(தலைவன் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்த காலத்து, அவன் விரைந்து வந்து மணந்தானல்லனென்று கவலையுற்ற தலைவிக்கு, “நானும் தாயும் தந்தையும் நின்னை அத்தலைவருக்கே மணம் செய்து கொடுக்க விரும்பியுள்ளோம். இந்த ஊரினரும் அம்பல் கூறும் வாயிலாக உங்கள் இருவரையும் சேர்த்துச் சொல்கின்றார்கள்” என்று தோழி கூறியது.)
 51.   
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்  
    
நூலறு முத்திற் காலொடு பாறித் 
    
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை  
    
யானுங் காதலென் யாயுநனி வெய்யள் 
5
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் 
    
அம்ப லூரு மவனொடு மொழிமே. 

என்பது வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவுமலிவு கூறுயது.

    (வரைவுமலிவு - மணம் செய்து கொள்ளுதற்குரிய முயற்சிகளின் மிகுதி.)

குன்றியனார் (பி-ம். குன்றியன்.)

    (பி-ம்) 1. ‘கூர் முண்முண்டகக் கூனிமாமலர்’ 3. ‘பரிக்குந்’ ‘வரிக்குந்’ 6. ‘மொழிமோ’.

    (ப-ரை.) கூன் முள் முண்டகம் - வளைவாகிய முள்ளை யுடைய கழிமுள்ளியினது, கூர்பனி மாமலர் - மிக்க குளிர்ச்சியை உடைய கரிய மலர், நூல் அறு முத்தின் - நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல, காலொடு பாறி - காற்றாற் சிதறி, துறை தொறும் பரக்கும் - நீர்த்துறைகளுள்ள இடங்கள்தோறும் பரவுதற்கு இடமாகிய, தூமணல் சேர்ப்பனை - தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை, யானும் காதலென் - யானும் விரும்புதலை உடையேன்; யாயும் நனி வெய்யள் - நம் தாயும் அவன்பால் மிக்க விருப்பத்தையுடையளாயிரா நின்றாள்; எந்தையும் கொடீஇயர் வேண்டும் - நம் தந்தையும் அவனுக்கே நின்னை மணஞ்செய்து கொடுக்க விரும்புவான்; அம்பல் ஊரும் - பழிமொழியைச் சிலரறிய உரைக்கும் ஊரிலுள்ளாரும், அவனொடு மொழிமே - அவனொடு நின்னைச் சேர்த்தே சொல்லுவர்.

    (முடிபு) சேர்ப்பனை யானும் காதலென்; யாயும் வெய்யள்; எந்தையும் கொடீஇயர் வேண்டும்; அம்பலூரும் அவனொடு மொழியும்.

    (கருத்து) நின்மணத்திற்குரிய முயற்சிகள் நடைபெறுகின்றன; நீ கவலற்க.

    (வி-ரை.) முள்ளியின் மலர் கரிய நிறமுடையது என்பது, “மணிப்பூ முண்டகம்” (மதுரைக்.96) என்பதனால் விளங்கும். நூலறுமுத்தைப் போலவென்றது வினையுவமம்; ஒன்றோடு ஒன்று சேராமல் தனித் தனியே மலர்கள் சிதறின வென்று கொள்க. காலொடு பாறி - காலாற் சிதறி (அகநா. 9:7, உரை.) வரிக்கு மென்னும் பாடத்திற்குக் கோலஞ் செய்தாற்போலக் கிடக்கும் என்று பொருள் கொள்க. ‘இவளுடைய நலத்திற்கு ஏற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டு இன்புறும் தோழி; என்னை? களவொழுக்கத்தில் எழில் நலமுடையான் ஒருவனைக் கண்டு இன்புறக் கடவளோ வெனின் அதற்குக் காரணம் எழினலமேயன்று; பின் அறத்தொடு நிலைநின்று கூட்டுகை அகத்தமிழினது இலக்கணம் ஆதலால் தன் குரவர் வினவத் தான் அறத்தொடு நிற்குமிடத்துக் குரவர் தாமே சென்று மகட்கொடுக்கும் குடிப்பிறப்பினால் உயர்ச்சியை உடையன் ஆதலால்’ (திருச்சிற். 66, பேர்.) தோழி யானும் காதலென் என்றாள். தலைவி அறத்தொடு நிற்பத் தோழியும், அவள் அறத்தொடு நிற்பச் செவிலியும் நற்றாயும், நற்றாய் வாயிலாகத் தந்தையும் தலைவி ஒரு தலைவன்பால் அன்பு பூண்டா ளென்பதை அறிவார்களாதலின் அம் முறையே தோழி, தன்னையும் தாயையும் பின் தந்தையையும் கூறினாள். பிறர் விரும்பினாலும் தலைவியைத் தலைவனுக்குக் கொடுக்கும் உரிமை தந்தைக்கே உண்டாதலின், ‘எந்தையுங் கொடீஇயர் வேண்டும்.’ என்றாள்.

