(தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.)
 75.    
நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ  
    
ஒன்று தெளிய நசையின மொழிமோ 
    
வெண்கோட் டியானை சோணை படியும் 
    
பொன்மலி பாடலி பெறீஇயர் 
5
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 

என்பது தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது.

படுமரத்து மோசிகீரனார். (பி-ம். படிமத்து மோசிகீரனார்).

    (பி-ம்) 3.சோனை, பூஞ்சுனை; 4.பொன்வலி, பாடிலி, பாடினி.

    (ப-ரை.)பாண, காதலர் வரவு - தலைவரது வரவை, நீ கண்டனையோ - நீயே நின்கண்ணாற் கண்டாயோ? கண்டார் கேட்டனையோ - அன்றித் தலைவனைக் கண்டாரைக் கேட்டறிந்தாயோ? யார்வாய் கேட்டனை - அங்ஙனம் பிறர்பால் கேட்டனையாயின், யார் வாயிலாக் கேட்டாய்? ஒன்று தெளிய நசையினம் - உண்மையாகிய ஒன்றை அறிய விரும்பினேம்; ஆதலின், மொழிமோ - சொல் வாயாக; சொன்னால், வெண்கோடு யானை - வெள்ளிய கொம்பையுடைய யானைகள், சோணைபடியும் - சோணையாற்றில் துளைந்து விளையாடும், பொன்மலி பாடலி - பொன் மிக்க பாடலிபுத்திர நகரத்தை, பெறீஇயர் - பெறு வாயாக.

    (முடிபு) காதலர் வரவை நீ கண்டனையோ? கேட்டனையோ? யார்வாய்க் கேட்டனை? நசையினம்; மொழிமோ; பாடலி பெறீஇயர்!

    (கருத்து) தலைவர் வரவை உரைத்த நினக்குச் செல்வம் பெருகுவதாகுக,

    (வி-ரை.) தலைவனுடைய வரவைப் பலகால் எதிர்பார்த்தும் வாராமையாற் சலிப்புற்றனளாதலின், பாணன் மொழியை ஐயுற்று, நீ கண்டனையோ வென்றும் கேட்டனையோ வென்றும் யார் வாய்க்கேட்டனையென்றும் வினவினாள். இங்ஙனம் அடுத்துப் பலமுறை கேட்டது தலைவன் வரவினிடத்து அவளுக்குள்ள ஆதரவைப் புலப்படுத்தியது.

     தான் ஆற்றியிருத்தற் பொருட்டுப் பலகாலும், வருவர் வருவரெனத் தோழி முதலியோர் கூறியதைக் கேட்டுக் கேட்டு அவர்கள் மொழிகளில் உறுதிபெறாதவளாதலின் அவர் கூறினரோவென்னும் ஐயுறவினால் 'யார்வாய்க் கேட்டனை?' என்றாள். ஓகாரங்கள் வினா.

     தலைவன் பாசறையிலிருக்கும் காலத்தில் பாணனைத் தலைவி தூது விடுதலும் (ஐங். 478-9), அங்ஙனமே தலைவன் அவனைத் தூது விடுதலும் (ஐங். 477) மரபு. அங்ஙனம் தூது சென்ற பாணன் தலைவன் வரவை உணர்த்தினானாகத் தலைவி மகிழ்ந்து அவனை வாழ்த்தியது இது.

    மொழிமோ: மோ முன்னிலையசை.

     சோணை - ஒரு நதி (சிலப். 5:99-100, அடியார்.) இதன் வடகரையிலுள்ளது பாடலிபுத்திரமென்னும் நகரம்; பழைய காலத்தில் மகதநாட்டின் தலைநகரமாக இருந்தது. இது பாடலியென வழங்குதலும் பொன்னாற் சிறப்புடையதென்பதும்,

  
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் 
  
 சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை 
  
 நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ"    (அகநா. 265: 4-6)  
  
"பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்"    (பெருங். 1.58: 42) 

என்பவற்றால் அறியப்படும்.

    "பாடலிபெறீஇயர்" என்று கூறினாளேனும் அவள் கருதியது செல்வம்பெற்று வாழ்வாயாக என்பதாகக் கொள்க.

     வரவே: ஏகாரம் அசைநிலை.

    (மேற்கோளாட்சி) 3. செய்யுளில் இனச்சூட்டில்லாப் பண்புகொள் பெயர் வந்தது (தொல். கிளவி. 18, இளம், கல்.).

    மு. தலைவன் வருகின்றானென்ற உழையர்க்குத் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, இளம்.); தலைவன் வரவைத் தலைவி விரும்பிக் கூறியது (தொல். கற்பு. 6, ந.).

    ஒப்புமைப் பகுதி 4. பெறீஇயர்: குறுந்.83; 2, 277:5, நற். 111. 3-4. தலைவன் வரவைக் கூறியவரைத் தலைவி வாழ்த்தல்: குறுந். 201.

(75)