பேயன். (பி-ம்.) 4. ‘னுயிரா வசைஇப்’ 6. ‘புதல்வற் புல்லின்’.
(ப-ரை.) பாண--, விறலவன் - வெற்றியையுடையதலைவன், மாலை விரிந்த பசு வெள் நிலவில் - மாலைக்காலத்திலே விரிந்த இளைய வெள்ளிய நிலாவொளியில்,குறுகால் கட்டில் நறு பூ சேக்கை - குறிய கால்களையுடையகட்டிலினிடத்தேயுள்ள நறிய மலர் பரப்பிய படுக்கையில்,பள்ளி யானையின் உயிர்த்தனன் - படுத்தலையுடையயானையைப்போலப் பெருமூச்சு விட்டானாகி, நசையின் - விருப்பதினால், புதல்வன் தழீஇயினன் - தன் பிள்ளையைத் தழுவினான், புதல்வன் தாய் - அப்பிள்ளையின் தாயாகிய தலைவி, அவன் புறம் கவைஇயினள் - அத்தலைவனது புறத்தைத் தழுவினாள், கண்டிசின் - இதனைப் பார்ப்பாயாக; பண்பு உடைத்து - இச்செயல் அழகையுடையது!
(முடிபு) பாண, விறலவன் புதல்வற்றழீஇயினன்; தாய் அவன்புறங்கவைஇயினள்; கண்டிசின்; பண்புடைத்து!
(கருத்து) தலைவி புலவி தணிந்தாள்.
(வி-ரை.) பாணன் வாயிலாகப் புக்கவிடத்து மறுத்த தலைவி,தலைவனே எதிர்ப்பட்டுப் பாயலிற் படுத்துப் புதல்வனைத் தழுவியகாலத்தில் தான் புலவி தீர்ந்து சென்று அவனைத் தழுவினாள்; இக்கருத்தை இச்செய்யுளின் ஆசிரியர்,
| “புதல்வற் கவைஇயினன் றந்தை மென்மொழிப் |
| புதல்வன் றாயோ விருவருங் கவைஇயினள் |
| இனிது மன்றவவர் கிடக்கை |
| நனியிரும் பரப்பினிவ் வுலகுட னுறுமே” (ஐங். 409) |
என்று பிறிதோர் இடத்தும் அமைத்தனர்.
கண்டிசின்: சின் முன்னிலையசை. பண்பு - கற்புக் குணமெனலுமாம்;தலைவனது பிழையை மறந்து புலவி நீங்கி அவனைத் தழுவிய இச்செயல்கற்புப்பண்பை உடையதெனக் கொள்க. அம்ம: வியப்பைப் புலப் படுத்தியது. பசு வெண்ணிலவு: பசுமை இளமையிற் சென்றது.
மேற்கோளாட்சி மு. தலைவியின் மாண்புகளை அகம்புகல் மரபின் வாயில்கள்தம்முட் கூறியது (தொல். கற்பு. 11, இளம்).
ஒப்புமைப் பகுதி 2. பசுவெண்ணிலவு: குறுந். 129:4, ஒப்பு; அகநா. 57;11, 3, கட்டிலும் சேக்கையும்: நெடுநல். 115-35; அகநா. 93:13-5.
4. தலைவன் யானையைப்போல உயிர்த்தல்: குறுந். 142:4,ஒப்பு. 5. தலைவன் புதல்வனைத் தழுவுதல்: “முதல்வன் பெரும்பெயர்முறையுளிப் பெற்ற, புதல்வற் புல்லிப் பொய்த்துயி றுஞ்சும்” (கலித்.75:24-5).
6. புதல்வன்தாய்: குறுந். 8:6, ஒப்பு. மு. ஐங். 402.
(359)