(தலைவியை நோக்கி, “தலைவனுடன் செல்வாயாக” என்று தோழிகூறியது.)
 369.    
அத்த வாகை யமலை வானெற்  
    
றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக் 
    
கோடை தூக்குங் கானம் 
    
செல்வாந் தோழி நல்கினர் நமரே. 

என்பது தோழி, கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.

குடவாயிற் கீரத்தனார்.

     (பி-ம்.) 3. 'தூங்குங்'.

    (ப-ரை.) (ப-ரை.) தோழி--, நமர் - நம் தலைவர், நல்கினர் - தண்ணளி செய்தனர;. ஆதலின், அத்தம் வாகை- அருவழியி லேயுள்ள வாகைமரத்தின், அமலை வால் நெற்று - ஒலியை யுடைய வெள்ளிய நெற்றுக்களை, அரிசி - அவற்றின் விதை, அரி ஆர் சிலம்பின் ஆர்ப்ப - உள்ளிடு பரலையுடைய சிலம்பைப் போல ஆரவாரிக்க, கோடை தூக்கும் - மேல்காற்றுஅலைக்கின்ற, கானம் செல்வாம் - பாலை நிலத்திற் செல் வோமாக.

     (முடிபு) தோழி, நமர் நல்கினர்; கானம் செல்வாம்.

     (கருத்து) தலைவனுடன் போவேமாக.

     (வி-ரை.) பசுமையற உலர்ந்ததாதலின் வெண்ணிறமுடையதாயிற்று. அரிசியென்றது வித்தினை. நெற்றைக் கோடை தூக்குமென இயைக்க.

    “தலைவர் நின்னை உடனழைத்துச்சென்று தம்மூரில் மணப்பதாகக் கூறினர்; ஆதலின் பாலைநிலத்தின் வழியே அவரோடு யாம் செல்வேமாக”என்று தோழி கூறினாள்.

     ஒப்புமைப் பகுதி 1. வாகையின் நெற்று வெண்ணிறமுடைமை: குறுந். 7:5.

     3. காற்றுத் தூக்கல்: “செல்வளி தூக்கலின்”, “கோடை தூக்கு தொறும்”, “உறுகா றூக்க” (நற். 107:4, 162:10, 345:3); “உறுவளி தூக்கு முயர்சினை” (கலித். 84:1.)

     1-3. கோடைக் காற்றால் வாகைநெற்று ஒலித்தல்: அகநா. 45:1-3. காற்றால் வாகைநெற்று ஒலித்தல்: குறுந். 7:4-5,ஒப்பு.

(369)