(தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலினால் உண்டாகும் ஏதத்தையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, “ தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் வரைந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்” என்றது.)
 54.   
யானே யீண்டை யேனே யென்னலனே 
    
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் 
    
கான யானை கைவிடு பசுங்கழை  
    
மீனெறி தூண்டிலி னிவக்கும் 
5
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 

என்பது வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

மீனெறி தூண்டிலார்.

    (பி-ம்) ’யென்னலன்’ 2. ‘வெரீஇய’.

    (ப-ரை.) தோழி, யான்-, ஈண்டையேன் - இவ்விடத்திலுள்ளேன்; என் நலன் - என்னோடு முன்பு ஒன்றியிருந்த எனது பெண்மை நலன், ஏனல் காவலர் கவண் ஒலி - தினைப் புனங் காப்பார் விடும் கவண்கல்லின் ஒலிக்கு, வெரீஇ - அஞ்சி, கானம் யானை - காட்டு யானை, கை விடு பசு கழை - கைவிட்ட பசிய மூங்கிலானது, மீன் எறி தூண்டிலின் நிவக்கும் - மீனைக் கவர்ந்துகொண்ட தூண்டிலைப் போல மேலே செல்லுதற்கு இடமாகிய, கானக நாடனொடு - காட்டையுடைய தலைவனோடு, ஆண்டு - நாங்கள் பழகிய அவ்விடத்தே, ஒழிந்தன்று - நீங்கியது.

    (முடிபு) யான் ஈண்டையேன்; என் நலன் நாடனொடு ஆண்டு ஒழிந்தன்று.

    (கருத்து) தலைவன் பிரிவினால் யான் பெண்மைநலனிழந்தேன்.

    (வி-ரை.) யானே: ஏகாரம், பிரிநிலை. ஈண்டையேனே: ஏகாரம் அசைநிலை. நலனே: ஏகாரம், பிரிநிலை. தான் உண்ண விரும்பி வளைத்த மூங்கிலைக் கவணொலி கேட்டு அஞ்சி யானை கைவிட்டது; அங்ஙனம் விட்ட மூங்கில், மீன் அகப்பட்ட காலத்தில் மீன் பிடிப்பவன் மேலே விரைவாக எடுக்கும்போது தூண்டில் நிமிர்தலைப் போல விரைந்து சென்றது. கானக நாடன் - காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடையான் (புறநா. 5:3, உரை.) ஆண்டென்றது களவுக் கூட்டம் நிகழ்ந்த இடத்தை. கானக நாடனொடு ஒழிந்தன்று என்றமையால் அவன் மீண்டுவந்தால் என்பால் ஒன்றுமென்பது தெளியப்படும்;

  
“நீங்குங்கா னிறஞ்சாய்ந்து புணருங்காற் புகழ்பூத்து 
  
 நாங்கொண்ட குறிப்பிவ ணலமென்னுந் தகையோதான்”, 
  
“சுடர்நோக்கி மலர்ந்தாங்கே படிற்கூம்பு மலர்போலென் 
  
 தொடர்நீப்பிற் றொகுமிவ ணலமென்னுந் தகையோதான்”(கலி.78:11-2, 15-6.) 

    ஒழிந்தன்றே: ஏகாரம் அசைநிலை.

    யானை வளைக்குங் காலத்தில் வளைந்து அது கைவிடத் தூண்டிலைப் போல மூங்கில் நிமிரும் நாடனென்றது தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து நம்பால் மருவிப் பணிந்து ஒழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலங்கொண்ட தன் கொடுமை தோன்ற ஒழுகுகின்றா னென்பதாம் (ஐங்.278, உரை.)

     யானையால் கைவிடப்பட்டு நிமிரும் மூங்கிலுக்கு மீனெறி தூண்டிலை உவமை கூறிய சிறப்பினால் இச்செய்யுள் செய்த நல்லிசைச் சான்றோர் மீனெறி தூண்டிலார் என்னும் பெயர் பெற்றனர்.

    (மேற்கோளாட்சி) 3-5. தொழிலும் பண்பும்பற்றி வந்த உவமை (தண்டி. 4.)

    மு. அணுகி மாட்டின்றி வந்த செய்யுள் (தொல். செய். 212, பேர், 211, ந.); ‘பேராசிரியரும் இப்பாட்டின் மீனெறி தூண்டிலென்றதனை ஏனையுவமமென்றார்’ (தொல், அகத்.46, ந.).

    ஒப்புமைப் பகுதி 2-3. யானை கவணொலிக்கு வெருவுதல்: “புனஞ்சூழ் குறவர், உயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ, அகன்மலை யிறும்பிற் றுவன்றிய யானைப், பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்கல்” (மலைபடு. 203-6); “இலங்கொளி மருப்பிற் கைம்மா வுளம்புநர், புலங்கடி கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும்”, “பிடியொடு மேயுஞ் செய்புன் யானை, அடியொதுங்கியக்கங் கேட்ட கானவன், நெடுவரை யாசினிப் பணவை யேறிக், கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதலின்” (கலி. 23: 1-2, 41: 7-10); “இரவின் மேயன் மரூஉம் யானைக்கால்வ லியக்க மொற்றி நடு நாள், வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன், கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல்”, “தினைமே யானை யினனிரிந் தோடக், கல்லுயர் கழுதிற் சேணோ னெறிந்த, வல்வாய்க் கவணின் கடுவெடி யொல்லென” (அகநா. 292: 8-11, 392: 13-5); “இடுதினைதின் வேழங் கடியக் குறவர், வெடிபடு வெங்கவண்க லூன்ற” (ஈங்கோய்மலை யெழுபது, 7).

    4. மீனெறி தூண்டில்: சீவக. 800.3-4. யானை மூங்கிலை வளைத்து விடுதல்: “தாளமர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசை போய்க், காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே” (தே. திருஞா. ) 1-5. நலன் ஆண்டு ஒழிந்தது: குறுந்.97:1-2, 125:

    4-7.நலன் தலைவனோடு ஒழிந்தது: “தம்மொடு, தானே சென்ற நலனும்” (அகநா. 103: 13-4); “பைந்தொடி யோவியப் பாவை போன்றனள், சிந்தையு நிறையுமெய்ந் நலனும் பின்செல, மைந்தனு முனியொடு மறையப் போயினான்” (கம்ப. மிதிலைக் காட்சி. 39.)

 மு. 
“சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்  
  
 குரங்கின் வன்பறழ் பாய்ந்தென விலஞ்சி 
  
 மீனெறி தூண்டிலி னிவக்கு நாடன் 
  
 உற்றோர் மறவா நோய்தந்து 
  
 கண்டோர் தண்டா நலங்கொண் டனனே”     (ஐங்.278)       
(54)