மதுரை மருதன் இளநாகனார், (பி-ம்) 4. ‘கிடுநீராகும்’.
(ப-ரை.) தோழி -, அம்ம - ஒன்று சொல்வேன்; கேட்பாயாக: வெ சுரத்து - வெவ்விய அருவழியில், உலந்த வம்பலர் - இறந்த வழிப்போக்கர்களுடைய உடலை மறைத்த, உவல் இடு (பதுக்கை - தழையைச் செயற்கையாக இட்ட குவியலானது, நெடு நல் யானைக்கு - உயர்ந்த நல்ல யானைக்கு, இடு நிழல் ஆகும் - இட்ட நிழலைத் தருதற்குரிய பொருளாகப் பயன்படும், அரிய கானம் -கடத்தற்கரிய பாலைநிலத்தில், சென்றோர்க்கு - என்னைப் பிரிந்து சென்று தலைவர்திறத்து, எளிய ஆகிய - மெலிந்தவனவாகிய, தடமெல் தோள் - பரந்த மெல்லிய என்தோள்கள், தவறு எனின் - தவறுடையனவென்று கூறின், யாவதும் - சிறிதும், தவறு இல - தவறு இல்லாதன.
(முடிபு) தோழி, கானம் சென்றோர்க்கு எளியவாகிய தோள்கள் தவறு இல.
(கருத்து) தலைவர் சென்ற பாலையினது ஏதத்தைக் கருதி என் தோள்கள் மெலிந்தன.
(வி-ரை.) வாழி: அசைநிலை, தவறோ: ஓகாரம் அசைநிலை. பாலைநிலத்திற் செல்வாரை அந்நிலத்துள்ள ஆறலை கள்வர் கொன்று அவருடலைத் தழைக்குவியலால் மூடிவிடுதல் வழக்கம்; கற்குவியலால் மூடுதலும் உண்டு (புறநா. 3: 20-21, உரை.) வம்பலர் - வழிப்போவார் (குறுந். 331:2; புறநா. 230; 2, உரை.) உவல் - தழை; “உவல் இட்ட - தழையாலே வேயப்பட்ட” (புறநா. 262:2, உரை.); உவல் உவலை யெனவும் வழங்கும் (முல்லை. 29; பு. வெ. 169.) பதுக்கை - குவியல்; பதுங்கியிருத்தற்கு உரியதாகலின் இப்பெயர் பெற்றது போலும்; இது பதுக்கெனவும் வழங்கும்; “உயர்பதுக் கிவர்ந்த ததர்கொடி யதிரல்” (அகநா. 289:2.) பதுக்கை நெடுநல் யானைக்கு இடுநிழலாகு மென்றது அதன் உயரத்தையும் வேறு நிழலின்மையையும் புலப்படுத்தியவாறு. அரிய கானம் - இயல்பாக உள்ள வெம்மையினாலும் ஆறலைகள்வரால் உண்டாகும் ஏதத்தினாலும் செல்லுதற்கரிய பாலைநிலம்.
ஏகாரங்கள், அசைநிலைகள்.
‘நான் ஆற்றியிருப்பவும் அவர் மணந்த தோள் அத்தொடர்பினால் அவர் சென்ற வழியிலுள்ள ஏதத்தை நினைந்து மெலிந்தன; தம்மோடு தொடர்புடையாரது (அகநா. 32:18) துன்பத்துக்கு மெலிதல் தவறன்றே!’ என்று தலைவி கூறினாளாயிற்று.
| “வண்ணம் பசந்து புலம்புறு காலை |
| உணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி |
| புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே (தொல்.பொருளியல், 8) |
என்னும் விதிபற்றித் தோளை உணர்வுடையதுபோலக் கூறினாள்; தலைவியின் துயர்மிகுதியையே அத்தோள்கள் புலப்படுத்தினவாதலின் பாலைநிலத்தின் ஏதம் நினைந்து அவள் வருந்தினாளென்பதைத் தோழி இதனால் அறிவாள். இங்ஙனம் தலைவி தன்னையும் தோளையும் வேறுபடுத்திக் கூறும் வழக்கு உண்மையை,
‘‘தான்குறி வாராத் தப்பற்குத், தாம்பசந் தனவென் றடமென்றோளே” (குறுந். 121:5-6),“துறைகே ழூரன் கொடுமை நாணி, நல்ல னென்றும் யாமே, அல்ல னென்னுமென் றடமென் றோளே” (ஐங். 11: 2-4),“வாளே ரெல்வளை நெகிழ்ந்த, தோளே தோழி தவறுடை யவ்வே”(அகநா. 267: 16-7)என்று வந்துள்ளவற்றாலும் உணரலாகும்.
(மேற்கோளாட்சி) 1. அம்மவென்னும் இடைச்சொல் கேட்பித்தற் பொருளில் வந்தது (தொல். இடை. 28, இளம், சே, 27, தெய்வச், 28, ந; நன். 437, மயிலை: இ.வி.274).
ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 104: 1, 134: 1, 146:1, 230:1, 287:1, 296:1, 350:1, 361:1, 375:1, ஐங். 111-120.
3. உவலிடு பதுக்கை: குறுந். 297:4; கலி. 1-3; அகநா. 67:14. உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை: (குறுந். 372:5; ‘கொலைத் தொழிலையுடைய வேடர் வில்லாலே கொல்லப்பட்டவருடைய உடலம் மறைய இட்ட இலைக்குவை’ (கலி. 12:1-2., ந). ந; 12:1-2 120:1-3, 38); “வெண்ணுனை யம்பின் விசையிட வீழ்ந்தோர், எண்ணுவரம் பறியா வுவலிடு பதுக்கைச், சுரம்” (அகநா. 109:7-9). நற்.352:1-9; தஞ்சை. 363.
வம்பலர் உடல்களை மூடிய பதுக்கை: அகநா. 175:4-5, 215:10-11, 231:5-6, 289:1-2; புறநா. 3:18-20; ஐந். எழு. 30.
2-3. சுரத்துப்பதுக்கை: அகநா. 35:6-7, 91:10. 151:11, சுரத்து வம்பலர்: “சுரஞ்செல் வம்பலர்” (பெருங். 1.55:50). வெஞ்சுரத்து வம்பலர் இறத்தல்: நற். 164:6-8, 298:1-2, 352:1-3; கலி.4:1-5; அகநா. 113:18, 161:2-4, 175:1-6, 313:12-3.
3-4. பதுக்கை நிழல் தருதல்: “பதுக்கை நீழ லொதுக்கிடம்” (நற். 352:8). பதுக்கையும் யானையும்: “செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணாடவர், வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின், எல்லி மலர்ந்த பைங்கொடி யதிரல், பெரும்புலர் வைகறை யரும்பொடு வாங்கிக், கான யானை கவளங் கொள்ளும்” (அகநா. 157:4-8)
5. அரிய கானம்: குறுந். 154:7, 329:4, பட்.300.
6. தடமென்றோள்: குறுந். 121:6; நெடுநல். 149; பட். 301; ஐங். 11:4, 143:3, 455:5; கலி. 2:22, 14:1, 26:10, 40:8, 49:25, 56:20, 93:5, 112:24, 113:1, 131:13; அகநா. 21:4, 110:10, 181:24.
(77)