(தலைவியின் நோய் முருகனால் வந்ததெனக் கருதித் தாய் வெறியாட்டெடுத்தவிடத்துத் தோழி வெறியாடும் வேலனை நோக்கி, “தலைவி யின் நோயைப் பரிகரிக்க எண்ணி இடும் இப்பலியை அந்நோய்க்குக்காரணமாகிய தலைவனது மார்பும் உண்ணுமோ?” என்று கூறும் வாயிலாகஅறத்தொடு நின்றது.)
 362.    
முருகயர்ந்து வந்த முதுவாய் வேல  
    
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்  
    
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு  
    
சிறுமறி கொன்றிவ ணறுநுத னீவி  
5
வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய  
    
விண்டோய் மாமலைச் சிலம்பன்  
    
ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே. 

என்பது வெறிவிலக்கித் தோழி அறத்தொடு நின்றது.

வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் (பி-ம். வேற்பற்றூர்க் கண்ணகன் கூத்தன்.)

     (பி-ம்.) 1. ‘வேலன்’ 2. ‘வினவுத லுடையேன்’ 3. ‘சில்லவிழடையொடு’ 7. ‘தண்டா ரகலமு’.


     (ப-ரை.) முருகு அயர்ந்து வந்த - முருகனை வழிபட்டு வந்த, முது வாய் வேல - அறிவு வாய்த்த வேலனே, சினவல் ஓம்புமதி - கோபித்தலைப் பாதுகாப்பாயாக; வினவுவது உடையேன் - நின்னைக் கேட்பது ஒன்று உடையேன்: பல்வேறு உருவின் - பலவாகிய வேறுபட்ட நிறத்தையுடைய, சில் அவிழ் மடையொடு - சில சோற்றையுடைய பலியோடு, சிறு மறி கொன்று - சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இவள் நறு நுதல் நீவி - இத்தலைவியினது நறிய நெற்றியைத் தடவி, வணங்கினை கொடுத்தியாயின் - முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயாயின், அணங்கிய -இவளைத் துன்புறுத்திய, விண்தோய் மா மலை சிலம்பன் - வானத்தை அளாவிய பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவனது, ஒள் தார் அகலமும் - ஒள்ளிய மாலையை யணிந்த மார்பும், பலி உண்ணுமோ - நீ கொடுக்கும் பலியைஉண்ணுமோ?

     (முடிபு) வேல, சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்:மறிகொன்று, நுதல் நீவிக் கொடுத்தியாயின் சிலம்பன் அகலமும் பலிஉண்ணுமோ?

     (கருத்து) இவளுக்குற்ற நோய் ஒரு தலைவனால் வந்தது.

     (வி-ரை.) முது வாய் வேலன் - முதுமை வாய்ந்த வேலனெனலும்பொருந்தும். பலவகை நிறங்களையுடைய சோற்றை வேலன் முருகனுக்குப்பலியாக இட்டான். சிறுமறியென்றது இரங்கத்தக்க இளமையுடைய தென்னும் நினைவிற்று.

     நுதனீவியென்று பொதுப்படக் கூறினும் மறியின் உதிரம் கலந்த மண்ணால் நுதல் நீவுதல் மரபென்பது.

  
“....... ...... ...... வாணுதலின்  
  
 மன்றி லரிந்த மறியின் குருதியின் மண்ணுமள்ளிச் 
  
 சென்றொரு வேலர்கை தீண்டவென் செய்தது தீவினையே”    (அம்பிகா. 267)  

என்னும் செய்யுளால் தெரியவருகிறது. அச்சம் நீக்குவதற்குத் தடவுதலும் உண்டு. சிலம்பன்: இடுகுறி மாத்திரையாய் நின்றது (திருச்சிற். 128, பேர்.)

     இந்நோய் தலைவனது மார்பால் வந்தது; அதனையன்றிப் பிறிதுமருந்தில்லை யென்பாள் ‘அகலமும் உண்ணுமோ பலியே’ என்றாள். அஃது உண்ணாதாதலின் இது செய்தும் பயனில்லையென்பது இதனாற் போந்தது.

     இங்ஙனம் தோழி வெறிவிலக்கினமையின், தாய்க்கு ‘அச்சிலம்பன் யார்?’ என்னும் ஆராய்ச்சி பிறக்கும்; அது வரைதற்கு ஏதுவாகும்.

     மேற்கோளாட்சி 1. கண்டோர் கேட்பத் தலைவி கூறியது ( தொல். செய். 197, பேர்.); செவிலி கேட்பத் தலைவி கூறியது. ( தொல். செய். 196, ந.)

     மு. வெறியாடுமிடத்து வேலற்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது (இறை. 16); வேலனொடு கூறுதற்கண் தலைவி உசாவியது( தொல். களவு. 24, இளம்; பொருள். 13, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. முதுவாய் வேலன்: அகநா. 388:19.

     3. சில்லவிழ் மடை: “புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி” (புறநா. 360:18.)

     4. நுதல் நீவுதல்: குறிஞ்சிப். 182; நற். 28:2, 316:6; கலித். 21:6;அகநா. 49:6, 165:9. 240:10; தமிழ் நெறி. மேற். 96.

     1-4. வேலன் சிறுமறி கொல்லல்: “சிறுகுள கருந்துபு தாய்முலை பெறாஅ, மறிகொலைப் படுத்தல் வேண்டி வெறிபுரி, ஏதில் வேலன்” (அகநா. 292:3-5.)

     5-7. அணங்கிய அகலம்: “நாடன், மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்” (அகநா. 22:2-3.)

 மு. 
“தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய  
  
 எண்ணினை கொடுத்தி யாயின்  
  
 அண்ண லாகமு முண்ணுமோ பலியே”    (தமிழ் நெறி. மேற். 104); 
  
    “வண்டா ரிரும்பொழில் வல்லத்துத் தென்னற்கு மாறெதிர்ந்து  
  
     விண்டா ருடலின் மறியறுத் தூட்டி வெறியயர்ந்து  
  
     தண்டார் முருகற் றருகின்ற வேலநற் றண்சிலம்பன்  
  
     ஒண்டா ரகலமு முண்ணுங் கொலோநின் னுறுபலியே”    (பாண்டிக்.); 
  
    “கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால்  
  
     வேல னயரும் வெறியாட்டுச் - சால  
  
     மடமார் மயின்முருக னன்றியே யண்ணல்  
  
     தடமார்பு முண்ணுமோ தான்”     (கிளவித்தெளிவு.) 
(362)