ் செய்தன ளிவளெனின் 
    
நன்றே நெஞ்ச நயந்தநின் றுணிவே. 

என்பது பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச்செலவழுங்கியது.

    (பொருள் வலிக்கும் நெஞ்சு - பொருள் பெறவேண்டுமென்று எண்ணி அதன்பொருட்டுத் தவைவியைப் பிரிந்து செல்ல எண்ணிய நெஞ்சு. செலவு அழுங்கியது - செல்லுதலைத் தவிர்ந்தது; இங்ஙனம் அழுங்குதல் தலைவியை ஆற்றுவித்துப் பின்னர்ச் செல்லும் பொருட்டேயாகும்.)

காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணன்.

     (பி-ம்.) 1. ‘மல்குசுனைப் புலந்த’ 2. ‘கொல்லுடை நறுவீ’.

    (ப-ரை.) நெஞ்சம் - நெஞ்சே, மல்கு சுனை புலர்ந்தநல்கூர் சுரமுதல் - முன்பு நீர் மல்கிய சுனை பின்பு வற்றுதலினால் வறுமையுற்ற பாலைநிலத்தில் வளர்ந்த,குமரி வாகை கோல் உடை நறு வீ - இளமையையுடையவாகைமரத்தின் கொம்பின் கண் உள்ள நறிய மலர், மடம்மா தோகை குடுமியின் தோன்றும் - மடப்பத்தையுடையகரிய மயிலினது உச்சிக் கொண்டையைப் போலத் தோன்றுகின்ற, கானம் நீள் இடை - நீண்ட காட்டு வழியில், இவள்தானும் நம்மோடு ஒன்றும் மணஞ் செய்தனள் எனின் - இத்தலைவி தானும் நம்மொடு வந்து பொருந்தும் முயக்கத்தைச் செய்வாளெனின், நயந்த - பொருள் செய்தற்குவிரும்பிய, நின்துணிவு நன்றே - நினது துணிவு நன்மையுடைய தேயாகும்.

     (முடிபு) நெஞ்சம், நீளிடையில் இவள்தானும் மணஞ் செய்தனளெனின் நின்துணிவு நன்றே.

     (கருத்து) தலைவியைப் பிரிந்து செல்லுதல் தக்கதன்று.

     (வி-ரை.) மல்குசுனை - முன்பு நீர்மல்கிய சுனை. குமரியென்றதுஇளமை குறித்து நின்றது. எனினென்பது அங்ஙனம் செய்தலரிதென்னும்நினைவிற்று. நன்றே: ஏ தேற்றம். துணிவே: ஏ அசை நிலை.

    ஒப்புமைப் பகுதி 1. சுனை புலர்ந்த சுரம்: "அறுநீர்ப் பைஞ்சுனையாமறப் புலர்தலின்" (அகநா. 1:12.)

    2-3. வாகைமலர்க்கு மயிலின் உச்சிச்சூட்டு: "வாகையொண் பூப் புரையு முச்சிய, தோகை" (பரி. 14:7-8.)

    4-5. கானநீளிடை மணஞ் செய்தல்: "பயந்தபு கானம், எம்மொடு கழிந்தன ராயிற் கம்மென, வம்புவிரித் தன்ன பொங்குமணற் கான்யாற்றுப்,படுசினை தாழ்ந்த பயிலிண ரெக்கர், மெய்புகு வன்ன கைகவர் முயக்கம்,அவரும் பெறுகுவர் மன்னே" (அகநா. 11:6-11).

    6. நெஞ்சின் துணிவு: "சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே" (திருச்சிற். 343).

(347)