(தலைவனுடன் தலைவி சென்றதை அறிந்த செவிலித்தாய், “என்மகள் போனவழி இன்பத்தைத் தருவதாக அமைக” என்று தெய்வத்தை வாழ்த்தியது).
 378.    
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு  
    
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த் 
    
தண்மழை தலையின் றாக நந்நீத்துச் 
    
சுடர்வாய் நெடுவேற் காளையொடு 
5
மடமா வரிவை போகிய சுரனே. 

என்பது மகட்போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது.

கயமனார்.

     (பி-ம்.) 1. ‘காணாத மாணிழற் படீஇ’; 3. ‘தண்ணளிச்’, ‘தண்மழை தலையலாரைக் குகுந்த தீறத்துச்’; 4. ‘சுடர்படு’; 5. ‘மடவர லரிவை’, ‘போகியகானே’.

    (ப-ரை.) நம் நீத்து - நம்மைப் பிரிந்து, சுடர் வாய் நெடுவேல் காளையொடு - ஒளி பொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, மடம் மாஅரிவை - மடப்பத்தையும் மாமையையும் உடைய தலைவி, போகிய சுரன் - சென்றபாலைநிலம், ஞாயிறு காயாது - சூரியன் வெயில் வீசாமல்,மரம் நிழல் பட்டு - மரத்தின் நிழல் பொருந்தி, மலை முதல்சிறுநெறி - மலையினிடத்தேயுள்ள சிறிய வழியின்கண்,மணல் மிக தாஅய் - மணல் மிகப் பரவப்பெற்று, தண்மழைதலையின்று ஆக - குளிர்ந்த மழை பெய்ததாகுக.

     (முடிபு) சுரன் காயாது நிழற்பட்டுத் தாஅய்த் தலையின்றாக.

     (கருத்து) தலைவி சென்ற பாலைநிலம் இனியதாகுக.

     (வி-ரை.) நிழல் வேண்டியது, கதிரோன் வெம்மையால்துன்புறாதபடி. மணல் பரவுதலால் தலைவியின் மெல்லடி நடத்தற்குநெறி ஏற்றதாகும். மழை பெய்தலின் பாலையின் வெம்மை நீங்கும்.

    அரிவை: தலைவியென்னும் துணையாய் நின்றது. இத்துறை ‘சுரந்தணிவித்தல்’ எனவும் வழங்கும்.

     (மேற்கோளாட்சி) மு. செவிலி தெய்வம் வாழ்த்தியது (நம்பி. 184).

     ஒப்புமைப் பகுதி 1. மரநிழலால் ஞாயிறு காயாத நிலை பெறுதல்: “மாநிழற் பட்ட மரம்பயி லிறும்பின், ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை”(மலைபடு. 271-2.)

     3. தலையின்று: அகநா. 54:3.

     4. நெடுவேல்: குறுந். கட. 4, 390:4.

     5. பி-ம். மடவரலரிவை: குறுந். 321:4, ஒப்பு.

 மு. 
“மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் 
  
 உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்  
  
 சுரநனி யினிய வாகுக தில்ல 
  
 அறநெறி யிதுவெனத் தெளிந்தவென் 
  
 பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’’     (ஐங். 371); 
  
  
“சூன்முதிர் கொண்மூ மின்னுபு பொழியக் 
  
 கானங் கடுமை நீங்குக 
  
 மானுண் கண்ணி போகிய சுரனே”     (தமிழ்நெறி, மேற். 121) 
(378)