கருவூர்க் கதப்பிள்ளை. (பி-ம்.) 1. ‘புதைப்பாஅ’; 5. ‘யீங்கையத்துத் துய்ம்மலர்’; 7. ‘முன்னா தென்ப’, ‘முன்னர்த் தென்ப’.
(ப-ரை.) தோழி--, விசும்பு கண் புதைய பாஅய் - வானம் மறையும்படி பரவி, வேந்தர் வென்று எறி முரசின்நல் பல முழங்கி - வேந்தர்கள் பகைவர்களை வென்றுஅறைகின்ற முரசத்தைப் போல நன்மையையுடைய பலமுறைமுழங்கி, வானம் - மேகம், பெயல் ஆனாது - மழை பெய்தலை நீங்காது, காதலர் நனிசேய் நாட்டர் -தலைவர் மிகச்சேயதாகிய நாட்டிலே உள்ளார; நம் முன்னலர் - அவர்நம்மை நினைத்தாரல்லர்; ஈங்கைய வண்ணம் துய் மலர்உதிர - ஈங்கையிலுள்ளனவாகிய நிறத்தையும் உளையையும்உடைய மலர்கள் உதிராநிற்ப, முன்னர் தோன்றும் -இனிமேல் தோன்றுதற்குரிய, பனி கடுநாள் - கடிய பனிப்பருவத்தில்,யாங்கு செய்வாம் - என்ன செய்வாம்!
(முடிபு) தோழி, வானம் பெயல் ஆனாது; காதலர் நனி சேய் நாட்டர்; நம் முன்னலர்; பனிக்கடு நாளில் யாங்குச் செய்வோம்!
(கருத்து) தலைவர் தாம் குறித்த பருவத்தே வாராராயின் என் செய்வேம்!
(வி-ரை.) கொல்: அசை நிலை. “ஈங்கைமலர் இப்பொழுது உதிரா நிற்ப, இனிப்பனிக்கடுநாள் தோன்றும்” என்றாள். ஈங்கை கூதிர்க்காலத்தில் மலர்ந்து உதிரும் இயல்புடையது (குறுந். 110)
பனிநாள், கடுநாளென்க.
ஒப்புமைப் பகுதி 2. வென்றெறி முரசு: புறநா. 112:4, 351:5.
1-3. மேகமுழக்கத்திற்கு முரசின் ஒலி: குறுந். 270:3, ஒப்பு: அகநா. 175:12-3.
மழையால் விசும்பு மறைதல்: குறுந். 355:1, ஒப்பு.; நற். 347:1-2. 4. நனிசேய் நாட்டர்: குறுந். 228:5; நற். 115:8. 5. யாங்குச் செய்வாம்:குறுந். 217:3, ஒப்பு..
5-6. ஈங்கைய வண்ணத் துய்ம்மலர்: குறுந். 110:5-6. ஈங்கையின்மலர் துய்யையுடையது: குறுந். 110:5-6, ஒப்பு.ஈங்கைமலர் கூதிர்பபருவத்தில் உதிர்தல்: குறுந். 110:5-7, ஒப்பு.
(380)