(தலைமகள் தன்னுடன் வருதற்கு உடம்பட்டமையை உணர்ந்ததலைவன் பாலைநிலத்தின் இன்னாமையையும் அதில் நடக்க மாட்டாத தலைவியினது மென்மையையும் கருதிப் போதற்கு ஒருப்படானாக,“நும்மொடு வரின் தலைவிக்குப் பாலை இனியதாகும்” என்று தோழிகூறிச் செலவு உடம்படச் செய்தது.)
 388.    
நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை 
    
கோடை யொற்றினும் வாடா தாகும் 
    
கவணை யன்ன பூட்டுப்பொரு தசாஅ 
    
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன 
5
முளிசினை பிளக்கு முன்பின் மையின் 
    
யானை கைமடித் துயவும் 
    
கானமு மினியவா நும்மொடு வரினே. 

என்பது தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை யுணர்ந்த தலைமகன்,சுரத்து வெம்மையும் தலைமகள் மென்மையும் குறித்துச் செலவு அழுங்கலுறுவானை (பி-ம். சொலவழுங்கலுறுவாளை)த் தோழிஅழுங்காமற் கூறியது.

    (அழுங்கலுறுவானைதவிர்தற்குத் தொடங்குபவனை)

ஒளவையார். (பி-ம். அவ்வையார்)

     (பி-ம்.) 1. ‘நீர்க்கால்’; 2. ‘யெற்றினும்’; 3. ‘தசாவது’; 4. ‘உமணரொழுகை’;5. ‘முழுச்சினை’.

    (ப-ரை.) நீர்கால் யாத்த - நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற, நிரை இதழ் குவளை - வரிசையாகிய இதழ்களையுடைய குவளைமலரானது, கோடை ஒற்றினும் - மேல்காற்று வீசினாலும், வாடாதாகும் - வாடாததாகும்,கவணை அன்ன பூட்டு பொருது - கவணைப்போன்ற நுகத்தின் பிணிப்புப் பொருதமையால், அசா - வருந்துதலையுடைய, உமண் எருது ஒழுகை - உப்புவாணிகருடையஎருதுகள் பூட்டிய வண்டிகளின், தோடு நிரைத்தன்ன முளிசினை - தொகுதியை வரிசையாக வைத்தாற் போன்ற உலர்ந்தமரக்கிளைகளை, பிளக்கும் முன்பு இன்மையின் - பிளத்தற் ரிய வன்மை இல்லாமையால், யானை கை மடித்து உயவும் - யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற, கானமும் - பாலைநிலங்களும், நும்மொடு வரின் - நும்மோடு வந்தால், இனிய ஆம் - தலைவிக்கு இனிமை யுடையனவாகும்.

     (முடிபு) குவளை வாடாதாகும்; நும்மொடு வரின் - கானமும்இனிய ஆம்.

     (கருத்து) தலைவி நும்மோடு வரின் பாலைநிலம் அவளுக்கு இனியதேயாகும்.

     (வி-ரை.) கால்யாத்த - கால்வாயின் வழியே கட்டப்பெற்றவென்பதும் பொருந்தும். கோடைக்காற்று நீரில்லாத மலர் வாடுதற்குஏதுவாகும். கவண்கவணை யெனவும் வழங்கும்: ‘’கடுவிசைக் கவணையிற்கல்கை விடுதலின்” (கலித். 41:10.) பொருது - பொர: எச்சத்திரிபு. அசாஅ: முதனிலைத் தொழிற் பெயர். உமணர் உப்புப்பார மேற்றியவண்டி பாலைநில வழியே செல்லும்; பாலைநிலத்திலுள்ள மரச்சினைக்குஅந்நிலத்திற் காணப்படும் உமணர் ஒழுகையையே உவமை கூறினாள்;

  
" ........ ........ ........ உமணர் 
  
 கொடுநுகம் பிணித்த செங்கயிற் றொழுகைப்  
  
 பகடசாக் கொள்ளும் வெம்முனைத் கடொகுத்  
  
 தெறிவளி சுழற்று மத்தம்"    (அகநா. 329:5-8) 

    உமணரது வண்டிகளுக்கு மேற்கூடின்மையின் அவற்றை உலர்ந்த சினைகளுக்கு உவமை கூறினாள். யானை பட்டையை உண்ணவேண்டிச் சினையைப் பிளந்தது; அது முளிசினையாதலின் உறுதியுடையதாகிப் பாலையின் வெம்மையால் ஓய்ந்த யானையாற் பிளப்பதற்கு அரிதாயிற்று.

