(கருத்து) பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்தால் தலைவன் விரைவில் மணந்து கொள்வான்.
(வி-ரை.) மார்பே: ஏகாரம் பிரிநிலை. "வெம்மை வேண்டல்" (தொல். உரி. 36) என்பது சூத்திரமாகலின் வெய்யையென்பது விரும்பினை யென்னும் பொருள் தந்தது. நன்னன்: கொங்கு நாட்டுக் கருகில், மலைநாட்டிலிருந்தவன் போலும். மா: அவனது காவன்மரம். நறுமை மாம்பழத்திற்கு அடை. பகையரசர்களது காவன்மரத்தை வெட்டுதல் மரபு; புறநானூறு. 23; 8-9ஆம் அடிகளையும் அவற்றின் அடிக் குறிப்பையும் பார்க்க. ஒன்று மொழி - வஞ்சினம் (மதுரைக். 143, ந.); என்றது, இன்னது செய்யேனாயின் இன்னனாவேனென்று சபதஞ் செய்தல்; தொல். புறத். 24, பார்க்க. ஒன்றுமொழி - இரண்டுரையாமல் ஒன்றையே மொழிதல்; இதுபற்றியே வஞ்சினத்திற்கு இப்பெயர் வந்ததென்று தோற்றுகின்றது; "இரண்டா காதவன் கூறிய தெனவே" (புறநா. 304: 11) என்பதைப் பார்க்க. ஒன்று மொழி - ஒன்றையே கூறும் வாய்மை யெனினும் ஆம்; கோசரது வாய்மை இந்நூல் 15-ஆம் பாட்டாலும் தெளியப்படும். கோசர் - ஒருவகை வீரர். அவர் செய்த சூழ்ச்சி இன்னதென்று தெரியவில்லை. வன்கண் - அருளில்லாக் கொடுமை. சூழ்ச்சி - யோசித்துச் செய்யும் தந்திரம். வன்கட் சூழ்ச்சி யென்றது இரவுக் குறி நேர்ந்து அதனையும் மறுத்தலைப் புலப்படுத்தியபடி, சூழ்ச்சி பெரிதாயின் தலைவன் மனமுடைவானாதலின் சிறிதே வேண்டுமென்றாள்.
ஆல், வாழி, ஏ: அசை நிலைகள்.
"தலைவன் ஒழுகுமாறெல்லாம் நாமும் உடம்பட்டு ஒழுகினோ மாயின் களவொழுக்கம் குறைவின்றி நடைபெறுமென்னும் துணிவினால் அவன் இதனையே கடைப்பிடித்து வரைதற்குரிய முயற்சியை மேற் கொள்ளான். பகற்குறியை மறுத்தால், இரவுக்குறி வேண்டுவான்; அத்தற்கு நேர்ந்து பின்பு அதனையும் மறுப்போமாயின் அதனால் இடையூறுற்று அவன் இனி இத்தகைய தடைகள் நேராமைக்கு உபாயம் வரைந்து கொள்ளுதலேயென்று அறிந்து அதற்கு ஆவன செய்வான். இரவுக்குறி மறுத்தலால் நம்மிடத்தில் தறுகண்மை உளதுபோலத் தோற்றினும் அதனால் விளையும் இன்பம் பெரிதாதலால் இச் சூழ்ச்சி இப்பொழுது ஓரளவு வேண்டுவதாயிற்று" என்று தோழி கூறினாள்.
(மேற்கோளாட்சி) 1. மு.தோழி வன்புறை (தொல். களவு. 24, இளம், 23, ந.); தலைவியைப் பாங்கி கழறியது (நம்பி. 154).
ஒப்புமைப் பகுதி 1. வெய்யை: கலி.75:10. தலைவி தலைவனது மார்பை விரும்புதல்: (குறுந். 68:4, ஒப்பு.); "ஆர்கலி வெற்பன் மார்புநயந் துறையும், யானே" (நற். 104:7-8); "நின்மார்பு நயத்த நன்னுத லரிவை", "நின், மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே", "மலர்ந்த மார்பிற் பாயற், றுஞ்சிய வெய்யள்" (ஐங். 46:2, 51:3-4, 205:4-5).
4. கோசர்: குறுந். 15:3, ஒப்பு. ஒன்றுமொழிக் கோசர்; அகநா. 196:10, 205:8-9, 262:5-12. 2-4.நன்னன், கோசர்: அகநா. 15:2-10.
மு. ஒருவாறு ஒப்பு: அகநா.28.
(73)