(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை) (பி-ம்.) 4. ‘யாவது மதியிற்’, ‘அரவுறுமதியிற்’, ‘மதியிற்கிவறோர்’;5. ‘களையல’, ‘கண்ணின்றுபடீஇ; ‘படீஇ’; 6. ‘அஞ்சேல்’; 8. ‘யாங்காவாவதுவை, யாங்காவாவது ’.
(ப-ரை.) நெஞ்சு நிறை ஒல்லாது - என் நெஞ்சம் நிறுத் தலைச் செய்ய இயலாது; அவர் - அத்தலைவர், அன்புஇன்மையின் என்பால் அன்பின்மை காரணமாக, அருள்பொருள் என்னார் - அருளைப் பொருளென்று கருதாராயினர்;வன்கண் கொண்டு வலித்து வல்லுநர் - வன்கண்மையைமேற்கொண்டு என்னை வற்புறுத்தி அவ்வற்புறுத்தலில்வன்மையைப் பெற்றோர், அரவு நுங்கு மதியினுக்குஇவணோர் போல - அரவினால் உண்ணப்படும் சந்திரன்திறத்தில் இவ்வுலகத்திலுள்ளோர் செயல்போல, களையார்ஆயினும் - எனது துன்பத்தை நீக்காரானாலும், இனிதுகண்படீஇயர் - இனிமையாகக் கண்படுகின்றனர்; அஞ்சல்என்மரும் இல்லை - அஞ்சற்க வென்று கூறி நம்மைத்தேற்றுவாரும் இங்கே இல்லை; ஆதலின், ஆங்கு அவர்வதிவயின் - அங்கே அத்தலைவர் தங்குமிடத்திற்கு,நீங்கப்படின் - நாம் நீங்கிச் சென்றால், நாண் அளிது - நம்நாணம் இரங்கத்தக்கது; அஃது அழியும்.
(முடிபு) நெஞ்சு நிறை ஒல்லாது; அவர் அருள்பொருள் என்றார்; வலித்து வல்லுநர் கண் இனிது படீஇயர்; அஞ்சலென்மரும் இல்லை; நீங்கப்படின் நாண் அளிது.
(கருத்து) நாம் தலைவர் உள்ள இடத்திற்குச் செல்வேமாக.
(வி-ரை.) நிறை - நிறுத்தல்; காமத்தை ஆற்றி நிறுத்தல்; அங்ஙனம் நிறுத்தல் கூடுமெனின் தலைவி ஆற்றுவாள்; அது கூடாமையின் ஆற்றாளாயினள். அவர்: நெஞ்சறி சுட்டு. அன்பு இன்மையின் அருளும் இலதாயிற்று; அன்பு விரிந்து அருளுண்டாதல் இயல்பு (குறுந். 20:1.) ‘அருளையே பெறுதற்குரிய பொருளாகக் கருதினாராயின் அவ்வருளைத்துறவாது என்பால் இரக்கம் பூண்டு ஈண்டே இருப்பர்’ என்பது தலைவியின் நினைவு. வலித்து வல்லுநரென்றது தோழியை.
‘சந்திர கிரகணம் வந்தகாலத்தில் அதைக்கண்டு பல பேசிப் பின் துயில்வாரைப் போலத் தோழி என் துயரைக் கண்டு பலகூறி வற்புறுத்திப்பின் இனிதே துயின்றாள்’ என்பது பட உவமை நின்றது.
இவணென்றது இவ்வுலகத்தைக் குறித்தது (புறநா. 50:14.)
‘தலைவர் அருள் பொருளென்னாராகித் துணிந்து என்னைப் பிரியும் வன்மை பெற்றார்; ஈண்டுள்ளாரில் என் துயரத்தைக் களையாராயினும் யான் துயிலும்படியாவது அஞ்சலென்று கூறுவாரில்லை’ என்று பொருள் கொள்ளுதலும் ஆம்.
தலைவன் உள்ளவிடத்துப் போவேமாகவென்று தலைவி கூறும்மரபு,
| “காமக் கிழவ னுள்வழிப் படினும் |
| தாவி னன்மொழி கிழவி கிளப்பினும்” (தொல். களவு. 22) |
என்னும் இலக்கணத்தாற் பெறப்படும். அங்ஙனம் போவதாயின் நாண்அழியும்;
| “பகலே பலருங் காண நாண்விட் |
| டகல்வயற் படப்பையவனூர் வினவிச் |
| சென்மோ” (நற். 365:3-5, பி-ம்.) |
நீங்கப்படினென்றது, நீங்கும் விருப்பத்தையும் அது செய்தலருமையையும் புலப்படுத்தியது.
ஏகாரங்கள், ஓ, தான்: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 2. அருள் பொருளென்னார்: (குறுந். 20:1-2, ஒப்பு.); “பொருள் வயிற் பிரிதல் வேண்டு மென்னும், அருளில் சொல்லு நீ சொல்லினையே” (கலித். 21:4-5.)
3. வல்லுநர்: குறுந். 180:7.
2-3. தலைவன் அன்பும் அருளும் இன்றிப் பிரிதல்: குறுந். 21:1-2, ஒப்பு.
4. அரவு நுங்குமதி: “பாம்புசேர் மதிபோல” (கலி. 15:17);“அரவுநுங்கு மதியி னையென மறையும்”, “அரவுநுங்கு மதியி னுதலொளி கரப்ப” (அகநா. 114:5, 313:7); “அங்கண் மதிய மரவின் வாய்ப்பட்டென”(தொல்.அகத். 3, ந. மேற்.); “காளமாசுணங் கதிர்மதிக் குழவியைக், கோளிழைத் திருக்குங் கொள்கை போல” (திருவாரூர். மும். 25.)
7. அளிதோதானே: குறுந். 212:4, ஒப்பு.
மு. குறுந். 149:1.
8. தலைவி தலைவன் இருக்குமிடஞ் செல்ல நினைத்தல்: குறுந். 11.
(395)