(தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டதனைஅவனுடைய குற்றேவன்மகனால் அறிந்த தோழி அக்குற்றேவன் மகனை வாழ்த்தும் வாயிலாக அச்செய்தியைத் தலைவிக்கு உணர்த்தியது.)
 389.    
நெய்கனி குறும்பூழ் காய மாக 
    
ஆர்பதம் பெறுக தோழி யத்தை 
    
பெருங் கனாடன் வரைந்தென வவனெதிர் 
    
நன்றோ மகனே யென்றனென் 
5
நன்றே போலு மென்றுரைத் தோனே. 

என்பது தலைமகன் குற்றேவன்மகனால் வரைவுமலிந்த தோழிதலைமகட்குச்சொல்லியது.

வேட்டகண்ணன்.

     (பி-ம்.) 2. ‘யத்தைப்’; 3. ‘வந்தெதிர்’; 4. ‘யென்றலின்’, ‘யென்றனன்’.

    (ப-ரை.) தோழி--, பெரு கல் நாடன் வரைந்தென - பெரிய மலைநாட்டையுடைய தலைவன் வரைவுக்குரியமுயற்சிகளை மேற்கொண்டானாக, அவன் எதிர் - அவனுக்குமுன், மகனே நன்றோ என்றனென் - குற்றேவன்மகனே,நலமா என்று கேட்டேன், நன்றே என்றுரைத்தோன் - நலமேஎன்று கூறிய அவன், நெய் கனி குறும்பூழ் - நெய் மிகஊறிய குறும்பூழ், காயமாக - சம்பாரத்தோடு கூடிய கறியாக,ஆர்பதம் பெறுக - உண்ணுகின்ற உணவைப் பெறுவானாக!

     (முடிபு) தோழி, நாடன் வரைந்தென நன்றோ என்றனென்;நன்றேபோலும் என்றுரைத்தோன் ஆர்பதம் பெறுக!

     (கருத்து) தலைமகனுடைய குற்றேவன்மகனால் தலைவன் வரைவு மேற்கொண்டமையை யுணர்ந்தேன்.

     (வி-ரை.) நெய்யிற் பொரிக்கப்படுதலின் நெய்கனிந்தது.குற்றேவன்மகனுக்கு ஏற்ற உணவு கூறினாள்.

    அததை: அசை நிலை.நன்றே: ஏ தேற்றம்.போலும்: அசை நிலை. உரைத்தோனென்பதை முற்றாக்கினும் பொருந்தும்.

    (மேற்கோளாட்சி) மு. தலைவன் குற்றேவன்மகனால் வரைவுமலிந்த தோழி தலைவிக்கு உரைத்தது. (தொல். களவு. 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 2. ஆர்பதம்: குறுந். 83:1, ஒப்பு.

    3. பெருங்கடல் நாடன்: சிறுபாண். 87.

    மு. நன்மை செய்தோரைவாழ்த்துதல்: குறுந். 83, 201.

(389)