(தலைவன் தோழிபால் குறியிடத்தெதிர்ப்படுதலை விரும்பினானாக, தலைவியிடம், "நம்மால் விரும்பப்படும் தலைவன் நம்மை விரும்பி மெலிகின்றான்" என்று அவள் கூறியது.)
 74.    
விட்ட குதிரை விசைப்பி னன்ன  
    
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் 
    
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும் 
    
வேனி லானே்று போலச் 
5
சாயின னென்பநம் மாணல நயந்தே. 

என்பது தோழி தலைமகன் குறை மறாதவாற்றாற் கூறியது.

    (குறை - குறியிடத்தெதிர்ப்படுதலை வேண்டல். கூறியது - தலைவிக்குக் கூறியது.)

விட்டகுதிரையார்.

    (பி-ம்) 1.விசையினன்ன, வியப்பினன்ன.

    (ப-ரை.) விட்ட குதிரை விசைப்பின் அன்ன - அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற, விசும்பு தோய் பசு கழை - வளைத்துப் பின் விட்டமையால் வானத்தைத் தோய்ந்த பசிய மூங்கிலையுடைய, குன்றம் நாடன் - குன்றத்தையுடைய நாட்டுக்குத் தலைவன், யாம் தன் படர்ந்தமை அறியான் - யாம் தன்னை நினைந்து மெலிதலை அறியானாகி, தானும்--. வேனில் ஆன் ஏறு போல - வேனிலின் வெம்மையை ஆற்றாத இடபத்தைப் போல, நம் மாண் நலம் நயந்து - நமது மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி, சாயினன் - மெலிந்தான்.

    (முடிபு) நாடன் யாம் தற்படர்ந்தமையை அறியானாகி நம் நலம் நயந்து சாயினன்.

    (கருத்து) தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.

    (வி-ரை.) விட்டவென்ற உவமையடையைப் பொருளுக்கும் கூட்டி வளைத்துவிட்ட கழையென்று கொள்க. யானை மூங்கிலை உண்ணும்பொருட்டு வளைத்தலும் எதற்கேனும் அஞ்சி விடுதலும் குறிஞ்சி நிலத்து நிகழ்ச்சி; இந்நூல், 54-ஆம் செய்யுளைப் பார்க்க. விட்ட - செலுத்திய வெனலுமாம். விசைத்தல் - துள்ளுதல் (புறநா. 120:14, உரை). இங்கே உள்ள உவமையையும் பொருளையும் மாறிக் கூறினாரும் உளர்; "வெடிவேய் கொள்வது போல வோடித், தாவு புகளுமாவே" (புறநா. 302: 1-2). யாமென்றதும் நம்மென்றதும் தலைவிக்கும் தனக்கு முள்ள ஒற்றுமைபற்றி.

     வேனிலின் வெம்மையால் துன்புற்று ஆனேறு, காமநோயால் துன்புற்ற தலைவனுக்கு உவமை. சாயினன் - மெலிந்தனன்; சாய்தல் - மெலிதல் (தொல். உரி. 32) மாணலமென்றது பட்டாங்கு கூறியது. தானும்: உம்மை, இறந்தது தழீஇயது. என்ப, ஏ: அசை நிலைகள்.

    தலைவன் தலைவியை மருவுதற்குரிய செவ்வியை விரும்பினானாக, "நாமும் அவனை விரும்பி நிற்கின்றோம். அவனும் இரந்து நிற்கின்றான். நாம் விரும்புவது, தானே வலிய வந்ததாதலின் மறாது உடம்படல் வேண்டும்" என்று தோழி தலைவிக்குக் கூறினாள்.

    வளைக்குங்கால் வளைந்ததேனும் இயல்பில் விசும்புதோயும் உயர்வையுடைய மூங்கிலைப்போல, தலைவன் நம் மாணலம் நயந்து நம்மிடைப் பணிந்து ஒழுகினானெனினும், இயல்பாகத் தலைமையை உடையனென்பது குறிப்பு.

    மூங்கில் விசைத்தெழுதலுக்கு விட்ட குதிரையின் விசைப்பை உவமை கூறிய சிறப்பினால் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் விட்டகுதிரையார் என்னும் பெயர் பெற்றனர்.

    (மேற்கோளாட்சி) மு. தலைவி பாங்கியை முனிந்தது (நம்பி. 148).

    ஒப்புமைப் பகுதி 4. தலைவனுக்கு ஆனே்று உவமை: "ஆகாண் விடையினணிபெற வந்து", "துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து" (குறிஞ்சிப். 136, 235); 'ஏறு நாகுடனே தம்மிற் கூடி நின்றன; அவை போல நாமுங்கூடிச் சேரப்போதற்குக் கூட்டத்திற்கு உடம்படுவாயாக வென்றான்' (கலி. 113:28-9, ந.); பரி.20:62, சீவக. 751, 1523.

    5. குறைவேண்டிய தலைவன் மெலிதல்: குறுந்.298: 3-4. மாணலம்: குறுந். 258:8, 299:7, 377:1; தொல். கற்பு. 9.4-5. வேனிலால் விலங்குகள் வாடுதல்: கலி.7:1; அகநா.29: 15-9.

(74)