(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை) (பி-ம்.) 4. ‘திரவரு’; 5. ‘யாமத்துக்’; 6. ‘ரவியன்மாரன்றே’, ‘ரவியன்மான்றே’.
(ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக, சாரல் - மலைப்பக்கத்தில், சிறு தினை விளைந்த வியல்கண் இரு புனத்து - சிறிய தினை விளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய கொல்லையில், இரவு அரிவாரின் - இராக்காலத்தே தினைக்கதிரை அரிபவர்களைப்போல, தொண்டகம்சிறுபறை - தொண்டகமாகிய சிறிய பறை, பால்நாள் யாமத் தும் - பாதியிரவிலும், யாமம் காவலர் - இராக் காவலாளிகள்,அவியாமாறு - தூங்காமையினால், கறங்கும் - ஒலிக்கும்,இன்று--, அவர் - அத்தலைவர், வாராராயின்--, நன்று -நலமாகும்.
(முடிபு) காவலர் அவியாமாறு கறங்கும்; இன்று அவர் வாராராயின் நன்று.
(கருத்து) தலைவர் இரவில் வருதல் நன்றன்று.
(வி-ரை.) வாழி: அசைநிலை. அவர்: நெஞ்சறி சுட்டு. ‘இன்று வாராராயின்’ என்று கூறினும், என்றும் இராவருதல் நன்றன்றென்பதே தோழியின் நினைவு. தினை விளைந்தமையின் அரிந்தனர். தினையின் மிகுதியினால் இரவிலும் அரிந்தனர்; இதனாற் பகலிலும் அரிந்தமை சொல்லாமே பெறப்பட்டது.
இரவில் விலங்குகள் அணுகாதிருத்தற் பொருட்டுத் தொண்டகப்பறையை முழக்குவர். தொண்டகப்பறை குறிஞ்சிநிலத்திற்கு உரியது.
அவிதல் - தூங்குதல் (குறுந். 6:1) மாறு: ஏதுப் பொருள் தருவதோரிடைச் சொல். ஏகாரம் ஈற்றசை.
தினை விளைந்தமையை உவமை வாயிலாக நினைவுறுத்திப் பகற் குறியையும், காவலர் கடுகுதலைக் கூறி இரவுக் குறியையும் மறுத்துவரைவு கடாயினாள்.
ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு. 3. சிறுதினை:குறுந். 105:1, 133:1. 4. தொண்டகச் சிறுபறை: முருகு. 197; 104:4-6;அகநா. 118:3. 5. பானாள்; குறுந். 94:3, ஒப்பு. 6. யாமம் காவலர்: புறநா. 37:9.
(375)