(ப-ரை.) உள் ஊர் குரீஇ - ஊரினுள் இருக்கும் குருவியின், துள்ளு நடை சேவல் - துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, சூல் முதிர் பேடைக்கு - கருப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு, ஈன் இல் - பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை, இழைஇயர் - அமைக்கும் பொருட்டு, தேம் பொதி கொண்ட - தேன் பொதிதலைக் கொண்ட, தீ கழை கரும்பின் - இனிய கோலை உடைய கரும்பினது, நாறா வெண் பூ - மணம் வீசாத வெள்ளிய பூவை, கொழுதும் - கோதியெடுக்கும், யாணர் ஊரன் - புதுவருவாயை உடைய ஊருக்குத் தலைவன், பாணன் வாயே -பாணனது சொல்லின் அளவில், யாரினும் இனியன் - எல்லாரினும் இனிமையை உடையான்; பெரு அன்பினன் - தலைவியின்பாற் பெரிய அன்பினை உடையான்; உண்மையில் அங்ஙனம் இலன்.
(முடிபு) ஊரன், பாணன் வாயே இனியன்; பேரன்பினன்.
(கருத்து) பாணன் தலைவனைப் புகழினும் தலைவன் அன்பிலன்.
(வி-ரை.) அன்பினனே: ஏகாரம் அசைநிலை. உள்ளூர் - ஊருள்; முன்பின் மாறியது. குரீஇ - குருவி; இந்நூல் 72-ஆம் செய்யுள் 5 -ஆம் அடியின் விசேடவுரையைப் பார்க்க. துள்ளு நடைச்சேவலென்றது அதன் ஊக்கத்தைப் புலப்படுத்தியது; சேவலுக்குத் துள்ளுநடை கூறினமையின் சூன்முதிர் பேடை ஓய்ந்த நடையினதென்பதும் பெறப்படும். ஈன் இல் - முட்டையை ஈனும் இடம். அது மெத்தென விருத்தல் வேண்டுமாதலின் கரும்பின் பூவைச் சேவல் கொழுதியது.
தேம் பொதி - தேனடையுமாம்; தேம் - தேன்போலும் இனிய சாறு எனலும் ஆம். தீங்கழை - சுவையினிமையையுடைய கோல். நாறாமை கரும்பின் பூவிற்கு இயல்பு. வேறொன்றிற் செல்லவொட்டாமல் தடுத்துத் தன்னையே உண்ணச் செய்யும் தேம்பொதியை உடையதேனும் அதன்பாற் செல்லாது தன் கருமமே கண்ணாகிப் பூக்கொழுது மென்றது அச்சேவலின் பேரன்பைப் புலப்படுத்திப் பறவையினங்களும் அன்பு பாராட்டும் ஊரையுடையான் தான் அவ்வியல்பு பெற்றில னென்னும் நினைவை வெளிப்படுத்தியது.
வாயே : ஏகாரம் பிரிநிலை; வாயே - வாயில் மட்டும்; “நின்வாய், மெய்கொண்ட வன்பின ரென்பதென்” (திருச்சிற். 386) என்பதன் உரையிலுள்ள, ‘நின்வாயில் அவர் விள்ளா அருள் பெரிய ரன்றோ வென்று உரைப்பினும் அமையும்’ என்னும் பகுதியைக் காண்க. வாய்: ஆகுபெயர்.
பாணன், “தலைவன் யாரினும் இனியன்; பேரன்பினன்” எனக் கூறக் கேட்ட தோழி அவனது சொல்லால் மட்டும் தலைவன் அங்ஙனம் இருத்தலையன்றிச் செயலில் இலனென்னும் கருத்துப் படக் கூறினாள். இங்ஙனம் தலைவனது அன்பின்மையைக் குறிப்பாற் கூறினமையின் வாயின் மறுத்தாளாயிற்று.
இனிய தேனடையும் தீங்கழையும் உளவாகவும், மணமும் நன்னிறமும் இல்லாத கரும்பின் பூவைக் குருவி கொழுதும் ஊரனென்றது, அறத்தோடு பொருந்திய இன்பத்தைத்தரும் தலைவி உளளாகவும் அவள் பாலன்பின்றி, அன்பும் கற்பும் இல்லாத பரத்தையரைத் தலைவன் விரும்பினானென்னும் குறிப்பினது; “பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற், கழனி யூரன்” (ஐங். 4) என்பதன் உரையில் அதன் உரையாசிரியர், ‘பூத்துப் பயன் படாக்கரும்பினையும் காய்த்துப் பயன்படும் (நெல்லினையு முடைய ஊரனென்றது, ஈன்று பயன்படாப்) பொதுமகளிரையும் மகப்பயந்து பயன்படுங் குலமகளிரையும் ஒப்ப நினைப்பான் என்றவாறு’ என்றெழுதிய பகுதி இங்கே கருதற்குரியது.
பாணன் பொய் கூறினன் ஆதலின் அவன்பால் வெகுட்சி உற்ற தோழி அவனை முன்னிலைப்படுத்திக் கூறுதலையும் விரும்பாளாகிப் படர்க்கையில் உணர்த்தினாள்.
(மேற்கோளாட்சி) 2. பறவையின் ஆண்பாற்கெல்லாம் சேவலென்னும் பெயர் உரியது (தொல். மரபு. 48, பேர்).
ஒப்புமைப் பகுதி 1. பேரன்பினன்: குறுந்.37:1, ஒப்பு. 4. தீங்கழைக் கரும்பு: மலைபடு. 119. கரும்பில் தேனடை இருத்தல்: “கரும்பிற் றொடுத்த பெருந்தேன்” (சிலப். 10:82); “அறையுறு கரும்பினணிமடற் றொடுத்த, நிறையுறு தீந்தேன்” (பெருங். 1.48:146-7); “தீங்கரும் பெருத்திற் றூங்கி யீயின்றி யிருந்த தீந்தேன்”, “கரும்பின்மேற் றொடுத்ததேன்” (சீவக. 712, 1936). 3-4. குருவிச் சேவல் இல் இழைத்தல்: “மனையுறை குரீஇக் கறையணற் சேவல், பாணர் நரம்பின் சுகிரொடு வயமான், குரற்செய் பீலியி னிழைத்த குடம்பை” (புறநா. 318:4-6.) 5. பூக் கொழுதுதல்: குறுந். 243:2. 4-5. கரும்பின் நாறாப்பூ: “நாற்றங் கொள்ளப்படாத கரும்பின் பூ’ (ஐங்.91, உரை); “தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி, தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு” (நாலடி. 199).
கரும்பின் வெண்பூ: நற். 366:7-8; புறநா. 35:10. 2-5.குருவிச் சேவல் கருப்பம்பூவாற் பேடைக்கு ஈனில் இழைத்தல்: “கரும்பின், வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி, முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை” (நற். 366:7-9); ‘‘சூன்முதிர்துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல் செய்வான், தேன்முதிர் வேழத்தின் வெண்பூக் குதர் செம்மல் ஊரன்’’ (திருச்சிற். 369); “மனையுறை குருவி வளைவாய்ச் சேவல், சினை முதிர் பேடைச் செவ்வி நோக்கி, ஈனில் இழைக்க வேண்டியானா, அன்புபொறை கூரமென்மெல முயங்கிக், கண்ணுடைக் கரும்பினுண்டோடு கவரும், பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை, வருபுனலூரன்” (பதினோராந். திருவாரூர் மும்மணிக். 19).
பறவைகள் பூவாற் கூடு கட்டுதல்: சீவக. 65.
(85)