(பரத்தையிற் பிரிந்த தலைவனால் விடப்பட்ட தூதுவரை நோக்கி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று தலைவி கூறியது.)
 50.   
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல் 
    
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்  
    
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந் 
    
திலங்குவளை நெகிழச் சாஅய்ப் 
5
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 

என்பது கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது.

குன்றியனார் (பி-ம். குன்றியான், குன்றியாள்.)

    (பி-ம்.) 2. ‘செவ்வி’.

    (ப-ரை.) ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - வெண்சிறு கடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, செ வீ மருதின் செம்மலொடு - செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு, தாஅய் - பரந்து, அவர் ஊர் - தலைவருடைய ஊரின் இடத்தில், துறை - நீர்த் துறையை, அணிந்தன்று - அழகு செய்தது; அவர் மணந்த தோள் - அவர் முன்பு அளவளாவிய என் தோள், இலங்குவளை - விளங்கும் வளையல்கள், இறை இறந்து நெகிழ - மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகிழும்படி, சாஅய் - மெலிந்து, புலம்பு அணிந்தன்று - தனிமையையே அழகாகப் பெற்றது.

    (முடிபு) ஞாழல் தாஅய் அவர் ஊரில் துறையை அணிந்தன்று; அவர் மணந்ததோள் புலம்பணிந்தன்று.

    (கருத்து) அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.

    (வி-ரை.) சிறுவீயென்பதும் செவ்வீயென்பதும் முதற் கேற்ற அடைகள். ஞாழலின்பூச் சிறியது என்பது, “நனைமுதிர் ஞாழற் சினைமருடிரள்வீ” (397:1) என்னும் இந்நூற் செய்யுளாலும் பெறப்படும். இறை - இங்கே தோட்சந்து; “வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர்”, “தொடிவிளங் கிறைய தோள்” (குறுந். 364:5, 367:2.) புலம்பு - தலைவர் சாராத தனிமையும், வளையில்லாத தனிமையும். துறை அணிந்தன்று - துறையை அழகு செய்தது (புறநா. 1:5, உரை); தோள் அணிந்தன்று - தோள் அணிந்தது. புலம்பு அணிந்தன்று என்பது குறிப்புமொழி.

    தானும் அவனும் ஒன்றுபட்டு வாழும் கற்புக்காலத்தில் அவனூரே தனதூராகவும், ‘அவரூரே’ என்று பிரித்துச் சொன்னது அவன்பால் உள்ள புலவி பற்றி. அவர் சாரும் பொருள்களுள் துறை பொலிவு பெற்றிருப்பத் தோள்மட்டும் பொலிவிழந்ததே என்பது தலைவியின் நினைவு.

    ‘அவர் ஊரிலுள்ள துறையை அணிந்தன்று’ என்றது அவன் பரத்தையரோடு அத்துறைக்கண் விளையாடினான் என்று அறிந்தமையைக் குறிப்பித்தது.

    ஒப்புமைப் பகுதி 1. சிறுவீ ஞாழல் : குறுந். 310:6, 318:2, நற். 191:1. 2.மருதினது செவ்வீ: முருகு.33-4, ந.மருதந்துறை: குறுந். 258:3-4; ஐங்.7, 31; 36:9-10; கலி. 26:13; புறநா.243. 5. தோள் மணத்தல்: குறுந். 36:4, ஒப்பு.100:7, 272:1-8, 4-5. தோள்வளை நெகிழ்தல்:குறுந். 185:2, 252:1.

(50)