வெள்ளிவீதியார். (பி-ம்) 2. நிறுத்தலாற்றினோ; 3. வெயில்பயின் மருங்கின்; 6. நொண்டு கொளற், மொண்டு கொளற்.
(ப-ரை.) இடிக்கும் கேளிர் - இடித்துரைக்கும் நண்பரே, நும் குறையாக - நுமது காரியமாக, நிறுக்கல் ஆற்றின் - என் காமநோயை நிறுத்தலைச் செய்தால், நன்று மன் தில்ல - மிக நன்று; எனது விருப்பம் அது; ஞாயிறு காயும் - சூரியன் வெயில் எறிக்கும், வெ அறை மருங்கில் - வெம்மையையுடைய பாறையினிடத்தே, கைஇல் ஊமன் கண்ணின் காக்கும் - கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற, வெண்ணெய் உணங்கல் போல - உருகிய வெண்ணெயைப்போல, இ நோய் - என்பாலுண்டான இக்காமநோய், பரந்தன்று - பரவியது; நோன்று கொளற்கு அரிது - பொறுத்துக்கொண்டு நீக்குத்தற்கு அரிதாயிருக்கின்றது.
(முடிபு) கேளிர், நிறுக்கலாற்றின் நன்றுமன்; இந்நோய் பரந்தன்று; நோன்றுகொளற்கரிது.
(கருத்து) காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று.
(வி-ரை.) இடித்தல் - குற்றங்கண்டால் நெருங்கிக் கண்டித்து அறிவுறுத்தல். கேளிரென்றும் நும்மென்றும் பன்மையினாற் கூறியது செறல்பற்றி. ஆற்றினென்றது அங்ஙனம் செய்தலரிதென்னும் நினைவிற்று. ஆற்றினோ: ஓகாரம் அசைநிலை. தில்: விழைவின்கண் வந்தது.
வெண்ணெய் ஞாயிற்றின் வெப்பத்தால் உருகிப் பரந்தது போலக் காமநோய் பரந்தது; அவ்வெண்ணெய் உருகாமற் காக்கும் பொருட்டு இருப்பவும் ஊமன் தன்னுடைய கைக்குறையால் அதனை எடுத்துப் பிறிதோரிடத்தில் வைத்துப் பாதுகாக்கவும், ஊமைத்தன்மையால் பிறரைக் கூவிப் பாதுகாக்கச்செய்யவும் இயலாததுபோல, இந்நோயை அடக்கிப் பாதுகாத்தற்குரிய நிறுக்கும் ஆற்றலையும் பிறரிடம் வெளியிடற்குரிய நிலையையும் பெற்றிலேனாதலின் இதனைக் காக்க இயலேனாயினேன் என்று உவமையை விரித்துக் கொள்க; "சொல்லருங் கடுநோய்க், காமக்கனலெரி" (பெருங். 1.33: 202-3)
அரிதே: ஏகாரம் அசை நிலை.
(மேற்கோளாட்சி) மு. தலைவன் நிகழ்பவை உரைத்தது (தொல். களவு. 11, இளம்.); பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது (தொல். செய். 186, பேர்.); பார்ப்பான் கேட்போனாகத் தலைவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். செய்.196, பேர், 196, ந.); பாங்கன் கழறியவற்றை மறுத்துத் தன் நெஞ்சில் நிகழும் வருத்தங்களை அவற்குக் கூறுதற்கண் தலைவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல்.களவு.11, ந.); தலைமகன் கழற்றெதிர்மறை (இறை. 3; களவியற். 26); பாங்களை நின்குறையாக இது முடிக்க வேண்டமென்று தலைவன் கூறியது (இ.வி. 505).
(கு-பு.) 'இனிப் பாங்கனாற் குறிதலைப் பெய்தலுமென்று ஒருமைபடச் சூத்திரஞ் செய்யாது, பாங்கனோரினென்று பன்மைபடக் கூறியதெற்றிற்கு? அவன் ஒருவனாலோவெனின், பாங்கன் பார்ப்பானாகலிற் பன்மைவாசகத்தாற் சொன்னாரென்பது' (இறை.3, உரை) என்பவாகலின் இப்பாட்டில் கேளிர் எனப் பன்மையாகக் கூறியிருப்பது கருதி இங்ஙனம் கூறினார்.
ஒப்புமைப் பகுதி 1. இடிக்கும் கேளிர்:கலித்.3:21; குறள்:447, 784; கம்ப. நிந்தனைப். 59.
2. நன்றுமன்: குறுந். 38:4, ஒப்பு. நன்றுமற்றில்ல: குறுந்.134:2, 269:2; நற்.255:7. ஞாயிறு: குறுந். 92:1, 315:3, 378:1. 3. வெவ்வறை: குறுந். 12:2.
4. ஊமன்: குறுந். 225:5.
3-6. "வெந்து முருங்கிய, வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்" (கம்ப. சூர்ப்பநகைப். 78).
(58)