(அயலார் தலைவியை வரையும்பொருட்டு வந்த காலத்துத்தலைவிக்குக் கூறுவாளாய், “முன்பு நின்பால் அன்பு பூண்ட தலைவன் இப்பொழுது எங்குள்ளானோ?” என்று தோழி தாய் முதலியோருக்கு உண்மையை வெளிப்படுத்தியது.)
 379.    
இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்  
    
பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கினொடு 
    
கண்ணகன் றூமணி பெறூஉ நாடன் 
    
அறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி 
5
எம்மில் வருகுவை நீயெனப் 
    
பொம்ம லோதி நீவி யோனே. 

என்பது நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தொடு நின்றது.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை)

     (பி-ம்.) 2. ‘கிழங்கின்’; 3. ‘கண்ணமைதுணி’, ‘கண்ணகன் மத்துணி’, ‘ஏர்கண்ணகன் மத்துளி’; 4. ‘சிறு தொடி’; 5. ‘எம்பின்’, ‘எம்மின்’.

    (ப-ரை.) தோழி--, குன்றத்து - குன்றினிடத்தே, பழ குழி அகழ்ந்த கானவன் - பழைய குழியைத் தோண்டியவேட்டுவன், கிழங்கினொடு--, கண் அகல் தூ மணிபெறூஉம்நாடன் - இடம் அகன்ற தூய மணியைப் பெறும் நாட்டையுடையவனும், செறி தொடி - செறிந்த தொடியையுடையாய்,அறிவு காழ்கொள்ளும் அளவை - நின் அறிவு முதிர்கின்றபருவத்தில், நீ எம் இல் வருகுவை என - நீ எம்முடையவீட்டுக்கு இல்லறம் நடத்த வருவாயென்று கூறி, பொம்மல்ஓதி - நெருக்கத்தையுடைய கூந்தலை, நீவியோன் - தடவியவனுமாகிய தலைவன், இன்று யாண்டையனோ - இன்றுஎவ்விடத்தில் உள்ளானோ?

     (முடிபு) தோழி, நாடன் நீவியோன் இன்று யாண்டையனோ?

     (கருத்து) நின்பால் அன்புபூண்ட தலைவன் இப்பொழுது எங்கே உள்ளானோ?

     (வி-ரை.) யாண்டையனோ: ஒகாரம் இரங்கற்பொருட்டு. கானவன் கிழங்கோடு விலைவரம்பறியா மணியையும் பெற்றாற் போல வேட்டை மேற்சென்ற தலைவன் அதனோடு தலைவியையும் பெற்றானென்பது குறிப்பு.

    கானவன் உண்ணும் பொருட்டுக் கிழங்கை அகழ்ந்தான்.

    இஃது உசாவுதல் வாயிலாக அறத்தொடு நின்றது.

     (மேற்கோளாட்சி) மு. செவிலி கேட்பத் தலைவியொடு தோழி உசாவிஅறத்தொடு நின்றது (தொல்.களவு. 24, இளம்.); நொதுமலர் வரையக் கருதிய வழி, தோழி தாய் கேட்பத் தலைவிக்குக் கூறியது (தொல். களவு. 23,ந.); நொதுமலர் வரைவுகூறி உசாவித் தோழி அறத்தொடு நின்றது (தொல். பொருள். 12, ந.)

     ஒப்புமைப் பகுதி 1-3. குன்றத்திற் கானவன் நிலத்தை அகழ்ந்து மணி பெறுதல்: அகநா. 282:2-5.

     6. பொம்மலோதி: குறுந். 191:6, ஒப்பு. ஓதி நீவுதல்: குறுந். 190:1, ஒப்பு.);‘‘பொம்ம லோதி நீவிய காதலொடு’’ (அகதா. 311:7)

 மு. 
“யாண்டுளன் கொல்லோ தானே மாண்குழை 
  
 மொய்யிருங் கூந்தன் முடியாப் பருவத்துப் 
  
 பெறுக நின்னை யானென 
  
 நறுநுத னீவிப் படர்தந் தோனே”     (தமிழ்நெறி. மேற். 96)  
(379)