நக்கீரனார் (பி-ம். நக்கீரர்). (பி-ம்) 6. ‘பெரும் பேதைத்தே’.
(ப-ரை.) பெரு வரை மிசையது - பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய, நெடு வெள் அருவி - நெடிய வெள்ளிய அருவியானது, முது வாய் கோடியர் - அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது, முழவின் ததும்பி - முழவைப்போல ஒலித்து, சிலம்பின் இழிதரும் -பக்கமலையின்கண் வீழும், இலங்கு மலைவெற்ப - விளங்குகின்ற மலைகயையுடைய தலைவ, காமம் - காமமானது, யாவதும் - சிறிதும், நன்றென உணரார் மாட்டும் - இது நன்மையென உணரும் அறிவில்லா தாரிடத்தும், சென்று நிற்கும் - சென்று தங்குகின்ற, பெரு பேதைமைத்து -பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது, நோதக்கன்று - வெறுக்கத்தக்கது.
(முடிபு) வெற்ப, காமம் பெரும்பேதைமைத்து; நோதக்கன்று.
(கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.
(வி-ரை.) பெருவரை - அளக்கலாகா அளவும் பெருமையும் வறப்பினும் வளந்தரும் வண்மையு முடைய மலை மிக உயர்ந்த மலையாதலின் அருவியும் நெடியதாயிற்று, முதுவாய்க் கோடியர் - அறிவு வாய்த்தலை யுடைய கூத்தர் (பட். 253, ந.); அறிவுமுதிர்ந்த வாய்மையையுடைய கூத்தரெனலும் (முருகு. 284, ந; புறநா. 48:7) ஆம்.
ததும்புதல் - ஒலித்தல் (கலி. 70:10, ந.); பெருங். 1. 46: 246; தே. 2554. வெற்பனென்பது குறிஞ்சிநிலத் தலைவனென்னும் பொருளைத் தந்து இடுகுறி மாத்திரையாய் நின்றது (திருச்சிற். 128, பேர்.) காமம் - தலைவியின்பாலுள்ள பெருவிருப்பம். உணராரென்றது, காமநுகர்ச்சிக்குப் பொருளாகியவரை; இங்கே தலைவியைச் சுட்டியது.
| “சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ |
| நன்றின்பா லுய்ப்ப தறிவு” (குறள். 422) |
ஆதலின் நன்மையறியாதார் மாட்டுச் செல்லும் காமத்தை அறிவற்ற தென்றான்.
காமத்துக்குக் கண்ணில்லை யென்பது ஒரு பழமொழி.
யான் ஒரு மலைவாணர் மகள்பால் விருப்புற்றேனென்ற தலைவனை நோக்கி, “நீ கொண்ட காமம், இது நன்று, இது தீதென அறியாத ஒருத்தி பாற் சென்றதாதலின் அது வெறுக்கத்தக்கது” என்று பாங்கன் கூறினான். தலைவனை, “நீ பேதை” என்று கூறும் நினைவினனாகி அங்ஙனம் கூறுதல் தன் பணிவுக்கு மாறுபாடாதலின் ‘நின்காமம் பேதைமையுடையது’ என்று குறிப்பாற் பெறவைத்தான்.
ஏகாரங்கள்: அசை நிலைகள். மாட்டும்: உம்மை இழிவு சிறப்பு.
மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த தாழ் வரையில் வீழ்ந்தது போல, மிக்க பெருமையையுடைய நீ நின் பெருமையும் உரனும் நீங்கிக் காமங்கொண்டாயென்பது குறிப்பு.
(மேற்கோளாட்சி) 1. அஃறிணை ஒன்றன்பாற்கண் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று (தொல். எச்ச. 61, ந.); ஒன்றன்பால் வினைக் குறிப்புமுற்றுப் பெயரெச்சக் குறிப்பானது (நன். 350, மயிலை, 351, சங்.)
4-5. யாவதென்னும் ஒன்றறி சொல்லும் நிலைமொழியாய் நின்று புணர்தலும் மருவின் பாத்தியது (தொல். தொகை. 30, இளம். ந.)
5-6. ‘காமநோயுறாதார் மானமுடையார்’ நன்றென வுணரார் மாட்டுஞ் சென்றே நிற்கும்; யானறிவ தொன்றன் றென்பதாம்’(குறள். 1255, பரிமேல்).
மு. தோழி தலைவனிடம் படைத்து மொழிந்தது (தமிழ் நெறி. 17); பாங்கன் தலைவனைக் கழறியது (நம்பி. 137.)
ஒப்புமைப் பகுதி 1. “பெருவரை யிழிதரு நெடுவெள் ளருவி” (அகநா. 358:12).
2. முதுவாய்க் கோடியர் முழவு: பட்.. 253; அகநா. 22:7, 98:8-10, 328:1-2; கோடியர்: தே. 7493, 7837.
முதுவாய்: முருகு. 284. 1-2. அருவியோசைக்கு முழவு: (குறுந். 365: 3-4); “ஒருதிறம், மண்ணார் முழவி னிசையெழ, ஒருதிறம், அண்ண னெடுவரை யருவிநீர் ததும்ப”, “பாணி முழவிசை யருவிநீர் ததும்ப” (பரி.17: 13-4, 21:36); “பாடின் னருவிப் பனிநீ ரின்னிசைத், தோடமை முழவின் றுதைகுர லாக” (அகநா. 82:3-4); அகநா.318:5-6; நற். 34:4-5; “யாழுங் குழலு முழவு மியைந்தென, வீழு மருவி விறன்மலை நன்னாட” (திணைமொழி. 7); “அருவி யரற்றிசையணிமுழ வாக” (பெருங். 2. 16:81); “முழவின்னிசை மூரி முழங்கருவி”, “அருவி, தாழ்ந்து வீழ்ந்தவை முழவிற் றதும்பின”, “படுகண் முழவி னிமிழருவி வரையும்” (சீவக. 1193, 1560, 2172); “அருவித் திரண் மழலைம் முழவதிரும், அண்ணாமலை” (தே. திருஞா.) “மலையிலங் கருவிகண் மணமுழ வதிர” (தே. திருநா.)
4. நோதக்கன்று: குறுந். 263:6; கலித். 26:8; அகநா. 364:12.
6. பெரும்பேதைமை: குறுந். 391:9; நற். 6:11.
(78)