கழார் (பி-ம். கிழார்க்) கீரனெயிற்றி.) (பி-ம்) 2. ‘சூன் முதிர்பன்ன’ 5. ‘வாடையும் நம்பிரிந்திசினோர்க்’.
(ப-ரை.) தோழி, நாள் நேர்பு - தலைவர் பிரிந்த நாளில் உடம்பட்டு, சினை பசு பாம்பின் - கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது, சூல் முதிர்ப்பு அன்ன - கருவின் முதிர்ச்சியைப் போன்ற, கனைத்த கரும்பின் கூம்பு பொதி - திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு, அவிழ - மலரும்படி, நுண் உறை அழி துளி தலைஇய - நுண்ணிய மழை பொழிந்து அழிந்த துளி பொருந்திய, தண்வரல் வாடையும் - தண்ணிய வருதலை உடைய வாடைக் காற்றை உடைய கூதிர்க் காலத்தும், பிரிந்திசினோர்க்கு - பிரிந்துறையும் தலைவர் பொருட்டு, அழல் - அழுதலால், எம் கண் - எம்முடைய கண்கள், மன்ற - நிச்சயமாக, நாண் இல - நாணம் இல்லாதன.
(முடிபு) நாள் நேர்பு, பிரிந்திசினோர்க்கு அழுதலால் எம் கண்கள் நாணில.
(கருத்து) அவர் பிரியும் பொழுது கண்கள் அழுது தடை செய்யாதது தவறு.
(வி-ரை.) வண்ணம் பசந்து புலம்புறு காலை, உணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி, புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே” (தொல். பொருளியல், 8) என்பது இலக்கணமாதலின், கண்களை நாணில்லாதன போலக் கூறினாள். கண் நேர்தலாவது தலைவன் பிரிந்த காலத்தில் அழாமல் உடம்பட்டிருந்தமை; தடுத்தலைச் செய்யாமையே உடம்பாடாயிற்று; தலைவன் பிரியும் காலத்தில் கண்கள் அழுது அவன் செல்லுதலைத் தடுத்தலும் உண்டு என்பதை இந்நூல் 256-ஆம் செய்யுளால் உணரலாகும்.
தோகையால் மூடப்பட்டுப் பசுமையாக இருத்தலின் கரும்பின் அரும்பிற்குப் பச்சைப் பாம்பை உவமை கூறினாள். கார்காலத்து மழை பெய்தபின் மேகத்தில் எஞ்சியிருக்கும் துளிகள் கூதிர்க் காலத்து வீழ்தலின், ‘நுண்ணுறை யழிதுளி தலைஇய வாடை’ என்றாள். தலைஇய - பெய்த வெனலுமாம். வாடையும்: உம் இழிவுச் சிறப்பு; வாடையை உடைய கூதிர்க் காலம் தலைவனும் தலைவியும் இன்புறுவதற்கு ஏற்ற காலம் (தொல். அகத். 6, ந.); ஆதலின் உடன் இருப்பதற்குரிய காலத்தில் பிரிந்துறைகின்றார் என்று தலைவி வருந்தினாள். பிரிந்திசினோர்: இசின் படர்க்கைக்கண் வந்ததோர் இடைச்சொல் (புறநா. 11, உரை).
(மேற்கோளாட்சி) 1. மேனி பசந்து தனிப்படருறும் காலத்துத் தலைவி தன்னுடைய உறுப்பினை அறிந்தது போலப் பொருந்தின கூற்றால் சொல்லவும் பெறும் (தொல். பொருளியல், 8, ந.).
5. ‘தண்வரல் .. அழலேயென ஆனுருபு இறுதிக்கண் தொக்கதா லெனின் அது வினைச்சொற் காரணப் பொருட்டாய் நின்றது’ (தொல். வேற்றுமை மயங்கு.22,ந.); “ இடையிலே தொகுமென்றது என்னை? கடந்தானிலம், இருந்தான் குன்றத்து, தண்வரல் ... அழலே ... என்பன நிலத்தை, குன்றத்தின்கண், அழலான் ... என்று வேற்றுமை உருபுகள் ஈற்றினும் தொகுமாலோ வெனின், அவை ஒரு பெயரனையவாய் உருபு முதலியன ஏலாமையின், தொகை விதியால் தொக்கனவாகா; செய்யுள் விகார வகையால் தொகுக்கப்பட்டன என்க’ (நன். 362, மயிலை).
ஒப்புமைப் பகுதி 2-3 பசும்பாம்பின் சூல்: “சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல், மெல்லவே கருவிருந் தீன்று” (சீவக.53).
5. தண்வரல் வாடை: குறுந்.76:5, 110:5-6, 160:5. 4-5. உறை அழிதுளி வாடை: “கடைப் பெயல் வாடை”, “வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்”, “அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடை நாள்... வாடை”, “எல்லாந் தந்ததன் றலையும் பையென, வடந்தை துவலை தூவ”, “தண்ணென, ஆடிய விளமழைப் பின்றை, வாடை” (நற்.89:4-7, 152:5-6, 229:9-11).
3-5. வாடையாற் கரும்பின் பொதி அவிழ்தல்: “புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை, இலங்குபூங் கரும்பி னேர்கழை யிருந்த, வெண்குருகு நரல வீசும், நுண்பஃ றுவலைய”, “பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை, எஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன, துவலை தூவல் கழிய வகல்வயல், நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக், கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர”, “கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ, ... குரங்க, ... பனிகடி கொண்ட பண்பில் வாடை” (அகநா. 13:21-4, 217:1-5, 35:12-5).
(35)