(பரத்தையர்பாற் சென்ற தலைவன் விட்ட தூதுவர் தலைவியினது உடம்பாட்டை வேண்டியபொழுது, தலைவி உடம்பட்டாளென்பதை யறிந்து தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடம்படுதற்குரிய இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறிக் குறிப்பினால் தலைவியின் உடம்பாட்டைத் தெரிவித்தது.)
 45.    
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி  
    
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற 
    
மல்ல லூர னெல்லினன் பெரிதென 
    
மறுவருஞ் சிறுவன் றாயே 
5
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.  

என்பது தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டிய வழித் தோழி வாயில் நேர்ந்தது.

    (பாங்காயினார் - பாணர் முதலியோர்.)

ஆலங்குடி வங்கனார் (பி-ம். வங்கன்).

    (பி-ம்) ‘தரீஇய’, ‘மரீஇய’, ‘மகளிர் மரீஇச் சென்ற’, ‘மகளிர்க் காணிய சென்ற’ 4. ‘சிறுவர் தாயே’.

    (ப-ரை.) காலை எழுந்து - காலையிற் புறப்பட்டு, கடு தேர் பண்ணி - விரைந்து செல்லும் தேரை ஏறுதற்கேற்ப அமைத்து, வால் இழை மகளிர் - தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரை, தழீஇய சென்ற - தழுவும் பொருட்டுச் சென்ற, மல்லல் ஊரன் - வளப்பம் பொருந்திய ஊரையுடைய தலைவன், பெரிது எல்லினன் என - மிக்க விளக்கத்தை யுடையவனென்றெண்ணி, சிறுவன் தாய் - ஆண்மகப் பெற்ற தலைவி, மறுவரும் - அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மனம் சுழலுவாள்; இ திணை பிறத்தல் - மனம் சுழலுதற்குரிய செயலைத் தலைவன் செய்யினும் அதனை மறந்து வாயில் நேர்தற்குரிய இக்குடியிற் பிறத்தல், தெறுவது - துன்புறுத்துவதாகும்.

    (முடிபு) சிறுவன் தாய் ஊரன் எல்லினனென மறுவரும்; இத்திணைப் பிறத்தல் தெறுவது.

    (கருத்து)தலைவி கற்பொழுக்கமுடைய குடியிற் பிறந்தாளாதலின் தலைவனை ஏற்றுக் கொள்வாள்.

    (வி-ரை.)எழுந்து - துயிலெழுந்தெனலுமாம். பண்ணல் - ஏறுதற் கேற்ப அமைத்தல் (புறநா. 12:2, உரை); அலங்கரித்தலுமாம். வாலிழை மகளிர் என்றது தலைவன் தந்த செல்வத்தால் இழையுடையராயின ரென்னும் நினைவிற்று. தரீஇய வென்னும் பாடத்திற்கு, ‘நம் இல்லிற் கொணர்ந்து வைத்தற்கு’ என்று பொருள் கொள்க; “நேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின், தேர்பூண்ட நெடுநன்மான் றெண்மணிவந்தெடுப்புமே” (கலி.70:17-8); “ஊரன், தேர்தர வந்த தெரியிழை” (அகநா. 316:7-8); ஊரன் - மருதநிலத் தலைவன். எல் - விளக்கம். தலைவன் பரத்தையரோடு இன்புற்றதனால் விளக்கமுடையன் ஆயினான்; “எல்லினை வருதி” (கலி.75:14) என்பதையும், ‘வதுவை அயர்ந்த பின்பு விளக்கத்தினை யுடையையாய் வாரா நின்றாய்’ (ந) என்னும் அதனுரையையும் காண்க. மறுவருதல் - சுழலுதல(அகநா. 22:4, உரை.)சிறுவன் தாயென்றமையால் தலைவி ஆண்மகப் பெற்றமை விளங்கியது.

    பரத்தையிற்பிரிந்த தலைமகன் தன் தலைவி ஆண்மகப் பெற்றதை யறிந்து அம்மகவைக் காணவருதலும் அப்பொழுது தலைவி தன் கற்பொழுக்கத்தின் சிறப்பால் அவன் தீங்கை மறந்து ஏற்றுக் கொள்ளுதலும் மரபு. ‘தெறுவதம்ம’ என்று தோழி கூறியதனால் அவனை ஏற்றுக்கோடல் தகாதென்பது அவள் கருத்தாதல் விளங்கும்.

    உயர்குடிப்பிறந்த கற்புடை மகளிர் தம் தலைவர் கொடுமை புரியினும் அதனை மறந்து அன்பு பாராட்டுதல் அக்குடிப் பிறப்பிற்குரிய இயல்பென்பது இந்நூல் 9,10-ஆ ம் செய்யுட்களாலும், ஐங்குறுநூறு முதற்பாட்டின் உரையினாலும்,

  
“சேக்கை யினியார்பாற் செல்வான் மனையாளாற் 
   
 காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா 
   
 தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் 
   
 இகழினுங் கேள்வரை யேத்தி யிறைஞ்சுவார்”          (பரி.20:86-9), 
   
“மாய மகிழ்நன் பரத்தைமை  
   
 நோவேன் றோழி கடனமக் கெனவே”             (கலி.75:32-3),  
   
“அன்புடைக் கணவ ரழிதகச் செயினும் 
  
 பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை”      (பெருங்.4.14:98-9) 

என்பவற்றாலும் விளங்கும்

    பிறத்தல்லே: லகரவொற்று செய்யுளோசை நோக்கி விரிக்கும் வழி விரித்தது. அம்மவும் ஏகாரங்களும் அசைநிலை.

    மேற்கோளாட்சி 1. மருதத்திற்குக் காலையென்னும் சிறுபொழுது வந்தது (தொல். அகத். 8, ந.).

    மு. புறப்பட்ட விளையாட்டினைத் தலைவன் பொருந்திய புகர்ச்சிக் கண் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு,9,இளம்.); குடிப்பிறத்தலை வெறுத்தலாகிய மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப்.12, இளம்.); உறுதகையில்லாப் புலவியுள் மூழ்கிய கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண் தோழி கூறியது(தொல். கற்பு. 9, ந.); தோழி தலைவியை உயர்த்துக் கூறியது. (தொல். பொருளியல் 46,ந.)

    ஒப்புமைப் பகுதி 1. தேர்பண்ணல்: “நெடுந்தேர் பண்ணி” (நற்.207:4).

    மு. தஞ்சை. 261. 2. வாலிழை: குறுந்.188:3. 1-2.தலைவன் தேரிற் பரத்தையர்பாற் செல்லல்; ‘தண்டுறை யூரன் றேரெம், முன்கடை நிற்க அவன்றேர் பிறமகளிர் முன்கடை நிற்ற லொழிந்து என்முன் கடை நிற்க’ (ஐங்.5, உரை); “நிரைதார் மார்ப னெருந லொருத்தியொடு, வதுவை யயர்தல் வேண்டிப் புதுவதின், இயன்ற வணிய னித்தெரு விறப்போன், மாண்டொழின் மாமணி கறங்கக் கடை கழிந்து, காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும், பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர், தாங்குமதி வலவவென் றிழிந்தனன்” (அகநா.66:7-12);316:7-8.

    4. மறுவருதல்: “மறுவந் தோடி” (குறுந்.65:2, 394:3); “பெறுவென் கொல்லென மறுவந்து மயங்கி” (பெருங்.1.33:127)

(45)