(வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரியப்புக்க தலைவனைநோக்கி, “தலைவி நின் தண்ணளியால் வாழும் நிலையினள்; ஆதலின் விரைவில் மீண்டு வருவாயாக” என்பதுபடத் தோழி சொல்லியது.)
 397.    
நனைமுதிர் ஞாழற் சினைமரு டிரள்வீ 
    
நெய்தன் மாமலர்ப் பெய்தல் போல 
    
ஊதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப 
    
தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் 
5
டன்னா வென்னுங் குழவி போல 
    
இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும் 
    
நின்வரைப் பினளென் றோழி 
    
தன்னுறு விழுமங் களைஞரோ விலளே. 

என்பது வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.

அம்மூவன்.

     (பி-ம்.) 1. ‘நனைமுது’, ‘நனைமரு’, ‘றினைமருள்’; 2. ‘பெய்தபோல’: 5. ‘டன்னா யென்னும்’; 7. ‘நின்னல திலளென்’; 8. ‘தன்னுடை யின்னல்’,‘விலரே’.

     (ப-ரை.) நனை முதிர் ஞாழல் சினை மருள் திரள் வீ - அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை, நெய்தல் மா மலர் பெய்தல் போல -நெய்தலது கரிய மலரிலே பெய்வதைப்போல, ஊதைதூற்றும் - குளிர்காற்றுத் தூவுகின்ற, உரவு நீர் சேர்ப்ப - வன்மையையுடைய கடற்கரைக்குத் தலைவ, தாய் உடன்றுஅலைக்கும் காலையும் -தாய் மாறுபட்டு வருத்திய பொழுதும், வாய்விட்டு அன்னா என்னும் குழவிபோல - வாய்திறந்துஅன்னையே என்று அழும் குழந்தையைப் போல, என்தோழி - என் தோழியாகிய தலைவி, இன்னா செயினும் -நீ இன்னாதவற்றைச்செய்தாலும், இனிது தலையளிப்பினும் -இனிதாகத் தலையளி செய்தாலும், நின் வரைப்பினள் - நின்னாற் புரக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; தன் உறுவிழுமம் களைஞர் இலள் - நின்னையன்றித் தனது மிக்கதுன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள்.

     (முடிபு) சேர்ப்ப, இன்னாசெயினும் இனிது தலையளிப்பினும் என் தோழி நின்வரைப்பினள்; விழுமம் களைஞர் இலள்.

     (கருத்து) நீ தலைவியினது துன்பங்கருதி விரைவில் வருவாயாக.

     (வி-ரை.) ஞாழல்வீ, சினைமருள்வீ யென்று கூட்டுக. ஞாழலினது பூ ஐயவி போன்றதென்று கூறுதலாலும் (குறுந். 50:1), ஐயவிக்கு ஆரல் முட்டையை உவமை கூறுதலாலும் (புறநா. 342:9) இங்கே சினை யென்றது ஆரன்மீன் முட்டையையென்று கொள்க. தினைமருளென்னும் பாடத்திற்குத் தினையை யொத்தவென்று பொருள் கொள்க.

     ஞாழலிலுள்ள பூக்களை நெய்தல் மலர் நிறையும்படி உதிர்த்தமையின் ‘பெய்தல் போல’ என்றாள். உரவு நீர் - உலாவும் நீரெனலுமாம்.

     அன்னையென்பது விளியேற்று அன்னாவென நின்றது (குறுந்.161:4); “ஆவன்னா வன்னா வலந்தே னெழுந்திராய்” (பழம் பாடல்.)

     ‘அன்னை அலைப்பினும், அணைப்பார் பிறரின்றி அவள் மாட்டே

    செல்லும் குழவிபோல, நீ அருளின்றிப் பிரியினும் நின் மாட்டே

    செல்லும் காதலுடையாள் தலைவி’ என்று உவமையை விரித்துக் கொள்க.

    ஓ, ஏ: அசை நிலைகள்.

    இதனால், விரைவில் இவள் துன்பத்தைக் களைய வருதல் கடனென்பதைத் தோழி உணர்த்தினாள்.

     மேற்கோளாட்சி மு. தோழி தலைவியைத் தலைவனிடம் ஓம்படுத்துக் கூறியது (இறை.23); தலைவற்குத் தோழி, தலைவியைப் பாதுகாத்துக் கொள்ளென்று கூறியது(தொல். களவு. 23, ந.); பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தது (நம்பி. 182.)

    (குறிப்பு) நச்சினார்க்கினியர் கருத்து சிறப்புடையது.

     ஒப்புமைப் பகுதி 3. மு. நற். 15:3.

     4-5. தாய் அலைப்பினும் குழவி அவளையே நாடுதல்: “குழவி,அலைப்பினு மன்னேயென் றோடும்” (நான்மணி. 25); “தருதுயரந் தடாயேலுன் சரணல்லாற் சரணில்லை, விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட் டம்மானே, அரிசினத்தா லீன்றதா யகற்றிடினு மற்றவடன், அருணினைந்தே யழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே” (பெருமாள்.5:1.)

    6. தலைவன் இன்னா செய்தல்: குறுந். 288:3-4, 309:7.

    7. பி-ம். நின்னலதிலள்: (குறுந். 115:6); “புன்னையம் பூங்கானற்சேர்ப்பனைத் தக்கதேர், நின்னல்ல தில்லென் றுரை” (ஐந். எழு.58.) 8. விழுமங் களைதல்: நற். 216:3-4.

(397)