    கானமும்: உம்மை இழிவு சிறப்பு. நும்மொடுவரின் கானமும் இனியவாமென்றதனால் நும்மொடு வாராளாயின் வீடும் இன்னாததாகுமென்பதும் பெறப்படும்; குறுந். 124:4.இதனால், “தலைவியின் மென்மை குறித்து அஞ்சாது உடன்கொண்டு செல்க” என்று அறிவுறுத்தினாளாயிற்று.

    இச்செய்யுள் எடுத்துக்காட்டு உவமையணி.

    (மேற்கோளாட்சி) மு. பாங்கி தலைமகனை உடன்படுத்தியது (நம்பி. 182)

    ஒப்புமைப் பகுதி 1. நீர்க்குவளை: “தாழ்நீர்க்குவளையும்” (சிலப். 14:76)

    2. கோடை ஒற்றல்: குறுந். 343:5.

    1-2. ஒருவாறு ஒப்பு: குறுந். 368:6-8.

    4. உமணருடைய வண்டிகள்: ‘’நோன்பகட்டுமணரொழுகை” (சிறுபாண்.55); “பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச், சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும்பாண். 63-5);“உப்பொ யுமண ரருந்துறை போக்கும், ஒழுகை நோன்பகடு”, “தெண்கழி விளைந்த வெண்க லுப்பின், கொள்ளை சாற்றிய கொடுநுக வொழுகை, உரனுடைச் சுவல பகடுபல பரப்பி, உமணுயிர்த் திறந்த வொழிக லடுப்பின்”, “வார்கயிற் றொழுகை நோன்சுவற் கொளீஇப், பகடுதுறை யேற்றத் துமண்விளி”, “உப்பொ யுமணரொழுகை” (அகநா. 3:5-6, 159:1-4, 173:9-10, 310:14):“உமணர், உப்பொ யொழுகை” (புறநா. 116:7-8).5. முளிசினை: குறுந். 396:3

 மு. 
“தீயினும் வெய்ய வென்குவை யாயின் 
  
 யாவது மினிய கானம் 
  
 சேயுயர் சிலம்ப நின்னொடு செலினே”    (தமிழ் நெறி.மேற்.90); 
  
“பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் 
  
 அணையு முரம்பு நிரம்பிய வத்தமு மையமெய்யே 
  
 இணையு மளவுமில் லாவிறை யோனுறை தில்லைத்தண்பூம் 
  
 பணையுந் தடமுமன் றோநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே” 
  
    (திருச்சிற். 202);  
  
“மால்புரை யானை மணிமுடி மாறன்மண் பாய்நிழற்றும் 
  
 பால்புரை வெண்குடைத் தென்னன் பறந்தலைக் கோடிவென்ற 
  
 வேல்புரை வெம்மைய கான மெனினுமவ் வேந்தன் செய்ய 
  
 கோல்புரை தண்மைய வாநின்னொ டேகினெங் கொம்பினுக்கே.” 
  
                            (பாண்டிக்.) 
  
‘’மன்னெடு வேலினாய் மாழை மட நோக்கி 
  
 நின்னொடு செல்ல நெடுங்கானம் - கொன்னுனைய 
  
 வேலன்ன வெம்மைய வாயினும் வேந்தர்செங் 
  
 கோலென்ன லாகுங் குளிர்ந்து"      (கிளவிமாலை); 
  
“தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தறையும் 
  
 தூய பெருவனமுஞ் சோலையுமாம் - ய  
  
 கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் 
  
 சிலம்பாநின் பின்னர்ச் செலின்”    (கிளவித்தெளிவு.) 
(388)