கயத்தூர் கிழான். (பி-ம்.) 3. ‘தணந்தனி ராயின்’, ‘தணிந்தனை யாயினெம் முய்த்துக்கொடுமோ’.
(ப-ரை.) நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் - நீரின் கண் நெடுநேரம் விளையாடினால் கண்களும் செந்நிறத்தை அடையும்; ஆர்ந்தோர் வாயில் - பன்முறை உண்டோரது வாயினிடத்தே, தேனும் புளிக்கும் - தேனும் புளிப்பையுடைய தாகும்; ஆதலின், தணந்தனை ஆயின் - நீ எம்மைப் பிரிவை யாயின், அம் தண் பொய்கை - அழகிய தண்ணிய பொய்கையையுடைய, எந்தை எம் ஊர் - எம் தந்தையினது எம்ஊரின்கண்ணே, கடு பாம்பு வழங்கும் தெருவில் - நஞ்சின்கடுமையையுடைய பாம்புகள் ஓடும் தெருவில், நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம் - நீ முன்பு நடுங்குதற்குரிய மிக்க துன்பத்தை நீக்கிய எம்மை, எம் இல் உய்த்துக்கொடுமோ - எம்முடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக.
(முடிபு) நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; தேனும் புளிக்கும்;தணந்தனையாயின் எம்மை எம் இல் உய்த்துக் கொடுமோ.
(கருத்து) எம்மை எம் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக.
(வி-ரை.) தண்ணியதாய் ஆடுதற்கினியதாகிய நீர் நெடுநேரம்ஆடியபின் கண்சிவத்தற்குக் காரணமாயினமையின் வெறுப்பைத்தருவதாயிற்று. தேன் முதலில் இனிதாகிப் பின் நாட் செல்லச் செல்லப்புளிக்கும்; ‘இனிதாய்ப் பின் தீங்கு விளைத்தலின் தேன் உவமம்’(சீவக. 222) என்பர் நச்சினார்க்கினியர். இவ்விரண்டு உவமைகளும்’‘யாம் உனக்கு இனியமாகியிருந்தும் நெடுங்காலம் பழகினமையின் நின்னால் வெறுத்தற்குரிய மாயினேம்’ என்னும் நினைவுப்பற்றிக் கூறப் பட்டன; ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’ என்னும் பழமொழி இங்கேநினைத்தற்குரியது.
‘நீ முன்பு எம் அஞர் களைந்தாய்’ என்றது தலைவனது பழையஅன்பை நினைவுறுத்தியபடி.
கொடுமோ: மோ முன்னிலையசை. எம்மே: ஏ அசைநிலை.
(மேற்கோளாட்சி) மு. தேன் முன் இனிதாய்ப் பின் தீங்கு விளைக்கும் இயல் பினது (சீவக. 222, ந.) 5. கடியென்னும் உரிச்சொல் அச்சப் பொருளில் வந்தது (தொல்.உரி. 87, தெய்வச்.)
மு. தலைவனைத் தலைவி நீங்கித் தனிமையுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின்கண் தலைவி கூறியது(தொல். கற்பு. 6, இளம்.); பரத்தையிற்பிரிவால் தலைவர்க்கும் தலைவி யர்க்கும் தோன்றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக்கருதித் தோழி கூற்று நிகழ்த்துங் காலத்து அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக்கண்ணே தனக்கு வருத்தந் தோன்றிற்றாகக் கூறுதலும் உரித்து; ‘இதனுள் இல்லறத்தினை நீ துறந்தாயாயின் எம்மை எம்மூர்க்கண்ணே விடுகவெனத் தனக்கு வருத்தந் தோன்றிற்றாகத் தோழி கூறியவாறு காண்க’ (தொல். பொருள், 32, ந).
ஒப்புமைப் பகுதி 1. நீராடிற் கண் சிவத்தல்: “அருவி தாஅய் .... பனிபொரு மழைக்கண் சிவப்ப”, “நீத்தம் .... அரிமதர் மழைக்கண் சிவப்ப .... ஆடுகம் வம்மோ” (அகநா. 278:7-11, 312:4-8.)
2. தேன் புளித்தல்: ‘தேனுக்கு இன்சுவை நிகழ்ந்த காலத்தே புளிச் சுவை நிகழுமாறுபோல’ (சீவக. 2382, ந.) 3-4. பெருங். 2. 16:50-51.
5. கடும்பாம்பு வழங்குந்தெரு: “அருவரை யுள்ளதாஞ் சீறூர் வருவரையுள், ஐவாய நாகம் புறமெல்லாம்” (திணைமா. 13).
(354)