(தலைவன் வரைபொருளுக்குப் பிரிந்து நெடுங்காலமாக வாராதிருப்ப, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, ‘‘நின்னை வரைந்து கொள்ளும் பொருட்டன்றோ அவர் பொருளீட்டச் சென்றார்; அங்ஙனமிருப்ப நீ அதனை நன்றென்று கருதாமல் வருந்துவது யாதுகாரணம் பற்றி?’’ என்று வினாவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்பால் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)
 38.    
கான மஞ்ஞை யறையீன் முட்டை 
    
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும் 
    
குன்ற நாடன் கேண்மை யென்றும்  
    
நன்றுமன் வாழி தோழி யுண்கண் 
5
நீரொ டொராங்குத் தணப்ப 
    
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. 

என்பது வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது.

கபிலர்.

    (பி-ம்) 1. ‘யறையின்’; 2. ‘தகற்றல், தகறல்’.

    (ப-ரை.) தோழி -, கானம் மஞ்ஞை - காட்டிலுள்ள மயிலானது, அறை ஈன் முட்டை - பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயில் ஆடும் முசுவின் குருளை உருட்டும் - வெயிலில் விளையாடும் முசுவின் குட்டி உருட்டுதற்கு இடமாகிய, குன்றம் நாடன் கேண்மை - மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு, தணப்ப - அவன் பிரிய , உண் கண் நீரொடு - மை தீட்டப்பெற்ற கண்ணினின்று பெருகும் நீரோடு, ஒராங்கு -ஒருபடியாக, உள்ளாது - அப்பிரிவை நினைந்து வருந்தாமல், ஆற்றல் வல்லுவோர்க்கே - பொறுத்துக்கொள்ளுதலில் வன்மையுடையோர்க்கு மாத்திரம், என்றும் நன்று மன் - எக்காலத்தும் மிக நல்லதாகும்.

    (முடிபு) குன்றநாடன் கேண்மை ஆற்றல் வல்லுவோர்க்கு என்றும் நன்று.

    (கருத்து) (கருத்து) தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையி லேனாயினேன்.

    (வி-ரை.) முசு - முகங்கரியதாகிய ஒரு வகைக் குரங்கு. வல்லுவோர்க்கு என்றும் நன்றென்றமையின் தனக்குச் சில காலம் நன்றாகவும், சிலகாலம் நன்றன்றாகவு மிருப்பதென்பது கொள்ளப்படும்: தலைவன் கேண்மை, அவன் தன்னோடு இருக்கும் காலத்தில் நன்றாகவும் பிரிந்தகாலத்தில் துன்பத்தைத் தருவதாகவும் தலைவிக்கு அமைந்தது; இது, “சாரனாடன் கேண்மை, சாரச் சாரச் சார்ந்து, தீரத் தீரத் தீர்பொல் லாதே” (பழம் பாடல்) என்பதனால் விளங்கும். கண்ணீரோடு ஆற்றுதல் அரிதாதலின், ‘அங்ஙனம் செய்வார் மனவலியுடையர் போலும்!’ என்ற நினைவினால் வல்லுவோர் என்றாள். ஒராங்கு - ஒரு பெற்றிப்பட (புறநா.238:15, உரை); தலைவன் உடனுறைந்த காலத்தும் பிரிந்த காலத்தும் ஒருபடித்தாக வென்றவாறு. நீரோடு தணப்ப என்று கூட்டி யான் அழுதுகொண்டிருப்பவும் அதனைக் கருதாமற் பிரிய என்று கொள்ளலுமாம்.

    வாழி: அசைநிலை. வல்லுவோர்க்கே: ஏகாரம் பிரிநிலை; தனக்கு நன்றன்றென்னும் கருத்துப் பெறப்படும். ஏகாரத்தை அசை நிலையாக்கி, மன் ஒழியிசைப் பொருளில் வந்ததாகக் கொண்டு, ‘யான் அவ்வன்மை பெற்றிலேன்’ என்று பொருள் கொள்ளலும் ஒன்று. ஆற்றல் வல்லுவோர்க்கு நன்று என்றமையின் தன்பால் ஆற்றுதற்குரிய வன்மையில்லா மையைப் புலப்படுத்தினாளாயிற்று. நன்று - பெரிதுமாம் (தொல். உரி. 45).

    மயில் அடைகாத்தற்குரிய அதன் முட்டை அங்ஙனம் செய்யப்படாது பாறையின்மேல் தனித்துக் கிடப்பதையன்றி அதனைக் குரங்கின் குட்டி விளையாட்டாக உருட்டுவது போல, தலைவன் உடனிருந்து இன்புறுதற்குரிய தலைவி அவன் பிரிவினால் துன்புறுதலையன்றி, தமக்கு நகை விளைவதொன்றே பயனாக ஊரார் அலர் கூறும் துன்பத்தையும் பெற்றாளென்பது குறிப்பு.

    (மேற்கோளாட்சி) 2. குருளையென்பது குரங்கிற்கு இலேசினால் அமைத்துக் கொள்ளப்படும் (தொல். மரபு. 14, பேர்.); நிரைநேர்பு கணவிரிபோல நின்று முசு என்பதனோடு நிரையொன்றாசிரியத் தளையாயிற்று (தொல். செய்.56, ந.).

    2-3. நாடினர் கொளினேயென்ற இலேசினாற் குருளையென்பது முசுவிற்கும் கொள்ளப்படும்’ (தொல். மரபு. 9, பேர்).

     ஒப்புமைப் பகுதி 3. நாடன் கேண்மை: குறுந். 3:4.

     4. நன்றுமன்: குறுந். 58:2, 134:2, 226:4.

     5. ஒராங்கு: குறுந்.257:1, 316:5. 4-5. தலைவன் பிரிவினால் தலைவி கண்ணீர் விடுதல்: குறுந்.11:2, 22: 1-2, 35: 5, அகநா. 5:21, 5-6.பிரிவை ஆற்ற வல்லவர்: “அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப், பின்னிருந்து வாழ்வார் பலர்” (குறள்.1160).

  மு.  
“வந்தாய் பவரையில் லாமயின் முட்டை யிளையமந்தி 
   
 பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண் போவினிதே  
   
 கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்றென் றில்லை தொழார் குழுப்போற் 
   
 சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையுந் திருவினர்க்கே” 
   
                                    (திருச்சிற். 276.)  
(38)