(தலைவன் பிரிந்த காலத்தில், “அவர் பிரிவாரென்று சிறிதும் கருதாமையின் நான் சோர்ந்திருந்தேன்; அக்காலத்து அவர்தம் பிரிவைக் கூறின் யான் ஆற்றேனென எண்ணிச் சொல்லாமற் போயினார். இதனை நினைந்து என் நெஞ்சம் வருந்தும்” என்று இரங்கித் தலைவி கூறியது.)
 43.    
செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே 
    
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே 
    
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல் 
    
நல்லராக் கதுவி யாங்கென் 
5
அல்ல னெஞ்ச மலமலக் குறுமே. 

என்பது பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது (பி-ம். உரைத்தது).

ஒளவையார் (பி-ம். அவ்வையார்).

    (பி-ம்) 1. ‘செல்லா’, ‘னிகந்தனனே’ 2. ‘வீவாள்’ ‘விடுவாள்’ ‘றவரிகந் தனரே’ 3. ‘இருபெய ராண்மை’ 4. ‘மலமறுக்குறுமே’.

    (ப-ரை.) தோழி, யான்-, செல்வார் அல்லர் என்று - தலைவர் நம்மைப் பிரிந்து செல்லாரென்று எண்ணி, இகழ்ந்தனன் - அவர் செலவை விலக்காமற் சோர்ந்திருந்தேன்; அவர் - ஒல்வாள் அல்லள் என்று - நம் பிரிவை இவளுக்கு அறிவித்தால் அதற்கு இவள் உடம்படாளென்று எண்ணி, இகழ்ந்தனர் - என்னிடம் சொல்லுதலினின்றும் சோர்ந்தனர்; அ இடை - அக்காலத்தே, இருபெரு ஆண்மை செய்த பூசல் -இருவரிடத்துமுள்ள இரண்டு பெரிய ஆண்மைகள் செய்த போரினால், என் அல்லல் நெஞ்சம் - எனது துன்பத்தையுடைய நெஞ்சு, நல் அரா - நல்லபாம்பு, கதுவியாங்கு - கவ்விக் கடித்ததனால் வருத்தப்படுவதைப் போல, அலமலக்கு உறும் - இப்பொழுது மிக்க கலக்கத்தையடையா நின்றது.

    (முடிபு) செல்வா ரல்லரென்று யான் இகழ்ந்தேன்; ஒல்வாளல்ல ளென்று அவர் இகழ்ந்தனர்; ஆயிடைச் செய்த பூசலால் என் நெஞ்சம் அலமலக்குறும்.

    (கருத்து) தலைவர் என்னிடம் சொல்லாமற் பிரிந்தமையின் நான் கலங்குவேனாயினேன்.

    (வி-ரை.) தன்பால் மிக்க அன்பு வைத்து ஒழுகிவந்தவனாதலின், ‘இவர் பிரிவார்’ என்னும் எண்ணம் உண்டாதற்கு இடமில்லையாக, ‘செல்லார்’ என்று தலைவி சோர்ந்திருந்தாள். இகழ்தல் - செய்வது செய்யாது சோர்ந்திருத்தல் (குறள். 539, பரிமேல்.) ‘யான் இகழ்ந்தனன்’ என்பது அங்ஙனம் இகழாது, செல்லுதலுங் கூடுமெனக் கருதியிருப்பின் அப்பொழுது செலவை விலக்கியிருப்பே னென்னும் நினைவிற்று. தன் பிரிவைக் கூறின் அதற்குத் தலைவி உடம்படாளென்று தலைவன் கூறாமலே சென்றான்; இங்ஙனம் தலைவன் சொல்லாது பிரிதலும் மரபென்பதை, ‘துன்புறு பொழுதினும் - உணர்த்தாது பிரிந்து தலைவி துன்பம் மிக்க பொழுதினும்’ (தொல். கற்பு. 43, ந.) என்பதனாலும் இந்நூலுள் வந்துள்ள, ‘‘யாந்தமக், கொல்லே மென்ற தப்பற்குச், சொல்லா தகறல் வல்லு வோரே’’ (79:7-8) என்னும் செய்யுட் பகுதியினாலும் உணரலாகும். அங்ஙனம் சொல்லாது பிரியினும் ஒருவாற்றானுணர்ந்து பின்னும் தலைவி ஆற்றாளாவளெனின், வெளிப்படச் சொல்லாவிடினும் தலையளி செய்தல் முதலியவற்றாலும் ஆயுதங்களைத் துடைத்துப் புதுப்பித்தலாலும் தலைவன் தன் பிரிவைக் குறிப்பால் தெளிவுறுத்திப் பிரிவானாதலின் அவன் செய்த தலையளியை நினைந்து ஆற்றியிருப்பாளென்று கொள்க (நற்.177; கலி.7: 5-16); ‘சொல்லாது பிரியுங் கால் போழ்திடைப் படாமன் முயங்கியும் (கலி.4:10) அதன்றலைத் தாழ்கதுப்பு அணிந்தும் முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் கள்ளினும் மகிழ் செய்யுமெனவுரைத்தும் இவை முதலிய தலையளி செய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின்’ (தொல். கற்பு. 43, ந.).

