குறுங்கீரன். (பி-ம்) 1. ‘கண்டிசிற் றோழி’; 2. ‘முகைத்தலை’; 3. ‘பூமலர்’, ‘பூமலர்பு’, ‘தேங்கமழ் பூக்கஞல்’, ‘தேங்கமழ்பூக்கால்’; 4. ‘வம்பம் பெய்யுமார்’,’வம்பழன்று’.
(ப-ரை.) தண் துளிக்கு ஏற்ற பசு கொடி முல்லை -தண்ணிய துளியை எதிர்கொண்ட பசிய கொடியாகியமுல்லையின், முகை தலை திறந்த நாற்றம் - அரும்புமலர்ந்தமணம், புதல்மிசை - புதலினிடத்தே, பூ மலி தளவமொடு - மலர்மிக்க செம்முல்லையோடு, தேம் கமழ்பு கஞல - தேன்மணக்கும் வண்ணம் நெருங்கித் தோன்றும்படி, மழை - மேகம், வம்பு பெய்யும் - காலமல்லாத காலத்துப் பெய்யும்மழையைப் பெய்யும் இது வம்பு அன்று - இது வம்பன்றி,கார் பருவமாயின் - கார்காலமானால், நம் காதலோர் - நம்தலைவர், வாராரோ--; வருவார்.
(முடிபு) மழை வம்புப் பெய்யும்; இது கார்ப்பருவமாயின் நம் காதலோர் வாராரோ?
(கருத்து) இது கார்ப்பருவம் அன்று.
(வி-ரை.) முல்லை கார்காலத்தில் வளம்பெற்று அரும்பி மலரும்.தேம் கமழ்பு - இடமெல்லாம் பரவியென்பதும் பொருந்தும். வாராரோவென்ற வினா வருவரென்னும் பொருளது.
“தலைவர் தாம் கூறிய சொற்பிழையாராதலின் அவர் வாராமையேஇது கார்ப்பருவமன்றென்பதற்கு அடையாளம். ஆதலின் முல்லை,தளவம், மழையென்பன அடையாளமல்ல” என்பது தோழியின் கருத்து(குறுந். 21). கார்ப்பருவமே யாயினும் தலைவி ஆற்றாளென்பது கருதித்தோழி காரன்றென்றாள்;
| “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த |
| நன்மை பயக்கு மெனின்” (குறள். 292) ஆதலின். |
ஒப்புமைப் பகுதி 1-2. முல்லை கார்காலத்தில் அரும்புதல்: குறுந். 126:3-5,ஒப்பு.
1-3. தளவம் மழையை ஏற்று மலர்தல்: “கண்ணக னிருவிசும்பிற் கதழ்பெயல் கலந்தேற்ற, தண்ணறும் பிடவமுந் தவழ்கொடித் தளவமும்” (கலித். 102:1-2.) முல்லையும் தளவும்: பொருந. 199-200.
(382)