(காப்பு மிக்கதனால் வேறுபட்ட தலைவியின் நிலைகண்டு, “இஃதுஎக்காரணத்தால் உண்டாகியது?” என்று வினவிய செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.)
 366.    
பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்  
    
சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ  
    
வெறியாள் கூறவு மமையா ளதன்றலைப்  
    
பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த  
5
வள்ளிதழ் நீல நோக்கி யுள்ளகை  
    
பழுத கண்ண ளாகிப்  
    
பழுதன் றம்மவிவ் வாயிழை துணிவே.  

என்பது காவல்மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,“இவ்வேறுபாடு எற்றினானாயது?” என்று செவிலி வினாவத் தோழி கூறியது.

பேரிசாத்தன் (பி-ம். பேரீசாத்தன், பெரிச்சாத்தன்.)

     (பி-ம்.) 1. 'பால்வரைத்'; 6. 'பொழுகுகண்ணள'், 'ளாகிய'; 7. 'பழுதாலம்ம'.

     (ப-ரை.) இ ஆய் இழை - இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி, வெறியாள் கூறவும் அமையாள் - வெறி யாடும் மகள் இந்நோய் முருகனாலாயது என்று சொல்லவும் அமைதி பெறாளாய், அதன் தலை - அதன் மேலும், பசு கண் மாசுனை பல் பிணி அவிழ்ந்த - பசிய இடத்தையுடைய கரிய சுனையினிடத்தே பல கட்டு அவிழ்ந்த, வள் இதழ் நீலம் நோக்கி - வளவிய இதழையுடைய நீலமலரைப் பார்த்து, உள் அகைபு - நெஞ்சுள்ளே வருந்தி, அழுத கண்ணள் ஆகி - அழுத கண்களையுடையவளாகி, துணிவு - துணிந்தது, பழுது அன்று - குற்றமற்றது; பால் வரைந்து அமைத்தல் அல்லது - பழவினையினாலே வரையறுத்துப் பொருத்தப் பட்டதன்றி, அவர் வயின் - அத்தலைவர் திறத்தில், சால்பு அளந்து அறிதற்கு - தகுதியை வரையறுத்து அறிவதற்கு, யாம் யார் - யாம் எத்தகுதியை உடையேம்?

     (முடிபு) இவ்வாயிழை அமையாள், நீலம் நோக்கி அழுதகண்ணளாகித் துணிவு பழுதன்று.

     (கருத்து) தலைவிக்கு நீலப்பூவைத் தந்து நட்புச்செய்த அன்பன் ஒருவன் உளன்.

     (வி-ரை.) பால்வரைந்தமைத்தலினாலே கூடினரென்பது அறத்தொடு நிற்கும் வகையுள் ஒன்றாகிய தலைப்பாடு; ‘தலைப்பாடு - இருவரும் தாமே எதிர்ப்பட்டார், யான் அறிந்திலேனெனக் கூறுதல்’ (தொல். பொருள். 13, ந.); சால்பளந்தறிதற்கு யாம் யாரென்றது தலைவனை ஏத்தல்.

     நீலநோக்கி அழுதனளென்றது அத்தகையதொரு நீலப்பூவைத் தனக்குத் தந்த தலைவனை நினைத்ததைக் குறித்தபடி; இஃது ஏதீடு.ஆகியென்ற எச்சம் துணிவென்னும் தொழிற்பெயரோடு முடிந்தது.அமையாள் நோக்கி ஆகித் துணிவு பழுதன்றென வினைமுடிவு செய்க.

     ஓ. அம்ம, ஏ: அசை நிலைகள்.

     ஒப்புமைப் பகுதி 1-2. தலைவன் சால்பு அறியப்படாமை: குறுந். 377:4.

     3. அதன்றலை: குறுந். 302:2.

     4-5. பிணியவிழ்ந்த பூ: குறுந். 220:4-5.

(366)