    ஒல்வாள் அல்லள் - ஆற்றாளெனலுமாம். ‘ இவர் நம்மைப் பிரியார்’ என்னும் ஊக்கத்தையும், ‘இவளுக்குச் சொல்லாமலே போவேம்’ என்னும் துணிவையும் முறையே இருவர்பாலு முண்டான ஆண்மை யென்றாள். ஆண்மையென்பது இருபாலார்க்கும் உரியதென்பது, தலைவன் தலைவி யரிடையே உள்ள ஒப்பினது வகையைக் கூறவந்த தொல்காப்பியர், “பிறப்பே குடிமை யாண்மை” என்று கூறுவதாலும், அதன் உரையிற் பேராசிரியர், ‘ஆண்மை புருடர்க்காம், அஃது ஆள்வினை யெனப்படும், இது தலைமகட் கொப்பதன்றாலெனின் குடிமை யாண்மை (தொல். கிளவி. 56) யென்புழி ஆண்மையென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது’ என்றெழுதிய பகுதியாலும் தெளியப்படும்.

    பாம்பினாற் பற்றப்பட்டாருக்கு அதன் நஞ்சு உயிர்போமளவும் துன்புறுத்துதலைப் போல இஃது என் உயிர்போமளவும் துயர் செய்யு மென்று உவமையை விரித்துப் பொருள் கொள்க (அகநா. 95: 3-5.)

    நல்லரா: நல்லபாம்பென்பது வழக்கு. அல்லல் நெஞ்சமென்று வைத்துப் பின்னும் அலமலக்குறுமென்றது, அவர் பிரிவினால் துன்புறுவதோடு எம் இருவரது இகழ்ச்சியையும் நினைந்து பின்னும் கலங்குவதாயிற்று என்றவாறு. அலமலக்குறுதல் - சுழலுதல்: இது ‘கலமலக் குறுதல்’ எனவும் வரும்; “மனங்களைக் கலமலக்குறுக்கும்” (நீல. 28)

    ஏகாரங்கள் அசை நிலை.

    (மேற்கோளாட்சி) 1-2. என்னென்பது சொல்லுதலென்னும் தொழில் குறித்து வினைக்குரிய விகுதியுடன் வந்தது (நன். 420, மயிலை.)

    3. சுட்டுநீண்டு வகரவொற்று வேறுபட முடிந்தது (தொல். குற்றியலுகரப். 78, ந.) ஆண்மை யென்பது ஆளுந்தன்மை யென்னும் பொருளில் இருபாலையும் உணர்த்தி நின்றது (தொல். கிளவி, 57, ந.).

    மு. அறியாமைப் பிரிந்த தலைமகனையுடைய கிழத்தி சொல்லியது (இறை. 52); பாங்கி தலைமகட்குத் தலைமகன் செலவுணர்த்தத் தலைவி இரங்கல் (நம்பி.170.)

    ஒப்புமைப் பகுதி 3. ஆயிடை: குறுந்.340:3. 4.நல்லரா: நற்.125:3; அகநா.72:14. 4-5. பாம்பு கதுவியது போன்ற துன்பம்: “பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப், பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது, தகாஅது... உடையுமென் னுள்ளம்” (நற். 75: 2-5); “அரவுறுதுயர மெய்துப” (ஐங். 173:2); சிறுபாண். 237.

 மு. 
“செல்லா ரவரென யானிகழ்ந் தேனே 
  
 ஒல்லா ளிவளென வொழிந்தனர் 
  
  நல்லெழி லுண்க ணலியுமென் னெஞ்சே”    (தமிழ்நெறி. மேற்.) 
  
“பிரியா ரெனவிகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை யெற்பிரியிற் 
  
  றரியா ளெனவிகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க 
  
  எரியா ரெழிலழிக் கும்மெழி லம்பலத் தோனெவர்க்கும் 
  
  அரியா னருளிலர் போலன்ன வென்னை யழிவித்தவே”                                         (திருச்சிற். 340) 
  
“செல்லா ரவரென் றியானிகழ்ந் தேன்சுரஞ் செல்லத்தன்கண் 
  
 ஒல்லா ளவளென் றவரிகழந் தார்மற் றுவையிரண்டும் 
  
 கொல்லா ரயிற்படைக் கோனெடு மாறன் குளந்தைவென்ற 
  
 வில்லான் பகைபோ லெனதுள்ளந் தன்னை மெலிவிக் குமே”                                     (பாண்டிக்கோவை)  
(43)