    அம்பல் - சிலரறிந்து கூறும் பழிமொழி; ‘சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வது’ (இறை. 22, உரை) என்றும், ‘பரவாத களவு’ (திருச்சிற். 180, பேர்) என்றும் கூறப்படும். அம்பலூர் அவனொடு மொழிதலாவது, அங்கங்கே சிலர்சிலர் கூடிநின்று பழி கூறுவாராகி, ‘இன்னாள் இன்னானோடு நட்புடையாள் போலும்’ என்று உரைத்தல்.

    இங்ஙனம் யாவரும் தலைவன் வரைவுக்கு உடம்பட்டாராக இருப்ப, அவர் நீட்டித்தாரென்று ஆற்றாததற்குக் காரணம் இல்லை யென்று தோழிஉணர்த்தினாளாயிற்று.

    முட்செடியாகிய முள்ளியினிடத்துள்ள மலர் கைவருந்திப் பறித்துக் கொள்ளும்படி அமையாமல் காற்றினாற் கவரப்பட்டு எளிதிற் கொள்ளும்படி மணலிற் பரந்து கிடப்பதுபோல, அரிதின் முயன்று உடம்பாடுபெற்று நிறைவுறுத்தும் வரைவு தலைவனுடைய முயற்சியினால் மலிந்து எல்லாருடைய உடம்பாட்டையும் பெற்றதென்பது குறிப்பு.

    (மேற்கோளாட்சி) 6. செய்யுமென்னு முற்று ஈற்றுயிர்மெய் கெட்டு வந்தது (தொல், வினை. 39, இளம், 41, சே, ந, தெய்வச்; 40, கல்; நன்.340. மயிலை, 341, சங்.; இ.வி.244.)

    மு. தமர் வரைவுடன்பட்ட தன்மையினால் தலைவியை வற்புறுத்தற்கண் தோழிக்குக்கூற்று நிகழ்ந்தது (தொல். களவு, 24, இளம்.); தோழி வரைவுகடாயவழி அவ்வரைந்து கோடல் மெய்யாயினமையின் வதுவை முடியுமளவும் ஆற்றும்படி தோழி வற்புறுத்திக் கூறியது. (தொல். களவு. 24, ந.) பாங்கி தமர் வரைவெதிர்ந்தமை தலைமகட்கு உணர்த்தியது (இ.வி. 531.)

    ஒப்புமைப் பகுதி 1. கூன்முண் முண்டகம்: அகநா.26:1-2.

    2. நூலறு முத்திற் சிதறல் :குறுந். 104:2.

    4-5.தோழியும் தந்தையும் உடன்படுதல்: “யாமே, மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத், தண்டுறை யூரன் வரைக, எந்தையுங் கொடுக்க வெனவேட் டேமே” (ஐங்.6:3-6.)

    6. ஊரார் தலைவனோடு சேர்த்துத் தலைவியைக் கூறுதல்: குறுந். 273:8; “துறைவற், கூரார் பெண்டென மொழிய வென்னை” (ஐங்.113:2-3.)

 மு. 
“வேங்கைக் கண்ணிய னிழிதரு நாடற்  
  
 கின்றீம் பலவி னேர்கெழு செல்வத் 
  
 தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர்வாய் 
  
 அம்ப லூரு மவனொடு மொழியும் 
  
 சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி 
  
 யாயு மவனே யென்னும் யாமும்  
  
 வல்லே வருக வரைந்த நாளென 
  
 நல்லிறை மெல்விரல் கூப்பி 
  
 இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே”     (அகநா. 282:10-18.)  
(51)