(பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்துஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் யாவரும் துயிலவும் யான் துயின்றிலேனென்று தோழி துயின்றமையைப் புலப்படுத்தி அவளுக்குக் கூறியது).
 6.    
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்  
    
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று  
    
நனந்தலை யுலகமுந் துஞ்சும் 
    
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 

என்பது வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள்தோழியை நெருங்கிச் (பி-ம்.நோக்கிச்) சொல்லியது.

     (வரைவிடை வைத்துப் பிரிதல்- மணம் செய்து கொள்ளுதற்குஇடையே பொருள் ஈட்டுதற்குத் தலைவன் பிரிதல்; வைத்து: சொன்னடை.இடைவைத்து- இடையீடாக நீக்கி வைத்தென்பர், நச்சினார்க்கினியர்;தொல். களவு.21,உரை.)

பதுமனார்.

     (பி-ம்.) 2 ‘முனிவின்றி’ 4 ‘ஓஒயான் ‘ஓரியான்’.

     (ப-ரை.) யாமம் நள்ளென்றன்று- இடையிரவு செறிந்த இருளை உடையதாக இரா நின்றது; மாக்கள் சொல் அவிந்து இனிது அடங்கினர்-மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர்; நன தலை உலகமும் முனிவின்று துஞ்சும்-அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களும் வெறுப்பின்றித் துயிலா நிற்கும்; ஓர்யான் மன்ற துஞ்சாதேன்-யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனாயினேன்.

     (முடிபு) யாமம் நள்ளென்றன்று; மாக்கள் அடங்கினர்; உலகமும் துஞ்சும்; யான் ஒருத்தியே துஞ்சாதேன்.

     (கருத்து) யாவரும் துயிலும் நள்ளிரவிலும் யான் துயின்றிலேன்.

     (வி-ரை.) நள்: நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு; செறிவின்கண் வந்ததென்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். பதி. 41); நள்ளென்னும் ஓசையை உடையதாயிற் றெனலுமாம் (நெடுநல். 186, ந;புறநா. 149:1-2, உரை);நள்-நடுவுமாம்; நண்பகல் என்புழிப் போல. ஏகாரம்: அசை. யாமம்- பதினைந்தாம் நாழிகையை இறுதியாக உடைய இடையிரவு; நள்ளென்றன்றே என்ற குறிப்பினால் இஃது இடை யாமம் ஆயிற்று. மாக்கள்-ஐயறிவுடையோர்; என்றது தாய் முதலியவர்களை; தன் துயரைஅறியாதிருத்தல் பற்றி இங்ஙனம் கூறினாள். நனந்தலை: நன,அகலத்தைஉணர்த்தும் அகர வீற்று உரிச்சொல் (தொல்.உரி.78.) உலகமென்றது எல்லா உயிர்களையும் (முருகு.1,ந.) உலகமும்: உம்மை, இறந்தது தழீஇய எச்சவும்மை. ஓர் யானென்றது உடனிருந்து ஆற்றுவிக்கக்கடவளாகியதோழியும் துயின்றமையைப் புலப்படுத்தியது. மன்ற: தேற்றப் பொருளில்வந்தது (தொல். இடை.17.)

    மேற்கோளாட்சி 3. 'நனந்தலையுலகு: என்றக்கால் அகன்றலையுலகு என்பதாம்’ (தொல்.உரி .79, இளம.்); நனவென்பது அகலமாகியறிப்புணர்த்தியது (தொல்.உரி.80,சே.)

    மு. தலைவன்வயிற் பரத்தைமை உண்மைக்கு மேற்கோள் (தொல்.களவு.20,இளம்.); தலைவன் வருந் தொழிற்கு அருமை வாயில் கூறின் தலைவிக்குக் கூற்று நிகழும்; ‘இதனுள் பொழுது சென்றதில்லை என்றும் மாக்கள் இன்னும் துயின்றிலரென்றும் அருமையை வாயில் கூறிய வழித்தலைவி யாமமும் நள்ளென்றும் மாக்களும் துயின்றும் வந்திலரென வருந்திக் கூறியவாறு காண்க’ (தொல். களவு.20, ந.)

    ஒப்புமைப் பகுதி1. நள்ளென்றன்றே யாமம்: "நள்ளென வந்த நாரின் மாலை’’,"நள்ளென்யாமம்’’, "நள்ளென் கங்குல்’’, "பல்லோர் துஞ்சு நள்ளென் யாமம்’’, "நள்ளென் யாமத் தையெனக் கரையும்’’, "நள்ளென் கங்குல்’’(குறுந்.118:2, 160:4, 163:5 244:1, 261:4, 312:4.)

    2. மாக்கள்: "ஏதின் மாக்கள்’’, "கவலை மாக்கட்டிப் பேதையூரே’’(குறுந். 89; 2,159:7.) 1-2. "துஞ்சா துறைநரொ டுசாவாத், துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே’’ (குறுந்.145:4-5); ‘ஒலியவிந் தடங்கி யாம நள்ளெனக், கலிகெழு பாக்கந் துயின்மடிந் தன்றே’’ (நற்.303:1-2.) 1-3. "பல்லோர் துஞ்சு நள்ளென் யாமம்’’ (குறுந்.244: 1, ஒப்பு.); "ஊரெலாந் துஞ்சி யுலகெலா நள்ளென்று, பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண்’’ (11-ஆம.் திருவாரூர் மும்மணிக்.26)

    4. தலைவி துஞ்சாமை: (குறுந்.5, 11, 28, 138, 145, 186, 243, 261, 301, 329, 357, 365, 381); "நள்ளென் யாமத்துங் கண்படை பெறே என்’’ (நற்.178:8); "ஆரிருட் கங்கு லணையொடு பொருந்தி, ஓர்யா னாகுவ தெவன் கொல்’’ (அகநா. 82:16-7.)

    3-4. "கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே’’ (குறுந். 138:1.)

    மு. "மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா, என்னல்ல தில்லைதுணை’’(குறள், 1168.)

(6)