(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவன் முன்பு இனியனாகத் தோற்றி இப்பொழுது இன்னாமைக்கு ஏதுவானான்” என்று தோழி கூறியது.)
 394.    
முழந்தா ளிரும்பிடிக் கயந்தலைக் குழவி 
    
நறவுமலி பாக்கத்துக் குறமக ளீன்ற 
    
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி 
    
முன்னா ளினிய தாகிப் பின்னாள் 
5
அவர்தினை மேய்தந் தாங்குப் 
    
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.  

என்பது வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் (பி-ம். ஆற்றுவிக்கலுறும்) தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது.

குறியிறையார் (பி-ம். குறையிறையார்)

    (பி-ம்.) 2. ‘யாகத்துக்’; 3. ‘மறுவரவந்தோடி’; 5. ‘வார்தினைப்’, அவர் தினைப் புன மேய்ந்தாங்கு. சில பிரதிகளில் நாலாம் அடிக்கு முன் ‘கூரை முற்றுஞ் சார னாடன்’ என்று ஓரடி காணப்படுகின்றது.

    (ப-ரை.) முழந்தாள் இரு பிடி - முழந்தாளையுடைய கரிய பிடியினது, கய தலை குழவி - மெல்லிய தலையையுடைய கன்று, நறவு மலி பாக்கத்து - கள் மிக்க மலைப்பக்கத்தூரில், குறமகள் ஈன்ற - குறத்தி பெற்ற, குறி இறைபுதல்வரொடு மறுவந்து ஓடி - குறிய கைச்சந்தையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடி, முன் நாள் இனியதாகி - முற்காலத்தில் இனிமையைத் தருவதாகி, பின் நாள் - பிற்காலத்தில்,அவர் தினை மேய்தந்தாங்கு - அவர்களுடைய தினையைமேய்ந்தாற் போல, அவர் நகை விளையாட்டு - தலைவர்நம்மோடு முன்பு நகைத்து விளையாடியது, பகையாகின்று - இப்போது பகைமையையுடையதாகின்றது.

     (வி-ரை.) குறிய இறை குறியிறையென விகாரம்; சிறிய விலை, சிறியிலை (புறநா. 109:4) என்பது போல. “குறவர் குழந்தைகளோடு விளையாடி மகிழ்ச்சியை விளைவித்த யானைக்கன்று பின் அவருக்குரிய தினையையுண்டு அவருக்குத் துன்பத்தை விளைத்தது போல முன்னாள் நின்னோடு அளவளாவி மகிழ்ந்த தலைவனது நட்பு அப்பொழுது இன்பத்தைப் பயந்து இப்பொழுது நின் அழகு கெடுதற்கு ஏதுவாயிற்று” என்று உவமையை விரித்துக் கொள்க;

  
“........ ........ நன்மலை நாடன் 
  
 புணரிற் புணருமா ரெழிலே பிரியின் 
  
 மணிமிடை பொன்னின் மாமை சாயவென் 
  
 அணிநலஞ் சிதைக்குமார் பசலை தனால்  
  
 அசுணங் கொல்பவர் கைபோ னன்றும் 
  
 இன்பமுந் துன்பமு முடைத்தே 
  
 தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே”    (நற். 304:4-10) 

என்பதில் இக்கருத்து வேறு வகையாக அமைக்கப்பட்டுள்ளது.

     நகைவிளையாட்டு: இடக்கரடக்கல்.

    அவர் முன்பு இன்பத்தைத் தருபவர்போலத் தோற்றி விளையாடிப்பின் துன்பத்தை விளைவித்து வஞ்சித்தாரென்பது படக் கூறினமையின்இஃது இயற்பழித்ததாயிற்று.

    ஒப்புமைப் பகுதி 1. முழந்தாள் இரும்பிடி: பெரும்பாண். 53; மலைபடு. 127; கலி. 50:2.

     கயந்தலை: நற். 171:3; கலி. 11:8.

    2. நறவு மலிப்பாக்கம்: மதுரைக். 137.

    1-3. குறச்சிறாரும் யானைக்கன்றும்: “கருங்க ணெயிற்றி காதன் மகனொடு, கான விரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்” (புறநா. 181: 2-3.)

     நகை விளையாட்டு: குறுந். 304:8; 401:5.

     விளையாட்டுப்பகையாதல்: சீவக. 909.

    மு. குறுந். 381:3-7.

(394)