(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட பரத்தை அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)
 80.    
கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப் 
    
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி 
    
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ  
    
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர 
5
நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி 
    
முனையான் பெருநிரை போலக்  
    
கிளையொடுங் காக்கன் கொழுநன் மார்பே. 

என்பது தலைமகட்குப் பாங்காயினார் (பி-ம். பாங்காயினாள்) கேட்பப் பரத்தை சொல்லியது.

ஒளவையார். (பி-ம். அவ்வையார்.)

    (பி-ம்) 2. ‘விரத்திவிரும்பி’, ‘விருந்திறை’, ‘விருந்தின்றி’, ‘விருந்தினர்’ 3. ‘தானமஃது’ 5. ‘லெழுநி’ 6. ‘முளையான்’ 7. ‘கிளையொடு நுகர்கதன்’.

    (ப-ரை.) யாம்-, கூந்தல் - எம் கூந்தற்கண், ஆம்பல் முழுநெறி அடைச்சி - ஆம்பலினது புறவிதழொடித்த முழுப் பூவைச் செருகி, பெரு புனல் வந்த - வெள்ளம் வரப்பெற்ற, இரு துறை விரும்பி - பெரிய நீர்த்துறையை விரும்பி, அஃது அயர்கம் - அப்புனல்விளையாட்டைச் செய்வேமாகி, சேறும் - செல்வேம்; தான்- தலைவி, அஃது - அங்ஙனம் யாம் தலைவனுடன் விளையாடுதலுக்கு, அஞ்சுவது உடையள் ஆயின் - அஞ்சுவாளானால், வெ போர் - வெவ்விய போரில், நுகம் பட கடக்கும் - பகைவரை நடுநிலை யுண்டாகும்படி வஞ்சியாது எதிர்நின்று கொல்லும், பல் வேல் எழினி - பல வேற்படையையுடைய எழினியென்னும் உபகாரியினது, முனை ஆன் பெருநிரை போல - போர் முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல, தன் கொழுநன் மார்பு - தன் கணவனது மார்பை, கிளையொடும் காக்க - பாங்காயினாரோடும் பாதுகாப்பாளாக.

     (முடிபு) யாம் துறை விரும்பிச் சேறும்; தான் அஞ்சுவதுடையளாயின் கொழுநன் மார்பைக் காக்க.

     (கருத்து) தலைவன் என்னுடைய விருப்பப்படியே ஒழுகுவானே யன்றித் தலைவி விரும்பியவாறு ஒழுகான்.

     (வி-ரை.) முழு நெறி - புறவிதழ் ஒடித்த முழுப்பூ (புறநா. 116:2, உரை); இதழொடியாத பூவெனினுமாம் (சிலப். 2:34, அடியார்.) அடைச்சுதல் - செருகுதல் (சிலப். 14:77, அடியார். ) பெரும்புனல் - வெள்ளம். தலைவன் பரத்தையரொடு நீர் விளையாடுதல்,

  
“யாறுங் குளனுங் காவு மாடிப் 
  
 தியிகந்து நுகர்தலு முரிய வென்ப”    (தொல். கற்பு. 50) 

என்பதனாலும் அதன் உரையாலும் உணரப்படும்.

    வெம் போர் - தான் விரும்பும் போரெனினுமாம்; வீரர் போரை விரும்பியிருத்தல், “போரெனிற் புகலும் புனைகழன் மறவர்” (புறநா. 31:9) என்பதனாற் பெறப்படும். நுகம் - நுகத்தின் தன்மை; நடுவு நிலை; இங்கே ஆகுபெயர். நுகம்பட - வலியுண்டாக வென்பர் நச்சினார்க்கினியர் (மலைபடு. 87.) எழினி - அதியமான் அஞ்சி. தன்நாட்டுப் பசுக்களைப் பகைவர் கொண்டு சென்றாராக அவரொடு பொருது அப்பசுக்களை எழினி மீட்டுக் காத்தான்; 1. இவ்வரலாறு,

  
“சில்பரிக் குதிரைப் பல்வே லெழினி 
  
 கெடலருந் துப்பின் விடுதொழின் முடிமார் 
  
 கனையெரி நடந்த கல்காய் கானத்து  
  
 வினைவ லம்பின் விழுத்தொடை மறவர் 
  
 தேம்பிழி நறுங்கண் மகிழின் முனைகடந்து 
  
 வீங்குமென் சுரைய வேற்றினந் தரூஉம்” 
  
“நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி 
  
 கடுமுனை யலைத்த கொடுவி லாடவர் 
  
 ஆகொள் பூசலின்” (அகநா. 105:10-15, 372:9-11) 

என்பவற்றாலும் உணரப்படும்.

