(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றவேண்டுமென்று வற்புறுத்திய தோழியை நோக்கி, “மாலைக்காலத்தில் காமநோய் மிகுவதனால் துன்புறுகின்றேன்” என்று தலைவி கூறியது)
 386.    
வெண்மணல் விரிந்த வீததை கானற் 
    
றண்ணந் துறைவன் றணவா வூங்கே 
    
வாலிழை மகளிர் விழவணி கூட்டும் 
    
மாலையோ வறிவேன் மன்னே மாலை 
5
நிலம்பரந் தன்ன புன்கணொடு 
    
புலம்புடைத் தாகுத லறியேன் யானே. 

என்பது பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது (பி-ம். வன்பொறை யெதிரழிந்தது)

வெள்ளிவீதியார்.

    (பி-ம்.) 3. ‘விழவணிக்’; 5. ‘புன்கணொடும்’.

    (ப-ரை.) தோழி--, வெள் மணல் விரிந்த - வெள்ளிய மணல் பரவிய, வீததை கானல் - மலர்கள் செறிந்த சோலையையுடைய, தண்ணந் துறைவன் - தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன், தணவா ஊங்கு - என்னைப் பிரியாதமுன்காலத்தில், யான்--, வால் இழை மகளிர் - தூய அணிகலன்களை யணிந்த மகளிர், விழவு அணி கூட்டும் - விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற, மாலையோ அறிவேன் - மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; மன் - இனி அது கழிந்தது! மாலை - அம்மாலைக் காலம், நிலம்பரந்தன்ன புன்கணொடு - பூமி பரந்தது போன்ற பெரியதுன்பத்தோடு, புலம்புடைத்து ஆகுதல் - தனிமையைஉடையதாதலை, அறியேன் - அப்பொழுது அறியேன்.

    (முடிபு) துறைவன் தணவாவூங்கு யான் மகளிர் அணி கூட்டும் மாலையோ அறிவேன்மன்! மாலை புலம்புடைத்தாகுதல் அறியேன்.

    (கருத்து) தலைவரது பிரிவினால் மாலையில் என்பால் துன்பம் மிக்கது.

     (வி-ரை.) தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கினாளாக, “முன்பெல்லாம் இதுகண்டு வருந்தினாயல்லை” என்ற தோழிக்குக்கூறியது இது.

    மகளிர் விழவணி கூட்டு மாலையென்றது யானும் அவரோடுவிழவணி கூட்டி மகிழ்ந்திருந்தேனென்னும் நினைவினது. மாலையோ:ஓ பிரிநிலை. மன்; கழிவிரக்கப் பொருளது. யானே: ஏ அசைநிலை. நிலம் பரந்தன்ன புன்கணென்றது அதன் பேரளவையுணர்த்தியபடி; “நிலத்தினும் பெரிதே” (குறுந். 3:1) என்று பெருமைக்கு நிலம் கூறப்படுதல் மரபு.

    புன்கண் - காமநோய் மிகுவதனால் வரும் துன்பம். புலம்பு - தலைவனைப் பிரிந்த தனிமை. அப்பொழுது அறியே னென்றமையின், இப்பொழுது அறிந்தேனென்றாளாயிற்று.

    ஒப்புமைப் பகுதி 3. வாலிழை மகளிர்: குறுந். 45:2; கலித். 119:14.

    3. பி-ம். விழவணிக் கூட்டும்: அகநா. 26:3.

    3-4. மாலையில் மகளிர் அலங்காரம் செய்து கொள்ளல்: “மாலை மணிவிளக்கங் காட்டி யிரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங் கொள்ள” (சிலப். 9:3-4.) 2-4. குறுந். 352:5-6, ஒப்பு.

(386)