கயமன். (பி-ம்.) 3. ‘வுரைத்தனள்’, ‘முறிசினை’; 4. ‘ஓமைக்’, ‘டொருத்தனல்’; 5. ‘வெவ்வறைக்’; 7. ‘செலலே’.
(ப-ரை.) பாலும் உண்ணாள் - பாலையும் உண்ணாளாகி, பந்துடன் மேவாள் - பந்தையும் விரும்பாளாகி, விளையாடு ஆயமொடு அயர்வோள் - முன்னர்த் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இனி - இப்பொழுது, முளிசினை ஓமை குத்திய - உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய, உயர் கோடு ஒருத்தல் - உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை, வேனில் குன்றத்து வெ அரை கவாஅன் - வேனிலின் தன்மையையுடைய மலையினிடத்துள்ள வெம்மையாகிய அடிவாரத்தில், மழை முழங்கு கடு குரல் ஓர்க்கும் - மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கும், கழை திரங்கு அருஇடை - மூங்கில்கள் உலர்ந்த செல்லுதற்கரிய இடத்திலே, அவனொடு செலவு - அத்தலைவனோடு செல்லுதல், எளிது என உணர்ந்தனள் கொல்லோ - எளிமையையுடையதென்று அறிந்தாளோ?
(முடிபு) உண்ணாள், மேவாள், அயர்வோள், இனி அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள்கொல்லோ?
(கருத்து) தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதெனநினைத்தனளோ?
(வி-ரை.) ‘பாலு முண்ணாது தனக்கு இனிய பந்தையும் விரும்பாது ஆயத்தோடு இடைவிடாது விளையாடும் இயல்புடையாள் எங்ஙனம் ஆயத்தைப் பிரியத் துணிந்தாள்!’ என்று செவிலி இரங்கினாள்; தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கியபடி.
பாலும்: உம்மை உயர்வு சிறப்பு. பந்துடன் - பந்தை; உருபு மயக்கம். கொல்: ஐயம்; ஓ: இரங்கற் குறிப்பு.
ஓமையின் பட்டையைக் குத்தி அதிலுள்ள நீரையுண்ண எண்ணியயானை அஃது உலர்ந்திருந்தமையின் வருந்தி, இடியின் ஒலியைக்கேட்டு, ‘மழை பெய்யும் போலும்’ என்று அலந்து நின்றது. யானையின்நிலை, ஓமையின் சினை, கழைதிரங்கினமை ஆகிய யாவும் பாலையில் வேனிற்றன்மை நிலைபெற்றதை வெளிப்படுத்தின.
வேனிற் குன்றத்தென்று பாலையைக் கூறினள், குறிஞ்சி திரிந்த பாலையாதலின். வெவ்வறைக் கவானென்ற பாடத்திற்கு வெம்மையையுடைய மலைக்கவானென்று பொருள் கொள்க.
அவன் - தலைவன்; நெஞ்சறி சுட்டு.
ஏகாரங்கள் அசை நிலைகள்.
இதனை நற்றாய் கூற்றாகவும் கொள்ளுதல் பொருந்தும்.
ஒப்புமைப் பகுதி 1. தலைவி பால் உண்ணாமை: அகநா. 48:2, 89:20.தலைவி பந்தினை விரும்புதல்: அகநா. 49:1.
3-4. முளிசினை ஓமை: குறுந். 388:5. யானையும் ஓமையும்: (குறுந். 79: 1-2, ஒப்பு.); "கடும்பகட் டொருத்த னடுங்கக் குத்திப், போழ்புண் படுத்த பொரியரை யோமை" (அகநா. 397: 10-11.)
6. மழைக்குரல்: குறுந். 94:7.
7. கழைதிரங்காரிடை: குறுந். 331:1, ஒப்பு.
(396)