(தலைவி தலைவனுடன் போயினபின், “என்மகள் எங்ஙனம் பாலையிற் செல்லும் ஆற்றல் பெற்றாள்?” என்று செவிலி கூறி வருந்தியது.) 356. | நிழலான் றவிந்த நீரி லாரிடைக் | | கழலோன் காப்பக் கடுகுபு போகி | | அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த | | வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய | 5 | யாங்குவல் லுநள்கொ றானே யேந்திய | | செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த | | பாலும் பலவென வுண்ணாள் | | கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே. |
என்பது மகட் போக்கிய செவிலித்தாய் உரைத்தது.
(மகட் போக்கிய - தலைமகள் தலைவனுடன் போதற்குக் காரண மாகிய.)
கயமன். (பி-ம். கயமனார்). (பி-ம்.) 1. ‘நிழலான்று விரிந்த’ 4. ‘வெவ்வங்’, ‘குடித்தி’, ‘குடித்திய’7. ‘பரலும் பல’.
(ப-ரை.) ஏந்திய செ பொன் புனை கலத்து - கையிலேந்திய செம்பொன்னாலாகிய புனைந்த பாத்திரத்தில் உள்ள,அம் பொரி கலந்த - அழகிய பொரியோடு கலந்த, பாலும்பல என - பாலையும் மிக்கன என்று கூறி, உண்ணாள் - உண்ணாளாகிய, கோல் அமை குறு தொடி - திரட்சியமைந்தகுறிய வளையையணிந்த, தளிர் அன்னோள் - தளிரை ஒத்தமென்மையையுடைய என்மகள், நிழல் ஆன்று அவிந்த நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல் அரு இடை - நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்தினிடத்தே, கழலோன் காப்ப - வீரக்கழலையுடைய தலைவன் தன்னைப் பாதுகாப்ப, கடுகுபு போகி - விரைந்து சென்று, அறுசுனை மருங்கின் - நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில், மறுகுபு வெந்த - உலர்ந்து வெம்மையைக் கொண்ட, வெ வெ கலுழி - மிக்க வெப்பத்தை யுடைய கலங்கல் நீரை, தவ்வென - தவ்வென்னும் ஓசைபட, குடிக்கிய - குடிக்க, யாங்கு வல்லுநள் - எவ்வாறு வலிய ளானாள்?- (முடிபு) உண்ணாளாகிய தளிரன்னோள், போகிக் குடிக்கிய யாங்குவல்லுநள்?
(கருத்து) என் மகள் எங்ஙனம் பாலைநிலத்திற் செல்லும் வன்மையை யுடையளானாள்? (வி-ரை.) இது செவிலி தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கியது.பாலை நிலத் தலைவன் கழலுடையனாதலை இந்நூல் 7-ஆம் செய்யுளாலும் உணரலாகும்.
‘செம்பொற் புனைகலத் தேந்தியபால்’ என்றது தம் செல்வ நிலைமையைக் குறித்தபடி. ‘இத்தகைய செல்வம் நிரம்பிய மனையில் இருந்தவள் பாலைநிலத்திற் செல்ல நேர்ந்ததே!” என்பது செவிலியின் நினைவு.
பலவென்றது அளவின் பெருமையைச் சுட்டி நின்றது; சிறிது நீரைச்சிலநீரென்னும் வழக்குப் போன்றது. தளிரன்னோளென்றது தலைவியின்மென்மையை நினைந்தது.
ஒப்புமைப் பகுதி 1. பாலை நிலத்தில் நிழல் அறுதல்: “நிழலுரு விழந்த வேனிற் குன்றத்துப், பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்” (மதுரைக். 313-4); “நிழறேய்ந் துலறிய மரத்த .... காடு”, “நிழலறு நனந்தலை”, “மரநிழ லற்ற வியவிற் சுரன்”, “நிழன்மா யியவின்” (அகநா. 1:11-9, 103:1, 353:15, 395:7); “விடுசுடர் நடுவுநின் றடுதலி னிழலும், அடியகத் தொளிக்கு மாரழற் கானத்து” (திருவாரூர். மும்மணிக். 13.)
ஆன்றவிதல்: புறநா. 191:6.
3. அறுசுனை: குறுந். 347:1; கலி. 12:3; அகநா. 1:12.
4. தவ்வென; நெடுநல். 185; நற். 319:2; குறள். 1144.
5-7. நற். 110:1-8; அகநா. 219:5-7.
8. கோலமை தொடி: குறுந். 233:7, ஒப்பு. 364:3.
குறுந்தொடி: 384:2.
தளிரன்னோள்: நெடுநல். 148; நற். 251:7; ஐங். 38:3, 176:4, 365:5; கலித். 13:19.
5-8. அகநா. 89:19-22, 105:8.
மு. அகநா. 207.
(356)
|