(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர் சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில் மீள்வர்’’ என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.)
 37.    
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 
    
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 
    
மென்சினை யாஅம் பொளிக்கும் 
    
அன்பின தோழியவர் சென்ற வாறே. 

என்பது தோழி, கடிதுவருவாரென்று ஆற்றுவித்தது.

பாலைபாடிய பெருங்கடுங்கோ.

    (பி-ம்) 1. ‘நல்கினு’; 3. ‘பிளக்கும்’, ‘பிளிக்கும்’.

    (ப-ரை.) தோழி ---, நசை பெரிது உடையர் - தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நல்கலும் நல்குவர் - நல்குதலையும் செய்வர்; அவர் சென்ற ஆறு - அவர் போன வழிகள், பிடி பசி - பெண்யானையினது பசியை, களைஇய - நீக்கும்பொருட்டு, பெருகைவேழம் - பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல் சினை யாஅம் பொளிக்கும் - மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும், அன்பின - அன்பைப் புலப்படுத்தற்கு இடமாக உள்ளன.

    (முடிபு) நசை பெரிதுடையர்; நல்குவர்; அவர் சென்ற ஆறு அன்பின.

    (கருத்து) தலைவர் விரைவில் மீண்டு வருவர்.

    (வி-ரை.) நல்கல் - தலையளிசெய்தல் (குறள்.1156, பரிமேல்.) நல்கலும் நல்குவர் - நல்குதலையுஞ் செய்வரென்னும் பொருளினது; நல்குவரென்பது காரியவாசகமாக நின்றது (தொல். வேற்றுமை மயங். 29, ந.); இங்ஙனம் வரும் தொடர்கள் பல இடங்களிற் காணப்படுகின்றன; “அணியலு மணிந்தன்று” (புறநா. 1:5) என்பதற்கு, ‘அழகுசெய்தலும் செய்தது’ என்றும், “இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்” (சிலப். 22:154) என்பதற்கு, ‘இயங்குதலையுஞ் செய்யும்; மயங்குதலையுஞ் செய்யும்’ என்றும் உரையாசிரியர்கள் எழுதியிருத்தலைக் காண்க. யாமரத்தைப் பொளிப்பதற்கேற்ற கருவியுடைமையைப் புலப்படுத்த, ‘பெருங்கை வேழம்’ என்றாள்.

    யாஅம்: இது பாலை நிலத்திலுள்ளதொரு மரம்; யாவெனவும் வழங்கும்; அவ்வழக்கு விளா விளாம், மரா மராமெனச் சில மரப்பெயர்கள் வழங்கி வரும் முறையைப் போன்றதென்று தோற்றுகின்றது. இம் மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கதென்று தெரிகின்றது. பொளித்தல் - உரித்தல்; “பெரும்பொளி வெண்ணார்” (அகநா. 83:6).

     இயல்பாகவே நின்பால் விருப்பமும் தலையளி செய்தலும் உடைய ராதலாலும், தாம் செல்லும் வழியில் நிகழும் நிகழ்ச்சி ஆண்பாலார் தமக்குரிய மனைவியரிடத்தில் அன்பு வைத்துப் பாதுகாக்கும் கடமையை நினைப் பூட்டும் இயல்புடையதாயினமையாலும் அவர் விரைந்து வந்துவிடுவ ரென்பது குறிப்பு.

    தலைவனது பிரிவாற்றாமல் வருந்தும் தலைவிக்குத் தோழி, கருப் பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறுதல் வற்புறுத்தலாகுமாதலின் (தொல். பொருளியல், 37) இங்ஙனம் கூறினாள்.

     (மேற்கோளாட்சி) மு. “இதனுள் முன்பே நெஞ்சகத்து அன்புடையார் அதன் மேலே களிறு தன்பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய 1. ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப் பொளித்து ஊட்டும் அன்பினையுடைய, அவர் சென்ற ஆறு, அதனைக் காண்பர்காணென்று அன்புறு தகுந கூறிப்பிரிவாற்றாதவளை வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது” (தொல். பொருளியல், 37, ந.). வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல் (நம்பி.170)

    ஒப்புமைப் பகுதி 1. நசை பெரிதுடையார் : “யாரினு மினியன் பேரன்பினனே”, “நசைநன் குடையர்” (குறுந். 85:1, 213:1). தலைவர் நல்குதல்: “நல்கார் நயவா ராயினும்”, “துறைவன், நல்கிய நாடவச் சிலவே” (குறுந். 60:5,) 328: 3-4); “நல்குவன் போலக் கூறி, நல்கானாயினும்” (ஐங். 167:3-4): “நல்குவ ரென்னு நசை” (குறள். 1156). நல்கலும் நல்குவர்: குறுந். 218:4, 251:3, 268:2; நற்.106:1, 147:7, 318:1; ஐங்.36:3; கலி.23:7, 54:8, 14, 55:19; அகநா. 8:18; புறநா. 1:5, அடிக்.

    3. யாமரம்: தொல். உயிர்மயங்கு. 27.3-4. யானை யாமரத்தைப் பொளித்தல்: (குறுந். 232:4-5); “உம்ப லகைத்த வொண்முறி யாவும்” (மலைபடு.429); “பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத், தருஞ்சுரக் கவலைய வதர்படு மருங்கின்” (அகநா.17: 16-7).

    2-4. யானை யாவைப் பொளித்துப் பிடிக்கு ஊட்டுதுல்: (குறுந். 255: 1-5, 307: 4-7); “யானைதன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ் சிறந், தின்னா வேனி லின்றுணை யார, முளிசினை யா அத்துப் பொளிபிறந் தூட்டப், புலம்புவீற் றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்” (அகநா. 335: 4-8). பாலை நிலத்தில் யானை பிடியைப் பாதுகாத்தல்: நற்.137:6-7; கலி.11:9.

     மு.  
“புன்றலை மடப்பிடி யுணீஇய ரங்குழை  
  
 நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுட் 
  
 படிஞிமிறு கடியுங் களிறே... .... .. .. .. 
  
 . .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ... 
  
 பிரிந்துசே ணுறைநர் சென்ற வாறே’’         (அகநா. 59: -18)  
(37)
  
 1.  
இவ்வுரையினால், யாஅமென்பதை ஆவென்று நச்சினார்க்கினியர் கொண்டனரென்று தோற்றுகின்றது.