    எழினி தனக்குரிய நிரையைக் கைக்கொண்ட பகைவரிடத்திலிருந்து அதனை மீட்டுக் காத்தாற்போல, தலைவி தனக்குரிய தலைவன் மார்பைக் கைக்கொண்ட எம்மிடத்திலிருந்து அதனைப் பெற்றுக் காப்பாளாக வென்று உவமையை விரித்துக் கொள்க.

    தலைவி தன்னைக் குறைகூறினாளென்று கேட்டவளாதலின் பரத்தை சினங்கொண்டு, “யாம் நீர்விளையாடச் செல்வேம்; தலைவன் தானே எம் வயப்பட்டு வருவான். அவனை வாராமற் காக்கும் வன்மை தலைவிபால் உளதாயின் அவள் காப்பாளாக” என்று எள்ளல் தோன்றக் கூறினாள். தலைவி அங்ஙனம் காக்கும் வலியிலளென்பது அவள் நினைவு. தலைவிக்குப் பாங்காயினார் கேட்பக் கூறுபவளாதலின் அவர் நெஞ்சிற் படவும் கூறுவாளாகி, ‘கிளையொடும் காக்க’ என்றாள்; ‘கிழத்தியைச் சுட்டாவெனவே, பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையுமென்ப தாயிற்று’ (தொல். செய். 199, பேர்.) ஏகாரம், அசைநிலை.

    (மேற்கோளாட்சி) மு. புனல்விளையாட்டின்கண் காமக்கிழத்தியர் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 10, இளம், ந.)

    ஒப்புமைப் பகுதி 1. மு. ஆம்பல் முழுநெறி: அகநா. 156:9; நற்.113; சிலப். 2:14, 14:75-7. 1-2. புனல் விளையாட்டும் பூவை அடைச்சுதலும்; “புனலாட் டமர்ந்து, தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும், கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற வடைச்சி” (சிலப். 14:75-7).

    5. நுகம்படக்கடக்கும்: மலைபடு. 87. பல்வேல்: குறுந். 11:6, ஒப்பு. பல்வேல் எழினி: அகநா.105:10. வேல் எழினி: புறநா. 158:8-9, குறிப்புரை.

    6. முனையான் பெருநிரை: “முனையூர்ப், பல்லா நெடுநிரை” (நற். 100:7-8); “முனையா” (அகநா. 35:5); “அடையார் முனையலற

    வையிலைவேற் காளை, விடையாயங் கொள்கென்றான் வேந்து” (பு.வெ.1.) 6-7.நிரைகாத்தல்: “ஆதந் தோம்பல்” (தொல். புறத்.2)

    7. கொழுநன் மார்பைக் காத்தல்: “மார்புநனி விலக்க றொடங்கி யோளே” (ஐங்.42:4). கிளையொடுங் காத்தல்: “நின் கிளையொடு போகென்று தத்தம், கொழுநரைப் போகாமற் காத்து” (கலி. 109:25-6.)
 மு 
“அரியார் மதர்விழி யாயமுந் தானு மகன்றுறைவாய்  
  
 விரியார் கருங்கழன் மன்புறங் காப்பினு மென்புறமே 
  
 புரியா தொழுகுவ னேலழி யாத புகழ்படையாக் 
  
 கரியார் திருவிற் றரியா துடைகவென் கைச்சங்கமே"    (அம்பிகாபதிகோவை, 476) 
(80)
 1.  
இச்செய்தி இப்பொழுது கிடைக்கும் தகடூர் யாத்திரைச் செய்யுட்களாலும் வலியுறப் பெறுகின்றது.