பொன்மணியார். (பி-ம்.) 1. ‘லுழாஅது’; 3. ‘பாம்பு பையவிந்து’; 5. ‘தழீஇயப்’; 9. ‘கூவுந்தோழி’.
(ப-ரை.) தோழி--, ஒருத்தல் உவரி - எருதானது வெறுத்து, உழாது மடிய - உழாமல் சோம்பிக்கிடக்கும்படி,புகரி புழுங்கிய - மான் வெம்மையோடு கிடந்த, புயல் நீங்குபுறவில் - மழை நீங்கிய முல்லைநிலத்தில், கடிது இடி உருமின் பாம்புபை அவிய - விரைந்து இடிக்கும் உருமேற்றினால்பாம்புகளின் படம் அழிய, இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்று - இடியோடு கலந்து மழை இனியதாகப் பெய்தது;வீழ்ந்த மா மழை தழீஇ - அங்ஙனம் பெய்த பெரியமழையைப் பொருந்தி, பிரிந்தோர் கையற வந்த - தலைவரைப்பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த, பையுள் மாலை - துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், பூ சினை இருந்தபோழ் கண் மஞ்ஞை - மலரையுடைய கொம்பிலிருந்தபோழ்ந்தாற் போன்ற கண்களையுடைய மயில்கள், தாம் நீர்நனந்தலை புலம்ப - பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடம்தனித்து வருந்த, கூஉம் - கூவாநின்றன; பெரு பேதைய -அவை மிக்க பேதைமையையுடையன.
(முடிபு) தோழி, மழை ஒருத்தல் மடியப் பாம்பு பை அவிய மயங்கி வீழ்ந்தன்று; மழை தழீஇ வந்த மாலை கூஉம்; பெரும் பேதைய.
(கருத்து) கார்காலம் வந்தமையின் யான் வருந்துவேன்.
(வி-ரை.) உவரி - உவர்த்து; வெறுத்து. புகரி - மான்; புகர் - புள்ளி; அதனையுடையது புகரி;
| “புகருழை யொருத்தல்” (அகநா. 219:13) |
என வருதல் காண்க.
“மழை பெய்தது; அதுகண்டு மயில்கள் கூவின; இவை கார்காலத்தைப் புலப்படுத்துகின்றன; யான் எங்ஙனம் ஆற்றுவேன்!” என்றுதலைவி கூறினாள். ஏ: அசை நிலை; வினாவுமாம்.
ஒப்புமைப் பகுதி 3-4. இடியாற் பாம்பு வீழ்தல்: குறுந். 158:1-2, ஒப்பு.
6. பையுண்மாலை: குறுந். 172:2. கையறவந்த மாலை: குறுந். 32:1,387:2.
7-9. மஞ்ஞை பேதைய: குறுந். 251:1. மஞ்ஞை கார் காலத்தில்கூவுதல்: குறுந். 194:3.
(391)