(“தலைவன் பிரிந்தமையால் என் உடல் மெலியவும் அவனதுஇயல்பு நினைந்து யான் ஆற்றினேன்; நீ ஆற்றாயாதல் என்?” என்றுதலைவி, வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கூறியது.) 377. | மலரே ருண்கண் மாணலந் தொலைய | | வளையேர் மென்றோண் ஞெகிழ்ந்ததன் றலையும் | | மாற்றா கின்றே தோழியாற் றலையே | | அறிதற் கமையா நாடனொடு | 5 | செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. |
என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஅழிந்து கூறியது.
மோசி கொற்றன் (பி-ம். மோசிற்றன.்) (பி-ம்.) 5. ‘சிறுநன் னடையே’.
(ப-ரை.) தோழி--, அறிதற்கு அமையா நாடனொடு - தன் இயல்பு முற்றும் அறிதற்குப் பொருந்தாத தலைவனோடு,செய்து கொண்டதோர் சிறு நல் நட்பு - யாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பானது, மலர் ஏர் உண் கண்மாண் நலம் தொலைய - பூவினை யொத்த மையுண்ட கண்களின் மாட்சிமைப்பட்ட அழகு நீங்க, வளை ஏர் மெல்தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் - வளையையுடைய அழகியமெல்லியதோள் நெகிழ்ந்ததன் மேலும், மாற்று ஆகின்று - பரிகாரமாக ஆகின்றது; அது கருதி யான் ஆற்றா நிற்பவும்,ஆற்றலை - நீ ஆற்றினாயல்லை.
(முடிபு) தோழி, நட்பு மாற்று ஆகின்று; ஆற்றலை,
(கருத்து) தலைவனது இயல்பை உணர்ந்து யான் ஆற்றினேன்.
(வி-ரை.) தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி யினது வேறுபாடு கண்ட தோழி, “நின் அழகிய கண்கள் இயல்பழிந்தன.நின் தோள்கள் ஞெகிழ்ந்தன; இனி என் செய்வோம்!” என்று கவன்றவிடத்துத் தலைவி கூறியது இது.
மலரேருண்கண், மென்றோ ளென்பன பட்டாங்கு கூறினவாதலின் தற்புகழ்ச்சியாகா. தலையும்: உம்மை இழிவுசிறப்பு.
மாற்று - பரிகாரம்; “மாற்றருங் கூற்றம்” (தொல். புறத்.24.)
தலைவனை அறிதற்கமையா நாடனென்றது அவனது நல்லியல்பைநீ அறிந்தாயல்லை யென்னும் நினைவிற்று. சில நாட்களிலே அமைந்தமையின் சிறுநட்பென்றும், நன்மை பயப்பதாதலின் நன்னட்பென்றும்கூறினாள்.
என் உடல் மெலியவும் அவனது நட்பு எனக்குப் பரிகாரமாகின்றதென்ற இக்கருத்து,
| “குன்ற நாடன் கேண்மை | | மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே” (குறுந். 90:6-7) |
என முன்னும் வேற்றுருவத்தில் வந்தது.
ஆற்றலையே: ஏ இரங்கற்பொருட்டு.
ஒப்புமைப் பகுதி 1. மலரேருண்கண்: குறுந். 101:4,ஒப்பு.; நற். 325:7. மாணலம்: குறுந். 74:5, ஒப்பு. 4. அறிதற்கமையா நாடன்: “அவர்வயிற்,சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ” (குறுந். 366:1-2.)
(377)
|