(வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அப்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப, “மகளிர் துணங்கை யாடும் நாளும், மள்ளர் சேரிப்போர் செய்யும் நாளும் வந்தன; இப்பொழுது தலைவன் வலிய என்பால் அன்பு கொள்ளுதலை அறியலாம்” என்று கூறியது.)
 364.    
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் 
    
வாளை நாளிரை பெறூஉ மூரன்  
    
பொற்கோ லவிர்தொடித் தற்கெழு தகுவி  
    
எற்புறங் கூறு மென்ப தெற்றென  
5
வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர்  
    
துணங்கை நாளும் வந்தன வவ்வரைக்  
    
கண்பொர மற்றதன் கண்ணவர்  
    
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.  

என்பது வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது.

ஒளவையார் (பி-ம். அவ்வையார்.)

     (பி-ம்.) 1. 'அரிப்பவர்'; 3. 'பொற்கோல் விற்கொடித'், 'லவிர்தொடி தற்கெழு'; 4. 'என்பதேற்றேன'்; 6. 'வவரைக'்; 7. 'கண்போன்'; 'கணவர'், 'களவர'்; 9. 'மண்கொணற'், 'மண்கொளற'், 'மண்கொணற்கு', 'மன்னர்போரே'.

     (ப-ரை.) அரில் பவர் பிரம்பின் - பிணக்கையுடைய கொடிப் பிரம்புகளைப் போன்ற, வரி புறம் நீர் நாய் - கோடுகள் பொருந்திய புறத்தையுடைய நீர் நாயானது, வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் - வாளை மீனாகிய நாட்காலை உணவைப் பெறுகின்ற ஊருக்குத் தலைவனுடைய, பொன் கோல் அவிர் தொடி - பொன்னாலாகிய திரட்சியையுடைய விளங்குகின்ற வளையையணிந்த, தன்கெழு தகுவி - தனக்குப்பொருந்திய தகுதியுடைய பரத்தை, என் புறம் கூறும் என்ப - என்னைப் புறங்கூறுவளென்று கூறுவர; தெற்றென - அவள் கூறுவது உண்மையா அன்றா என்பது விளங்கும்படி, வணங்கு இறை பணைதோள் எல் வளை மகளிர் - வளைந்தசந்தையுடைய மூங்கிலைப் போன்ற தோள்களில் விளக்கத்தை யுடைய வளையையணிந்த மகளிர்க்குரிய, துணங்கை நாளும் வந்தன - துணங்கைக் கூத்தாடும் நாட்களும் வந்தன; அ வரை - அக்காலத்தில், கண் பொர - ஒருவர்கண் மற்றொருவர்கண்ணோடு மாறுபடும்படி, அதன்கண் - அத்துணங்கைக் கூத்தினிடத்து, அவர் மணம் கொளற்கு - அம்மகளிரது மணத்தைக் கொள்ளும் பொருட்டு, மள்ளர்போர் - மள்ளர்களுடைய சேரிப் போரானது, இவரும் - விரும்பிக்கொள்ளப்படும்.

     (முடிபு) ஊரன் தகுவி புறங்கூறுமென்ப; தெற்றென நாளும்வந்தன; அதன்கண் மள்ளர்போர் அவர் மணங்கொளற்கு இவரும்.

     (கருத்து) என்னைத் தலைவனே விரும்பி அடைந்தான்.

     (வி-ரை.) சேரிப்பரத்தையொருத்தி தன்னை, “இவள் தலைவனைப் புறம்போகாவாறு செய்தாள்” என்று புறங்கூறியதையறிந்த இற்பரத்தை,“தலைவனே வலிய வந்து என்னை விரும்பினான். இப்பொழுது வரும்விழாவில் வீரர் தம் அன்புக்குரியாரோடு ஒன்றுபட்டு விளையாடுவர்.அக்காலத்தில் அவன் வலிய என்பால் அன்புடையனாதலை யாவரும்அறியலாகும்” என்று கூறினாள்.

     பிரம்பின் தூற்றிலுள்ள நீர்நாயென்றலும் பொருந்தும்;

  
“வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்  
  
 முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்”    (அகநா. 6:18-9) 

     பொற்கோலவிர்தொடி யென்றது, ‘தன்பாலுள்ள செல்வ மிகுதியால் என்னைப் புறங்கூறினாள் போலும்!’ என்னும் நினைவிற்று. தற்கெழு: தன்னென்றது தலைவனை. தெற்றென - யான் தலைவனை அகப் படுத்தலின்றி அவன் தானே வலிய என்பாற் படுடிதல் விளங்கும்படி.

     துணங்கை - மகளிர் விளையாட்டில் ஒன்று; இந்நூல் 31-ஆம்செய்யுளைப் பார்க்க. அத்துணங்கையில் தலைவன் தலைக்கை தருவான்.

     விழாவில் துணங்கையும் மள்ளர் போரும் ஒருங்கே நிகழும் (குறுந். 31; கலித். 27:19-20, 24, 30:13-4.)

     ஒப்புமைப் பகுதி 1. அரிற்பவர்ப் பிரம்பு: குறுந். 91:1.

     1-2. நீர்நாய் வாளை நாளிரை பெறுதல்: “பொய்கைப் பள்ளிப்புலவுநாறு நீர்நாய், வாளை நாளிரை பெறூஉ மூர” (ஐங். 63:1-2);“நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய், வாளையொ டுழப்ப”, “பொய்கை நீர்நாய்ப் புலவுநா றிரும்போத்து, வாளை நாளிரை தேரு மூர” (அகநா. 336:4-5, 386:1-2); “வாளை நீர்நாய் நாளிரை பெறூஉ” (புறநா.283:2);பெரிய. 38:115; கம்ப. பம்பைப். 22.

     3. கோல் அவிர்தொடி: குறுந். 356:8, ஒப்பு. தகுவி: அகநா. 196:13.

     6. வணங்கிறைப் பணைத்தோள்: புறநா.32:3. பணைத்தோள்:குறுந். 268:6, ஒப்பு.

     5-6. மகளிர் துணங்கை: குறுந். 31:2, ஒப்பு.

     5-8. தலைவன் பரத்தையரோடு துணங்கையயர்தல்: நற். 50: 1-3; கலி. 66: 17-8, 70: 13-4, 73: 16-7; அகநா. 176:15. மு. அகநா. 336.

(364)