கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பி-ம். கடியலூருத்திரனங் கண்ணன்). (ப-ரை.) தோழி--, நெடு நீர் ஆம்பல் - ஆழமாகிய நீரின் கண் வளர்ந்த ஆம்பிலினது, அடை புறத்து அன்ன - இலையின் புறத்தைப் போன்ற, கொடு மெல் சிறைய - வளைந்த மெல்லிய சிறையை யுடையனவாகிய, கூர் உகிர் பறவை - கூரிய நகங்களையுடைய வௌவால்கள், அகல் இலை பலவின் சாரல் முன்னி - அகன்ற இலைகளையுடையபலாமரங்களையுடைய மலைச்சாரலை நோக்கி, பகல் உறை முது மரம் - பகற்காலத்தில் தாம் உறைந்த பழைய மரம், புலம்ப - தனிக்கும்படி, போகும்--, சிறு புல் மாலை உண்மை - சிறிய புல்லிய மாலைக்காலம் உளதாதலை, அவர் காணா ஊங்கு - அத்தலைவரைக் காணாத காலத்தில், அறிவேன் - உணர்வேன்.
(முடிபு) தோழி, அவர்காணாவூங்கு மாலையுண்மை அறிவேன்.
(கருத்து) தலைவன் பிரிந்த பின்னர் மாலைக்காலம் எனக்குத் துன்பத்தைத் தருகின்றது.
(வி-ரை.) நெடுநீர்: நெடுமை, ஆழத்தின்மேற் சென்றது; “நெடும் புனலுள் வெல்லு முதலை” (குறள். 495) என்பதன் உரையைப் பார்க்க.
தலைவனைக் காணாவிடத்து மாலைக்காலத்தில் காமநோய் மிகுதலின், ‘அவர்க்காணாவூங்கு மாலையுண்மை அறிவேன்’ என்றாள். அவர்: நெஞ்சறிசுட்டு.
ஒப்புமைப் பகுதி 2. கொடுஞ்சிறைப் பறவை: குறுந். 92:2.
மென்சிறைக் கூருகிர்ப் பறவை: குறுந். 201:3.
4. வௌவால் பகலுறை மரம்: திருச்சிற். 375.
1-4. வௌவால் மாலையில் தாம் இருந்த மரத்தை நீங்கி வேறிடம்செல்லுதல்:
| “பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன, ... மாச்சிறைப் |
| பறவை, பகலுறை முதுமரம் புலம்பப் போகி” (அகநா. 244:1-3). |
1-5. குறுந். 172:1-2, ஒப்பு.
5-6. தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி மாலைக் காலத்தைஅறிதல்: (குறுந். 386:2-4); “மாலைநோய் செய்தன் மணந்தாரகலாத,காலை யறிந்த திலேன்” (குறள். 1226)
(352)