(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)
 82.    
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்  
    
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார் 
    
யாரா குவர்கொ றோழி சாரற் 
    
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற் 
5
கொழுங்கொடி யவரை பூக்கும் 
    
அரும்பனி யச்சிரம் வாரா தோரே. 

என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகள், வருவரென்று வற்புறுத்துந் (பி-ம். வற்புறுத்தித்) தோழிக்குச் சொல்லியது.

கடுவன் மள்ளன்

    (பி-ம்) 3. ‘தோழி காழகிற்’ 6. ‘யற்சிரம்’.

    (ப-ரை.) (ப-ரை.) தோழி-, சாரல் - மலைப்பக்கத்திலுள்ள, பெருபுனம் குறவன் - பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது, சிறு தினை மறு கால் - சிறிய தினையரிந்த மறு காலிடத்தில், கொழு கொடி அவரை பூக்கும் - கொழுவிய அவரைக் கொடி மலர்கின்ற, அரு பனி அச்சிரம் - பொறுத்தற் கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும், வாராதோர் - வாராத தலைவர், வார் உறு வணர் கதுப்பு உளரி - நீட்சியை யுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து, புறம் சேர்பு - முதுகைச் சார்ந்து, அழாஅல் என்று - அழுதலை யொழி யென்று கூறி, நம் அழுத கண் துடைப்பார் - நம் அழுத கண்ணீரை முன்பு துடைப்பார்; இப்பொழுது, யார் ஆகுவர் - எத்தன்மையை உடையராவரோ?

    (முடிபு) தோழி, வாராதோர், முன்பு துடைப்பார்; இப்பொழுது யாராகுவர்கொல்?

    (கருத்து) தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) தான் பிரியுங்கால் தலைவி வருந்துதலை அறிந்த தலைவன் அவள் கூந்தலை உளரியும் கண்ணீரைத் துடைத்தும் தலையளி செய்து பிரிந்தானாதலின் அச்செயல்களை நினைந்து, “அங்ஙனம் செய்த தலையளியை யுடையார் இன்னும் வாராமல் அயற்றன்மை யுடையராயினர்!” என்று வருந்தினாள். தோழி, தலைவன் பிரியுங்கால் செய்த தலையளியை நினைவுறுத்தி வற்புறுத்தினாளாக, “அங்ஙனம் செய்யினும் இப்பொழுது வாராமையால் அவர் தன்மை வேறுபட்டது போலும்!” என்னும் கருத்துப் படக் கூறினாள்.

    யாரென்றது நம்மோடு தொடர்பிலரென்னும் நினைவிற்று. குறவனுக்குரிய சிறுதினை, தினைக்கதிரை அரிந்தபின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்; அதனை மறுகாலென்பர்; அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது. அவரை யென்றது இங்கே மொச்சையை.

    கொல், ஏ: அசைநிலைகள்.

    அச்சிரம் அவர் வாராமையின் பொறுத்தற்கரியதாயிற்று. அவர்வரின் அரியதாகாது; இந்நூல் 68-ஆம் செய்யுளைப் பார்க்க.

     குறவன், ஒருமுறை யறுத்த கதிராற் பயன் பெற்றதன்றிப் பின்னும் மறுகாலிற் கிளைக்கும் கதிராலும் அதனோடு அவரையினாலும் பயனைப் பெறுதற்குரிய அச்சிரமென்றது, தலைவன் முன் இன்புற்றதன்றி மீண்டும் இப்பொழுது வந்து என்பாற் பெறும் இன்பத்தையும் செய்வினை முடித்த இன்பத்தையும் பெறுதற்குரியனென்னுங் குறிப்பினது.

    ஒப்புமைப் பகுதி 1. தலைவன் தலைவியின் கூந்தலை அழகுபடுத்தல்: நற்.214:4-5. வாருறு வணர்கதுப்பு: “வாருறு வணரைம்பால்” (கலி. 58:1.) வணர் கதுப்பு: “வணர்சுரி யைம்பாலோய்” (சிலப். 7:31). கதுப்பு உளர்தல்: “ஒலியல் வார்மயி ருளரினள் கொடிச்சி” (அகநா. 102: 5 ). கதுப்பு - பெண்பால் மயிர்; குறுந். 190:1, 246:6, 312:6; குறள். 1105, உரை. தலைவன் தலைவியின் கூந்தலை உளர்தல்: “நெரிகுரற், சாந்தார் கூந்த லுளரி..... மனைவயினிருப்பவர்” (அகநா. 389:1-10). தலைவன் தலைவியின் புறஞ்சேர்தல்: “தாழிருங் கூந்தலென் றோழியைக் கைகவியாச், சாயலின் மார்பன் சிறுபுறஞ் சார்தர” (கலி. 42:29-30); “நங் காதலி, உயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே”, “சிறுபுறங் கவையின னாக” (அகநா. 19:18-9, 26:23, 32:9.).

    2. அழாஅல்: குறுந். 135:4 தலைவன் தலைவியினது கண்ணீரைத் துடைத்தல்: (குறுந். 4:2); “பன்னாள், அழுதகண்ணீர் துடைத்த கை” (தண்டி. 114, மேற்.) தலைவனது பிரிவால் தலைவி அழுதல்: குறுந். 11:2, 22:1, 307:9, 357:1-2, 365:2; ஐங். 18:3 - 4 , 334:5, கலி.70:11. 4-5.சிறுதினை மறுகாலில் அவரை படர்தல்: “கொய்பத முற்றன குலவுக்குர லேனல், விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக் கிருவிதொறும், குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை” (மலைபடு. 108-10); “சிறுதினை கொய்த விருவி வெண்காற், காய்த்த வவரை” (ஐங்.286: 1-2); ‘‘அவரை பொருந்திய பைங்குர லேனல்’’ (ஐந். எழு. 1-2). அவரை மறுகாலில் விளைதல்: ஐங். 286:1-2; கலி. 139. 6. அரும்பனி யச்சிரம்; குறுந். 68:3, ஒப்பு. 5-6.அச்சிரக்காலத்தில் அவரை பூத்தல்: “ அவரைப் பைம்பூப் பயில..... சிதர்சினை தூங்கு மற்சிர வரைநாள்” (அகநா. 294:9-11).

(82)