வில்லகவிரலினார். (பி-ம்.) 5. 'மருங்கிலமே'.
(ப-ரை.) பொய்கை ஆம்பல் - பொய்கையிலே உள்ள ஆம்பலினது, அணி நிறம் கொழு முகை - அழகிய நிறத்தையுடைய கொழுவிய அரும்பில், வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு - வண்டுகள் இதழைத் திறக்கும் தண்ணியநீர்த்துறைகளையுடைய ஊருக்கு உரியனாகிய தலைவனோடு,இருப்பின் - நாம் இருந்தால், இரு மருங்கினம் - இரண்டுஉடலையுடையேம்; கிடப்பின் - அவரோடு துயின்றால்,வில் அகம் விரலின் பொருந்தி - வில்லை அகப்படப் பிடித்தவிரல்களைப் போலப் பொருந்தி, அவன் நல் அகம் சேரின் -அவன் தனது நல்ல அகத்தின்கண்ணே சேர்ந்தால், ஒருமருங்கினம் - ஓர் உடலை யுடையேம்.
(முடிபு) ஊரனொடு இருப்பின் இருமருங்கினம்; கிடப்பின் பொருந்தி, சேரின் ஒரு மருங்கினம்.
(கருத்து) தலைவன் தன் விருப்பத்திற்கேற்ப ஒழுகாநிற்ப, யாம் அவன் ஒழுகியவாறே ஒழுகுவேம்.
(வி-ரை.) “தலைவனோடு இருந்தக்கால் தனித்தனியே ஈருடம்பினே மாகியும், கிடப்பின் ஈருடலாயினும் ஓருடல்போல் ஒன்றியும், அவன்பிரிந்து தனது மனை சேரின் யாம் தனித்து எம் உடலாகிய ஓருடலினேமாகியும் இருப்பேம். இங்ஙனம் இருத்தல் அவனது ஒழுகலாற்றிற்கேற்பஅமைவதேயன்றி யாமாக வலிந்து மேற்கொள்வதன்று. தலைவனைஎம்பால் இருத்திக் கொள்ளும் இயல்பிலேம்” என்று பரத்தை கூறினாள்.மருங்கு - இங்கே உடலைக் குறித்தது.
பொய்கை - மானிடர் ஆக்காத நீர்நிலை (சீவக. 337, ந.) கொழுமுகை - மலரும் பருவத்ததாகிய அரும்பு. ஆம்பற்போது மலருஞ் செவ்வியறிந்து வண்டு வாய்திறக்கும்; இது தலைவன் எம்மோடு இருக்குங்கால் அவன் எம் உள்ளக்கருத்துக்கு ஏற்ப ஒழுகுவானென்ற குறிப்பினது (பெருங். 1.35: 211-4.)
வில்லைப் பிடித்த விரல்கள் ஒன்றோடொன்று மிகச் செறிந்திருக்கும்; அதனைக் கூறியது கவவுக்கை நெகிழாமல் அணைந்து நிற்றலை உணர்த்தியது;
| “வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற் |
| பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்று” (சீவக. 2110) |
என்று இவ்வுவமையைத் திருத்தக்கதேவரும் எடுத்தாண்டனர்.
ஏகாரங்கள்: அசை நிலை.
செறிவுக்கு வில்லகவிரலைக் கூறினமையின் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் வில்லக விரலினார் என்னும் பெயர் பெற்றார்.
(மேற்கோளாட்சி) 4. வில்லகவிரலென்பது வந்தது (சீவக. 2110, ந.)
4-5. வினைக்குறிப்பு ஆக்கம் விரிந்தல்லது பொருளுணர்த்தாது (தொல். எச்ச. 36, ந.)
ஒப்புமைப் பகுதி 1-2. வண்டு வாய்திறக்கப் போது மலர்தல்: குறுந். 265: 1-5, ஒப்பு.
(370)