(தலைவன் பிரிந்தபின் வேறுபட்ட தலைவியை நோக்கி, "நாம்அவர் செல்லும்பொழுது போகற்கவெனத் தடுத்தேமேல் அவர் செல்லார்.அப்பொழுது உடம்பட்டு இப்பொழுது வருந்துதல் தக்கதன்று" என்றுதோழி கூறியது.)
 350.   
அம்ம வாழி தோழி முன்னின்று  
    
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச் 
    
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ 
    
ஆற்றய லிருந்த விருந்தோட் டஞ்சிறை 
5
நெடுங்காற் கணந்து ளாளறி வுறீஇ 
    
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும் 
    
மலையுடைக் கான நீந்தி  
    
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே. 

என்பது பிரிவுநேர்ந்த (பி-ம். சேர்ந்த) தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது.

ஆலத்தூர் கிழார்.

     (பி-ம்.) 2. ‘பனிவெங் குன்றஞ்’ 3. ‘செல்லார் கொல்லோ’ 4. ‘விருங்கோட்டஞ்சிறை’ 5. ‘கணத்து’ 8. ‘நிலையார் பொருட்பிணி’.

    (ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக, ஆறு அயல் இருந்த இரு தோடு - வழியின்அயலிலே இருந்த பெரிய தொகுதியாகிய, அம் சிறை நெடுகால் கணந்துள் - அழகிய சிறகுகளையும் நெடிய காலையும்உடைய கணந்துட் பறவைகள், ஆள் அறிவுறீஇ - தமக்குஊறு விளைக்கும் வேட்டுவ மக்களுண்மையை அறிவுறுத்தி,ஆறு செல் வம்பலர் - வழிப் போகும் பிரயாணிகளது,படை தலை பெயர்க்கும் - சேனைத்திரளை இடத்தினின்றுநீங்கச் செய்யும், மலையுடை கானம் நீந்தி - மலையையுடையகாட்டைக் கடந்து, நிலையா பொருள் பிணி பிரிந்திசினோர் - நிலையில்லாத பொருள் வேட்கையினால் நம்மைப் பிரிந்துசென்றோர், முன் நின்று - அவர் பிரியுங்காலத்து அவர்முன்னே நின்று, பனிகடும் குரையம் - யாம் பனியினதுகடுமையையுடையேம், செல்லாதீம் - ஆதலின் போதலைஒழிமின், என சொல்லினம் ஆயின் - என்று கூறினோமாயின்,செல்வர் கொல் - போவாரோ?

     (முடிபு) தோழி, முன்னின்று செல்லாதீமெனச் சொல்லினமாயின் பிரிந்திசினோர் செல்வர்கொல்?

     (கருத்து) நாம் தலைவரை முன்பே தடுத்திருப்பின் செல்லார்.

     (வி-ரை.) முன்னின்று - முன்னே நின்று வெளிப்படையாக, ‘இனிவரும் பனிக்காலத்தின் கொடுமையை நும்பிரிவின் கண் பொறுத்தலாற்றேம்' என்னும் கருத்துப்பற்றி, ‘பனிக்கடுங்குரையம்' என்றாள். குரை: அசை நிலை.

     செல்லாதீம் - செல்லாதீர். கொல்லோ, ஓ அசை நிலை.

     ஆறு செல் வம்பலரும் வீரராக இருத்தலின் அவர் கூட்டத்தைப்படையென்றாள் (அகநா. 89:13).

     தோடு - தொகுதி. கணந்துட் பறவை ஆறலைகள்வர் வருவதையறிந்து ஒலித்தலின் வம்பலர் பெயர்ந்தனர்.

     மலையுடைக் கானம் - குறிஞ்சி திரிந்த பாலை நிலம்.

     "தலைவர் பிரிந்த காலத்தில், நும் பிரிவினால் யாம் வருந்துவேமாதலின் செல்லற்கவெனச் சொன்னாமாயின் அவர் நம் விருப்பத்திற்குஇணங்கிச் செலவு தவிர்ந்து ஈண்டிருப்பர். நாம் அப்பொழுது உடம்பட்டமையின் அவர் சென்றார். ஆதலின் அவர்பாற் குறையில்லை. நாமே அன்று உடம்பட்டு இப்பொழுது வேறுபடுதல் நன்றன்று. நீ ஆற்றியிருத்தல் வேண்டும்’’ என்று தோழி தலைவியை வற்புறுத்தினாள்.

    ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழிதோழி: குறுந். 77:1, ஒப்பு.

    வாழிதோழி: குறுந். 260:4, ஒப்பு.

    2. செல்லாதீம்: குறுந். 390:2; நற். 229:3; ஐங். 186:5; அகநா. 300:18. 5. நெடுங்காற் கணந்துள்: நற். 212:2.

     கணந்துட்பறவை: சிலப். 10:117, அடியார்.

    7. "கல்லுடை யதர, கான நீந்தி" (அகநா. 295:8.)

    8. பொருட்பிணி: குறுந். 255:7, ஒப்பு, 344:7, ஒப்பு.

     நிலையாப் பொருட்பிணி: நற். 46:11, 71:1, 126:11, 241:12;கலி. 8:11, 14, 17; அகநா. 79:17.

(350)