(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறிய
 8.   
கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் 
    
பழன வாளை கதூஉ மூரன் 
    
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் 
    
கையுங் காலுந் தூக்கத் தூக்கும் 
5
ஆடிப் பாவை போல  
    
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே. 

என்பது கிழத்தி, தன்னைப் புறனுரைத்தாளெனக் கேட்ட காதற்பரத்தைஅவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

    (பாங்காயினார்-பக்கத்தில் உள்ள தோழி முதலியோர்.)

ஆலங்குடி வங்கனார்.

     (பி-ம்.) 1. ‘கழனி மரத்து’, ‘கழனி மாஅத்து’; 5.‘ஆடியிற்’, ‘ஆடியுட்’6. ‘மேவின’, ‘ஏவின’.

     (ப-ரை.) கழனி மாத்து-வயல் அருகில் உள்ள மா மரத்தினது, விளைந்து உகு தீ பழம் - கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பழன வாளை - பொய்கையில் உள்ள வாளை மீன்கள், கதூஉம் ஊரன் - கவ்வி உண்ணுதற்கு இடமாகிய ஊரை உடைய தலைவன், எம் இல் பெருமொழிகூறி-எம்முடைய வீட்டில் எம்மை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்கூறிச் சென்று, தம் இல்-தம்முடைய வீட்டில், கையும் காலும் தூக்கு-முன்னின்றார் தம் கையையும் காலையும் தூக்க, தூக்கும் -தானும் தூக்குகின்ற, ஆடிபாவை போல- கண்ணாடியுள் தோன்றுகின்ற பாவையைப்போல, தன் புதல்வன் தாய்க்கு- தன்னுடைய மனைவிக்கு, மேவனசெய்யும் - அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

     (முடிபு) ஊரன், எம்மிற் பெருமொழி கூறிப் புதல்வன் தாய்க்குத் தம்மில் மேவன செய்வான்.

     (கருத்து) தலைவன் தன் மனைவியை அஞ்சி ஒழுகினான்.

     (வி-ரை.) கழனி-வயல். தீம்பழம்: தீமை-இனிமை; ‘’தீ நீர்’’(பரி. 10:111, 12:7உரை) கதூஉம்-கதுவும். ஊரன்-மருத நிலத் தலைவன். ஆடி கண்ணாடி; முதற்குறை (நன். 268, மயிலை.) பாவை - கண்ணாடியில் தோன்றும் உருவம். பரத்தை, தலைவியைத் தலைவனுக்கு மனைவி என்று கூறப் பொறாளாதலின் புதல்வன் தாய் என்றாள்; 1 தலைவியின் முதுமையை இகழ்ந்ததுமாம். பெருமொழி யென்றது "உன்னைப் பிரியேன்’’ என்றது முதலியவற்றை; சபதமுமாம். தன் மனைவிமேவன செய்யும் என்றது, அங்ஙனம் அவன் செய்தமையே அவள் என்னைப் புறங்கூறும் தருக்குக்குக் காரணமாயிற்று என்னும் நினைவிற்று.

     மேற்கோளாட்சி 1-2. பலவகை இன்பமும் வருந்தாது பெறுவர் என்பதனைப்புலப்படுத்தி நிற்றலின் இனிதுறு கிளவி பற்றி உள்ளுறை யுவமம் தோன்றியது (தொல். உவம. 28, பேர்.)

     5-6 ஆடி: முதற் குறையை உடைய சொல் குறிப்பினாற் பொருளறிவித்தது (நன்.268, மயிலை.) 4-6.கண்ணாடிப்பாவை தன்னைச் சேர்ந்தவர் செயலாயே இருக்கும் (சீவக. 2327, ந.)

    மு. காமக்கிழத்தியர் தலைவனை இகழ்ந்தது (தொல்.கற்பு.10,இளம்.)இல்லிடத்திருந்து தலைவனும் தலைவியும் ஊடியும் உணர்த்தியும் செய்ததொழிலைக் கேட்டுக் காமக்கிழத்தி இகழ்ந்தது (தொல். கற்பு .10,ந); ‘இது குறுந்தொகை. புறன் உரைத்தாளெனக் கேட்ட பரத்தை தலைவனை நெருங்கித் தலைவன் பாங்காயினர் கேட்ப உரைத்தது; இது (மருதத்திற்கு) 2 முதுவேனில் வந்தது’ (தொல். அகத். 8.ந.)

    ஒப்புமைப் பகுதி1.கழனி மா: “கொக்கார் வளவய லூர’’ (பழ. 18); "கொக்கார் வளவய லூரன்’’ (கைந்நிலை ,48) மாத்துத் தீம்பழம்: "தேக்கொக்கு”, "பால்கலப் பன்ன தேக்கொக்கு’’ (குறுந்.26:6, 201:2); ‘’கொக்கினுக் கொழிந்த தீம்பழம்’’ (நற். 280:1.) மாம்பழம் விளைந்து உகுதல்: "நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்’’ (ஐங்.61:1); "மாவின் பழம்விழும் படப்பை யெல்லாம்"(தே. திருநா. திருவலம்புரம்)

    2. கதூஉம்: "கெண்டை கதூஉம்’’ (குறுந்.91:2.); "நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சிப,் பூக்கதூஉ மினவாளை” (புறநா.18:7-8.) 1-2. மாம்பழத்தை வாளை உண்ணல்: "கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு, துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்’’ (குறுந்.164:1-2); "வனமாவி னிருங்கனி யுண்டுமதர்த், தினவாளை யிரைத்தெழுகின்றன காண்’’ (சூளா.சீயவதைச்.231);"வண்டுறை மருங்கினாங்கோர் மாங்கனி வீழ்தல் கண்டே... வென்றொருவாளை தன்வாய்க், கொண்டுறை வலிமை நோக்கி’’ (வி.பா. திரௌபதிமாலை.13.)

    4-5. ஆடிப் பாவையின் இயல்பு: "ஆடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான்’’ (சீவக. 957); "கண்ணாடி யனைய நீர்மைப், பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே’’ (திருவாரூர் மும்மணிக்.19:17-8)"மாற்றிரி, ஆடிப் பாவையோ டலர்நிழற் பாவை, கைகான் மெய்பிறிதெவையும் பைபயத், தூக்கிற் றூங்கி மேக்குயர் புயர்தல்’’(ஞானமிர்தம்,6:20-23); "ஆடிவந்த நற்பாவை போலடியார், கூடவிளையாடி வந்த கோமானே (தமிழ்விடு.252.) 6. மேவன செய்தல்: குறள்.1073. புதல்வன் தாய்: குறுந்.359:6; ஐங்.90:4, 405:4, 442:5; அகநா.6:13 கருத்து ஒப்பு: அகநா.166. கருத்து

(8)
 1.  
அகநா. 6:15 உரை