(இரவுக்குறியை விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வாரற்க" என்று தோழி மறுத்துக் கூறியது.)
 69.   
கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக் 
    
கைம்மை யுய்யாக் காமர் மந்தி 
    
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி 
    
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் 
5
சார னாட நடுநாள் 
    
வாரல் வாழியோ வருந்துதும் யாமே. 

என்பது தோழி, இரவுக்குறி மறுத்தது.

1கடுந்தோட் கரவீரன்.

    (பி-ம்) 2. கைமை; 4.ஓங்குவரை நடுநாட்; 6.வருந்துகம்.

    (ப-ரை.) கரு கண் தா கலை - கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு, பெரும்பிறிது உற்றேன - இறந்து பாட்டை அடைந்ததாக, கைம்மை உய்யா - கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத, காமர் மந்தி - விருப்பத்தையுடைய பெண்குரங்கானது, கல்லா வன்புறழ் - மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, கிளைமுதல் - சுற்றத்தினிடத்து, சேர்த்தி - கையடையாக ஒப்பித்து, ஓங்குவரை அடுக்கத்து - ஓங்கிய மலைப் பக்கத்தில், பாய்ந்து உயிர் செகுக்கும் - தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும், சாரல் நாட - சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நடுநாள் - நள்ளிரவில், வாரல் - வாரற்க; யாம் வருந்துதும் - அங்ஙனம் நீவரின் நினக்குத் தீங்குண்டா மென்றெண்ணி நாம் வருந்துவோம், வாழி - நீ தீங்கின்றி வாழ்வாயாக!

    (முடிபு) நாட, நடுநாள் வாரல்; யாம் வருந்துதும்; வாழி!

    (கருத்து) நீ இரவில் வருதலை யொழி.

    (வி-ரை.) தா - தாவுதல் (தொல். உரி. 46, ந.); வலியுமாம்; 'தாப்புலி - வலிய புலி' (பு.வெ. 31, உரை) பெரும்பிறிது - இறந்து பாடு (புறநா. 152:2, உரை).கைம்மை யுய்யா - கைம்மைத் துன்பத்தைப் போக்க முடியாத; 'உறைமலி யுய்யா நோய் - மருந்தாற் போக்கமுடியாத நோய்' (சிலப். 7:8, அரும்பத.); கைம்மை விரதத்தை நெடுகச் செலுத்த மாட்டாத வெனலுமாம். கல்லா - தன் தொழிலைக் கல்லாத (மலைபடு. 312, ந.) பறழ் மரமேறுதல் முதலியவற்றைக் கற்கவில்லை யென்னும் குறையையும் ஓராமல் மந்தி உயிர் நீத்தமை அதன் தலைக்கற்பை உணர்த்துகின்றது; தம் குட்டிகளுக்காக உயிர்வைத்து வாழும் பெண் விலங்குகளும் உண்டு;

  
"அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் 
  
 சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை 
  
 பூளை நீடிய வெருவரு பறந்தலை 
  
 வேளை வெண்பூக் கறிக்கும் 
  
 ஆளி லத்த மாகிய காடே"                     (புறநா. 23:18-22.)  

     பாய்ந்த மாத்திரத்தில் உயிர் போதற்குரிய உயரத்தையுடைய தென்பாள் 'ஓங்குவரை யடுக்கம்' என்றாள். நடுநாள் - நள்ளிரவு; "வியலிரு ண்டுநாள்" (அகநா. 218:6). தலைவனுக்கு ஏதம் வாராமல் இருத்தலை விரும்புவாளாதலின் 'வாழியோ' என்றாள்.

    வாழியோ: ஓகாரம் அசைநிலை. யாமே: ஏகாரம், அசைநிலை.

    கலை இறந்ததாக மந்தியும் உயிர் செகுக்கும் நாட என்றது, பெண் விலங்கினங்களும் தம் துணைக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் உயிர் தரியாமையை நின்னாட்டில் அறிந்தனையாதலின், நினக்கு ஏதம் வருமேல் இவள் உயிர் வாழ்தலின்மையையும் அறிதியென்று உணர்த்தியவாறு.

    (மேற்கோளாட்சி) 1. தாவென்னும் உரிச்சொல் வருத்தமென்னும் பொருளில் வந்தது (தொல். உரி, 48, இளம், சே, தெய்வச்; இ.வி. 282); தாவுத லென்னும் பொருளில் வந்தது (தொல். உரி. 46, ந.); கலையென்னும் பெயர் குரங்கின் ஆணிற்கும் சிறுபான்மை வந்தது (தொல்.மரபு. 46, பேர்.)

    2. குரங்கின் பெண்பால் மந்தியென்று கூறப்பட்டது (தொல். மரபு. 67, பேர்.) 2-3. பறழென்னும் இளமைப்பெயர் குரங்கிற்கு வந்தது (தொல். மரபு. 7, பேர்.)

    5-6. அசைநிலை யேகாரம் வந்தது (நன். 422, மயிலை.).

    மு. காப்பு வரையிறந்தது (தொல். களவு. 24, இளம்.).

    ஒப்புமைப் பகுதி 1. பெரும்பிறிது: குறுந். 302:3, நற்.219:3; மணி.23:28.

    3. கல்லா வன்பறழ்: குறுந். 278:1, 335:4; "கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ்", "கருவிரன் மந்திக் கல்லா வன்பார்ப்பு" (ஐங். 272:1, 280:1.) கலி. 40:15; மலைபடு. 312.

    5. நடுநாள்: அகநா.72:2, 162:6, 238:3, 292:9, புறநா.189:3.

    6. வாரல்வாழியோ: "வாரல் வாழியரைய" (அகநா. 92:5). 5-6."நடுநாள் வருதி நோகோ யானே" (நற். 256:10)

(69)
  
 1. 
இதனைக் 'கடுந்தோட்காவீரன்' என்று படித்தற்கும் இடம் உண்டு.